சிந்திக்க மறந்த பகுத்தறிவு பகலவன் வாரிசுகள்
கோவை மாவட்டம், பாலத்துறையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர், படத்தின் கீழ் ஒரு சீப் வாழைப்பழத்தை வைத்து விட்டு, உடன்பிறப்புகள் சென்று விட்டனர்
தமிழகத்தின் முதலமைச்சராக 5 முறை பதவியில் இருந்தவர் கருணாநிதி. இவருக்கு பிறகு, தி.மு.க கட்சிக்கு தலைவராக இவரது மகன் மு.க. ஸ்டாலின் வழிநடத்தி வருகிறார்.
கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க பெரும்பான்மை வெற்றி பெற்று, ஸ்டாலின் முதலமைச்சர் ஆனார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க கட்சி செல்வாக்கை நிரூபித்தது. இந்த சூழலில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை ஜூன் 3 ஆம் தேதி தமிழகம் முழுவதும் வெகு கோலாகலமாக கொண்டாடினர்.
கருணாநிதி உருவப்படத்தை நகரம் மற்றும் கிராமங்களின் முக்கிய சந்திப்பு பகுதிகளில் வைத்து, மாலை அணிவித்தும், கொடியேற்றியும் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினர்.
கோவை மாவட்டம், மதுக்கரை மேற்கு ஒன்றியத்திற்கு உள்பட்ட பாலத்துறை ஊராட்சியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்படத்திற்கு அப்பகுதி தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து அவரது படத்தின் கீழ் ஒரு சீப் வாழைப்பழத்தை வைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
கடவுள் மறுப்பு கொள்கைகளையும் மத சம்பிரதாயங்களையும் கடுமையாக சாடியவர் பெரியார். ஆனால் அவரது கொள்கை வழியில் நடப்பதாக கூறும் தி.மு.க.வினர் வாழைப்பழங்களை அப்பகுதியில் உள்ள ஏழைகள் யாருக்காவது கொடுத்து இருந்தால் அவர்கள் பசி ஆறி இருக்கும்.
ஆனால் படத்திற்கு கீழேயே வைத்து சென்றதால் சூரிய வெப்பத்தில் பழங்கள் காய்ந்தபடி இருந்தது வேதனையை ஏற்படுத்தியது. அதே சமயத்தில் பகுத்தறிவு பகலவன் வாரிசுகள் ஏழைகள் நிலையை உணர மறந்ததும், விலை கொடுத்து வாங்கிய வாழைப்பழங்களை வீணடித்ததும் பகுத்தறிவு குறித்து கேள்வியை எழுப்பியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu