நுழைவு தேர்வு இல்லாமல் சென்னை ஐஐடியில் சேரலாம்.. !
பைல் படம்
டேட்டா சயின்ஸ் எப்போதும் தரவு அறிவியில் பாடத்தில் மாணவர்கள் சேர முடியும். இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். இப்போது இந்தியளவில் டாப் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகச் சென்னை ஐஐடி இருக்கிறது. சென்னை ஐஐடியில் படித்த பலரும் இன்று தலைசிறந்த நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.
இது அந்த நிறுவனம் எந்தளவுக்கு உயர்ந்த கல்வித் தரத்தைக் கொண்டுள்ளது என்பதையே காட்டுகிறது. பொதுவாக ஐஐடிக்களில் சேர வேண்டும் என்றால் JEE என்ற தேர்வை எழுத வேண்டும். இதற்கிடையே சென்னை ஐஐடி நுழைவுத் தேர்வு இல்லாமல் அங்குச் சேரும் வாய்ப்பு அளிக்கிறது.
இந்த கோர்ஸ் மட்டுமே இத்தகைய வாய்ப்பை அளிக்கிறது. அங்கே இணைய வழியில் நடத்தப்படும் டேட்டா சயின்ஸ் எனப்படும் தரவு அறிவியல் படிப்பிற்குத் தான் இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. சென்னை ஐஐடியில் 2020ஆம் ஆண்டு முதல் இந்த இணைய வழி தரவு அறிவியல் படிப்பு கற்பிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய பேட்ச்களில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் இதில் படித்து வருகின்றனர்.
சர்வதேச அளவில் வளர்ந்து வரும் முக்கிய படிப்புகளில் ஒன்றாக இந்த டேட்டா சயின்ஸ் இருக்கிறது. வரும் காலத்தில் இந்த துறையிலேயே அதிகப்படியான வேலைவாய்ப்புகள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வரும் 2023க்குள் இந்த துறையில் உலகெங்கும் பல லட்சம் வேலைவாய்ப்புகள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த படிப்பில் சேர மாணவர்களிடையே ஆர்வம் அதிகமாகவே இருக்கிறது.
இந்த படிப்பிற்கான மாணவர்களைத் தேர்வு செய்யத் தனியாக ஒரு செயல்முறை பின்பற்றப்படுகிறது. 11ஆம் வகுப்பு படித்து முடித்தவர்களும் இதில் சேரலாம். இதன் மூலம் அவர்கள் +2க்கு செல்லும் முன்னரே ஐஐடியில் தங்கள் இடத்தை உறுதி செய்யலாம். அதேபோல +2 படிப்பவர்களும் கூட இதில் சேரலாம்.
மாணவர்களைத் தேர்வு செய்யும் இந்த செயல் முறை என்பது தகுதித் தேர்வில் இருந்து வேறுபட்டது. இதில் மாணவர்களுக்கு பல்வேறு பாடங்களில் சென்னை ஐஐடியில் 4 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும். பின்னர், அவர்களுக்கு கற்றுத் தரப்பட்டதை வைத்துத் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வைத் தேர்ச்சி பெற்றால் போதும் மாணவர்கள் இதில் சேரலாம்.
இதில் ரேங்கிங் எல்லாம் எதுவும் இல்லை. குறிப்பிட்ட கட்-ஆப் -பை தாண்டும் அனைவரும் இந்தப் படிப்பில் சேர முடியும். பள்ளியில் எந்த பாடத்திட்டத்தை எடுத்தவர்களும் கூட இதில் சேரலாம் என்பது இதில் இருக்கும் கூடுதல் சிறப்பாகும்.
இணைய வழியில் நடத்தப்படும் இந்த கோர்ஸில் பாடங்கள் ஒவ்வொரு வாரமும் இணையத்தில் பதிவிடப்படும். தேர்வு எழுத மட்டும் நேரில் சென்று தேர்வு மையங்களில் மாணவர்கள் தேர்வை எழுத வேண்டும். ஓராண்டு சான்றிதழ் படிப்பு, ஈராண்டு பட்டயப் படிப்பு, இளநிலை என மூன்று வகையான படிப்புகள் உள்ளன. மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இதில் படிக்கலாம். இந்த பாடத்தில் சேர விரும்பும் மாணவர்கள் https://onlinedegree.iitm.ac.inஎன்ற தளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். செப். 2023இல் தொடங்கும் பேட்சுக்கு வரும் ஜூன் 14ஆம் தேதி முதல் மேலே குறிப்பிடப் பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்பிக்கலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu