தமிழகத்தில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ஏன் நிதியமைச்சர் ஆனார்? தலைநிமிரும் தமிழக பொருளாதாரம்

தமிழகத்தில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ஏன் நிதியமைச்சர் ஆனார்? தலைநிமிரும் தமிழக பொருளாதாரம்
X

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவரது மனைவி மார்கரெட் தியாகராஜன், மகன்கள் பழனி தியாகராஜன், வேல் தியாகராஜன்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை,நிதி அமைச்சராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்தது சாதாரணமாக அல்ல என்பது தற்போது வெளிச்சமாகிறது.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் என்பவரை ஒரு நிதியமைச்சராக மட்டுமே பலருக்கு தெரிந்திருக்கும். அவர் ஏன் நிதியமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்? அவர் எப்படி தமிழக நிதி நிலையை சமாளித்தார் என்பதை இந்த கட்டுரை மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

டாக்டர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தமிழகத்தின் அரசியல்வாதி. தற்போதைய தமிழக நிதி அமைச்சர். தற்போதைய அரசியல்வாதிகளில் அனேகமாக அவர் மட்டுமே மெத்தப்படித்த அரசியல்வாதியாக இருக்கலாம். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதித்துறைக்கு ஒரு சரியானவரை தேர்வு செய்ததே அவரது ஆட்சிக்கு கிடைத்த முதல் வெற்றி எனலாம்.

முதலில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் தகுதிகளை பார்ப்போம் :

1. திருச்சி, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் கெமிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர்.

2. பஃபலோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் Master's degree in Operations Research and a Ph.D. in Human Factors Engineering / Engineering Psychology

3. எம்ஐடி ஸ்லோன் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் நிதி நிர்வாகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவர்.

அவரை ஆகச் சிறந்த தொழில்முறை அரசியல்வாதி என்று சொன்னால் அதுவே அவருக்கு பொருத்தமானதாக இருக்கும். இப்படி சொல்லப்பட்டதற்கும் அவரது நிதி அமைச்சர் பதவிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், தமிழ்நாட்டின் நிதியமைச்சராகப் பதவியேற்றப் பின்னர் தனது கடமைகளை முறையாக செய்ய,அவர் எடுத்துக்கொண்ட முனைப்பும் அவரிடம் இருந்த தொழில்முறைத் திறனும்தான் காரணம்.

பொருளாதார ஆலோசனைக்குழு :

தமிழ்நாட்டின் நிதி அமைச்சராக பொறுப்பேற்றப்பின் நிதி நிலைமையை சமாளிக்க, நிதி நிலையை சீர்படுத்த அவர் எடுத்த சில முக்கியமான நடவடிக்கைகள் அவரது நுணுக்கமான அறிவையும் தெளிவான அணுகுமுறையையும் நமக்குப் புலப்படுத்தும். தமிழகத்தின் பொருளாதார நிலையை மீட்டெடுக்க, கொரோனா தொற்றுக்குப் பிந்தைய மோசமான நிதி நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு, நிதித்துறையில் நிபுணத்துவம் பெற்ற பொருளாதார வல்லுநர்களை உள்ளடக்கி, ஒரு பொருளாதார குழுவை உருவாக்கியது. அந்த குழு தமிழகத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, செய்யப்படவேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்கும். இந்த பொருளாதார ஆலோசனைக் குழுவை உருவாக்குவதற்கு மூலக்காரணமாக இருந்தவர் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.

அந்த பொருளாதார ஆலோசனைக்குழுவில் :

1. ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்

2. அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் வறுமை ஒழிப்பு மற்றும் மேம்பாட்டு பொருளாதாரப் பேராசிரியரான எஸ்தர் டஃப்லோ. இவர் நோபல் பரிசு பெற்றவர்.

3. முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்

4. பொருளாதார நிபுணரும் ராஞ்சி பல்கலைக்கழக விசிட்டிங் பேராசிரியரும், டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் கெளரவப் பேராசிரியருமான ஜீன் டிரேஸ்.

5. முன்னாள் நிதி செயலாளர் எஸ்.நாராயணன் போன்ற வல்லுநர்கள், அந்த பொருளாதார ஆலோசனைக் குழுவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மோசமான பொருளாதார நிலை :

திமுக அரசு பொறுப்பேற்றபோது தமிழகத்தின் நிதிநிலை மிக மோசமாக இருந்தது. தமிழக நிதிநிலையை மீட்டெடுக்கவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனிடம் தரப்பட்டிருக்கிறது. அதற்கு தமிழகத்தின் பொருளாதார நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று முடிவு செய்து பதவியேற்ற சில மாதங்களிலேயே, தமிழக அரசின் பொருளாதார நிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.

முந்தைய அரசுகளின் நிதி முறைகேடு மற்றும் தமிழகம் செலுத்த வேண்டிய கடன் மற்றும் அதற்கு செலுத்தவேண்டிய வட்டித் தொகை போன்றவை வெள்ளை அறிக்கையில் காட்டப்பட்டிருந்தது. சீர்குலைந்துபோயுள்ள தமிழ்நாட்டின் பொருளாதார நிலையை எவ்வாறு மீட்டெடுக்கலாம், அதற்கான சீர்திருத்தங்களை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்ற திட்டத்தின் முதல்படிதான் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அமைத்த பொருளாதார ஆலோசனைக்குழு.

சிறந்த அரசியல் நடவடிக்கை :

அரசியலில் ஒருவரை ஒருவர் குறைகூறி பழிவாங்கும் எண்ணத்தில் செயல்பட்டு வரும் இந்த காலகட்டத்தில், அவர் தமிழகத்தின் தற்போதைய நிலைமையை முழுமையாக ஆய்வு செய்து, அந்த நிலைமையை சமாளித்து அதிலிருந்து வெளியே வருவதற்கான உத்தியை கையாள்கிறார். சமீப காலத்தில் எடுக்கப்பட்டுவரும் சீர்திருத்த நடவடிக்கைகள், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் அரசியலுக்கு அப்பாற்பட்ட குணங்களை வெளிப்படுத்துவதாக உள்ளது.

அவர் உயர் கல்வி கற்றவர். நிதித்துறையில் செறிவான அறிவை அவர் பெற்றிருந்தாலும், மக்களின் நலன்களுக்காக பல துறை நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும் தயாராக இருக்கிறார். இப்படியான அவரது செயல்பாடுகள், அவர் ஏற்றிருக்கும் பதவியின் கண்ணியத்தை காட்டுகிறது. அவரது தலையாய கொள்கை அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் பொருளாதார நிலையை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என்பதே. தமிழகத்தின் பொருளாதார நிலை மேம்பட அவர் பெருமளவில் பங்களிப்பார் என்பது நிச்சயமே. தலை நிமிரும் தமிழக பொருளாதாரம்.

குடும்பம் :

அவர் தன்னோடு படித்த மார்கரெட் என்னும் அமெரிக்கப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் மார்கரெட் தியாகராஜன். அந்த தம்பதிகள், பழனி தியாகராஜன், வேல் தியாகராஜன் என்ற இரண்டு மகன்களுடன் மகிழ்ச்சியான குடும்பமாக வசித்து வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்