வில்லனாக நடிக்க முடிவெடுத்த கேப்டன் விஜயகாந்த்

வில்லனாக நடிக்க முடிவெடுத்த கேப்டன் விஜயகாந்த்
X
வறுமையின் கோரப்பிடியில் இருந்து மீ்ள்வதற்காக ஒரு கட்டத்தில் கேப்டன் விஜயகாந்த் வில்லனாக நடிக்க அட்வான்ஸ் வாங்கினார்.

1983 ஆம் ஆண்டு ஏவிஎம் தயாரித்த பாயும்புலி திரைப்படத்தில் நடிகர் ஜெய்சங்கர் நடித்த ரஞ்சித் என்ற வில்லன் கதாபாத்திரத்திற்கு வலுகூட்ட ஆக்ரோஷம் மிகுந்த நடிகர் தேவைப்பட்டது. அப்போது தான் நாயகன் பாயும்புலி பரணி கதாபாத்திரம் மிளிரும்.

வில்லன் ரஞ்சித் கதாபாத்திரத்துக்கு கேப்டன் விஜயகாந்தை 1 லட்சம் காசோலை தந்து ஒப்பந்தம் செய்துள்ளனர், கேப்டனுக்கு தன் நண்பர்கள் முதல் நாள் வாங்கிய கேரியர் சாப்பாட்டில் தண்ணீர் ஊற்றி சாப்பிடுவது என்னவோ செய்கிறது. அம்பாசடர் கார் டயர் மாற்றாமல் ஓரமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது போல பல நிதிச் சிக்கல்களால், இந்த வில்லன் வேடத்திற்கு ஒப்புத்தந்து காசோலை வாங்கி வந்து நண்பர் இப்ராஹிம் ராவுத்தரிடம் தர அவர் ,உனக்கு பைத்தியமாடா? நிச்சயம் ஜெயிப்போம்டா என திட்டி காசோலையை திரும்பத் தர செய்திருக்கிறார், அதை கேப்டன் மறந்து விட்டாலும் ஏவிஎம் மறக்கவில்லை.

இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் அப்போது ஓடும் குதிரை. நான் பாடும் பாடல் திரைப்படம் அப்படி ஓடுகிறது. அடுத்த படம் செய்யுங்கள் என தயாரிப்பாளர்கள் மொய்க்க, அவரோ எனக்கு வீடு கட்ட இரண்டு லட்சம் தருபவருக்கே அடுத்த படம் செய்வேன் என்கிறார். ஏவிஎம் பணம் 2 லட்சம் காசோலை தருகின்றனர்.

படம் பற்றி கதை பேசுகையில், நாயகன் வெள்ளைசாமிக்கு யாரை முடிவு செய்திருக்கிறீர்கள் என கேட்க, அவர் விஜயகாந்த் என்கிறார், அவர்கள் விடாப்பிடியாக மறுத்து சிவகுமாரை நடிக்க வையுங்கள் என அழுத்தம் தந்துள்ளனர். இவர் பிடிவாதமாக மறுக்க, ஏவிஎம் 2 லட்சத்தை திரும்ப கேட்கின்றனர். பஞ்சு அருணாச்சலத்திடம் கதாசிரியர் தூயவன் மூலமாக இப்படத்தின் கதையைச் சொல்ல வைத்து இக்கட்டான முன்தொகை காசோலை சூழலை விளக்குகிறார். பஞ்சு அருணாச்சலம் 2 லட்சம் காசோலை தர ஏவிஎம்மிடம் மீண்டும் தந்து விடுகின்றனர்.

இயக்குனர் நினைத்தபடியே விஜயகாந்த் வெள்ளைச்சாமி கதாபாத்திரம் செய்கிறார். வைதேகி காத்திருந்தாள் இசைஞானி இசையில், விஜயகாந்துக்கு பாடகர் ஜெயசந்திரனின் குரல் அப்படி பொருந்திப்போய், பட்டி தொட்டிகளில் எல்லாம் ஒலித்து ஏகோபித்த விளம்பரமாகிப் போனது, படம் வெள்ளி விழா கண்டது வரலாறு.

வாழ்க்கை ஒரு சக்கரம் என்பதை நிரூபிக்க சரியான தருணம் வைத்தது. 1984 ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவனமே கேப்டனை தங்களுக்கு படம் செய்ய அணுகுகின்றனர். அவரும் பெருந்தன்மையாக இரட்டை நாயகன் கதையில் நடிகர் சுரேஷுடன் சேர்ந்து நடிக்க உடனே ஒப்புக் கொள்கிறார். அப்படம் "வெள்ளைப்புறா ஒன்று". மீண்டும் 1986 ஆண்டில் தீபாவளிக்கு "தர்மதேவதை" என்னும் திரைப்படத்தை கேப்டனை வைத்து ஏவிஎம் தயாரித்தது.

அடுத்து 1991 ஆம் ஆண்டு "மாநகர காவல்" திரைப்படத்தை ஏவிஎம் நிறுவனம் கேப்டனை வைத்து தயாரித்தது. பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்து 1994 ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் மீண்டும் கேப்டனை வைத்து சேதுபதி ஐபிஎஸ் படம் தயாரித்தனர். எத்தனை பிரம்மாண்டமான சண்டைக்காட்சிகள் , அதற்கு கேப்டன் உயிரைப் பணயம் வைத்து பாதுகாப்பு உபகரணங்கள் கூட இன்றி சண்டை செய்தது எல்லாம் இன்றும் கூட பேசுபொருள். இப்படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

அப்போது பட நிறுவனங்கள் பிற உச்ச ஹீரோக்களை வைத்து படம் எடுக்கையில் விலை உயர்ந்த ஈஸ்ட்மென் கலர், ஃபிஜி கலர் ஃபிலிம் கொண்டு படமாக்கியுள்ளனர், ஆனால் விஜயகாந்த் வைத்து படமாக்குகையில் ஆர்வோ (orwo) கலர் வைத்து ஓரவஞ்சனையுடன் படமாக்கியுள்ளனர், இதை எல்லாம் கண்டு கொள்ளாமல், மீண்டும் அவர்களுடன் இணைந்தவர் கேப்டன்.

குற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்று நடந்தால் ஒருவருக்கு எதிலும் வெற்றியே. இன்னா செய்தாலே ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்று ஒருவர் நடந்தால் எதிலும் வெற்றியே.

வாழ்வில் இதை கடைபிடிக்க பகைமையையும் வீம்பையும் விட்டொழிக்க வேண்டும். இதை ஒருவர் கடைபிடித்தால் வாழ்வில் நிச்சயம் வெல்லலாம், உயரலாம்.

Tags

Next Story