கோவையில் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 8 கல்லூரி மாணவர்கள் கைது
கொள்ளையர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை காட்டும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்
கோவை மாவட்டத்தில் செட்டிபாளையம், கோவில்பாளையம், சூலூர் ஆகிய பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் சிறப்பு தனிப்படை காவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கல்லூரி மாணவர்கள் போர்வையில் இருந்த 8 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இதில் 3 நபர்கள் மீது கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் 36 பேர்களிடம் சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைகளில் 42 திருடப்பட்ட இருசக்கர வாகனங்கள், 6 பயங்கர ஆயுதங்கள், 3 கிலோ கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”கோவை மாவட்டத்தில் புறநகரப் பகுதிகளில் மாணவர்கள் என்ற பெயரில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் இன்று காலை 250 க்கு மேற்பட்ட போலீசார் 5 குழுக்களாக பிரிந்து செட்டிபாளையம், நீலாம்பூர், சூலூர் உள்ளிட்ட இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
இதில் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. திருட்டு மற்றும் கஞ்சா விற்பனையில் தொடர்புடைய 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்குரிய 36 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். படிக்கும் காலத்தில் கல்லூரி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். போதைப் பொருட்கள் பயன்படுத்துதல், குற்றப் பின்னணி உள்ளவர்களுடன் நட்பு வைத்துக்கொண்டு பயங்கர ஆயுதங்களை பயன்படுத்துதல், கல்லூரிகளில் குழு அமைத்து ரவுடிசத்தில் ஈடுபடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரி மாணவர்களுக்கு வாடகைக்கு வீடு கொடுக்கும்போது அவர்களது முழு விவரங்களை உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
சந்தேகத்துக்குரிய நபர்களாக இருப்பின் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும். வீடு வாடகைக்கு கொடுக்கும் நபர்களை அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். கல்லூரி மாணவர்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சோதனை சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடைபெறுகின்றன. கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டத்தின் கீழ் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தொடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். மாநில எல்லைகளில் உள்ள 14 சோதனை சாவடிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu