இந்த ஆண்டு சீசனில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு முதல் வெண்ணெய்க்காப்பு அலங்காரம் | Namakkal Anjaneyar Kovil
Namakkal Anjaneyar Kovil
இந்த ஆண்டு சீசனில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு முதல் வெண்ணெய்க்காப்பு அலங்காரம் | Namakkal Anjaneyar Kovil
நாமக்கல்,
குளிர்காலம் துவங்கியதால், நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு முதல் வெண்ணைக்காப்பு அலங்காரம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள, கோட்டை பகுதியில், ஸ்ரீ நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித்தாயார் கோயில் எதிரில் ஒரே கல்லினால் 18அடி உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு இரவு பகல் 24 மணி நேரமும் அருள் பாலித்து வருகிறார். தினசரி காலையில் ஆஞ்சநேயருக்கு 1,008 வடை மாலை அலங்காரம் நடைபெறும். பின்னர், நல்லெண்ணெய், சீயக்காய், திருமஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் சந்தனம், உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். கனகாபிசேகத்துடன் அபிசேகம் நிறைவு பெற்று, பகல் 1 மணியளவில் சுவாமிக்கு தங்கக் கவசம், வெள்ளிக்கவசம், முத்தங்கி, மலர் அங்கி முதலிய அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெறும்.
கட்டளைதாரர்களின் விருப்பத்தின் பேரில் மாலையில் சந்தனக்காப்பு மற்றும் வெண்ணெய்க்காப்பு அலங்காரம் மற்றும் தங்கத்தேர் நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் குளிர் சீசன் துவங்கியதும், கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் கட்டளைதாரர்கள் மூலம் சுவாமிக்கு வெண்ணெய்க்காப்பு அலங்காம் நடைபெறும். இந்த ஆண்டு சீசனில் முதல் வெண்ணெய்க்காப்பு அலங்காரம் நேற்று நடைபெற்றது. மாலை சுமார் 5 மணிக்கு துவங்கிய அலங்காரம் இரவு 8 மணிக்கு இந்த நிறைவு பெற்றது. சுமார் 120 கிலோ வெண்ணெய் மூலம் சுவாமியின் உடல் முழுவதும் பட்டாச்சாரியார்கள் அலங்காரம் செய்தனர். பின்னர் திரை விலக்கப்பட்டு மகா தீபாராதணை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் செயல் அலுவலரும், அறநிலையத்துறை உதவி கமிஷனருமான இளையராஜா மற்றும் பணியாளர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu