அமெரிக்க அம்மாயீ தெரியுமா..? வாங்க சினிமா கொட்டகைக்கு
மேல்நாட்டு மருமகள் சினிமா போஸ்டர்
தமிழ்நாட்டு கலாச்சார பெருமையை வெளிநாட்டு பெண் மூலம் பேசவைத்த மேல்நாட்டு மருமகள்
1975ம் ஆண்டில் கமல் நடிப்பில் வந்த மற்றொரு படம் மேல்நாட்டு மருமகள். இப்படம் வெளிவந்த காலகட்டத்தில் இளைஞர்களிடையே வெளிநாட்டு மோகம் மிகவும் அதிகமாக இருந்தது. நம் நாட்டின் பண்பாடு மிகவும் பிற்போக்குத் தனமானது. கர்நாடகம் என்ற எண்ணம் இருந்தது.
மேலை நாட்டு நாகரிகம் முற்போக்கு தனமானது. அதுதான் சிறந்தது என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. நம் நாட்டு பழக்க வழக்கங்களை பின்பற்றுபவர்களை ஏளனமாக பார்க்கும் மனப்போக்கும் இருந்தது. அதே நேரத்தில் மேலை நாட்டில் நம் நாட்டு கலாச்சரங்களையும், அதன் சிறப்புகளையும் உணர்ந்து அதை பின்பற்றுபவர்கள் இருந்தார்கள்.
இளைய தலைமுறையினர் மேல்நாட்டு கலாச்சாரங்களை கண்மூடித்தனமாக பின்பற்றும் அதே நேரத்தில், அதில் உள்ள கலப்பு மணம், நம் நாட்டினர், வெளி நாட்டினர் என்று வேற்றுமை பாராது அனைவரையும் சமமாக பார்க்கும் உயர்ந்த பண்பும் இருந்தது. அதையும் அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் முந்தைய தலைமுறையினர் நம் நாட்டு கலாச்சாரங்களை பின்பற்றுவதில் காட்டிய ஆர்வம், அதன் சிறப்புகளை ஆழமாக சிந்திக்காமல் மேலோட்டமாக அதன் சம்பிராதயங்களை பின்பற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள்.
இதனால் இளைய சமூகத்தினர் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. அதே சமயத்தில் இந்த வேறுபாடுகளையும் ஏற்றுக் கொள்ளத் தயங்கினர். இதை அழுத்தமாக ஏ.பி.நாகராஜன் பதிவு செய்த படம்தான் மேல்நாட்டு மருமகள்.
திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, தில்லானா மோகனாம்பாள், ராஜராஜ சோழன் போன்ற வரலாறு மற்றும் புராண கதைகளை பிரமாண்டமாக கொடுத்த ஏ.பி.நாகராஜன் வடிவுக்கு வளைகாப்பு, நவராத்திரி, குலமகள் ராதை போன்ற சமூகப் படங்களை கொடுக்கவும் தவறவில்லை.
சாதாரண படிப்பறிவு இல்லா மக்களிடையே சாமி படமெல்லாம் எடுப்பாரே அவரா என்று அடையாளம் காணப்பட்ட ஏ.பி.என். சமூகத்தில் நிலவும் முரண்பாடுகளையும் அழுத்தமாக, அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில், யாருடைய மனமும் புண்படாமல் எடுத்துச் சொல்பவர் என்பதை வெற்றியடைந்த அவருடைய படத்தின் மூலமே அறியலாம்.
மேல் நாட்டு மருமகள் படத்தில், வெளிநாட்டுக்குச் சென்ற சிவக்குமார் அங்கேயே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வருகிறார். இது பெரியவர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆனால் இளையவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். சிவகுமார் திருமணம் செய்து கொண்டு வரும் வெளிநாட்டு பெண்ணான குமாரி லாரன்ஸ் பெரி டலெ தமிழ்நாட்டு கலாச்சாரத்தின் மீது பற்றுக் கொண்டவராகவும், அதை பின்பற்றுபவராகவும் இருக்கிறர். ஆனால் சிவக்குமாரின் தம்பியாக வரும் கமல்ஹாசனும், அவருக்கு இணையாக நடிக்கும் ஜெயசுதாவும் மேலை நாட்டு நாகரி கத்தில் மூழ்கித் திளைக்கும் இளைய தலைமுறைகளின் பிரதிபலிப்பாக திகழ்கிறார்கள்.
தமிழ்நாட்டு கலாச்சாரத்தை பின்பற்றும் மேல்நாட்டு மருமகளான லாரன்ஸ் பெரிடலே தன்னுடைய பண்பால், தங்களை வெறுக்கும் பெரியவர்களின் மனதை படிப்படியாக கவர்கிறார். அதே நேரத்தில் கமலஹாசனும், ஜெயசுதாவும் மேல் நாட்டு நாகரிகத்தை பின்பற்றி, சில தீயவர்களின் பிடியில் சிக்கிக் கொள்கிறார்கள். கடைசியில் லாரன்ஸ் பெரிடலே உதவியால் அந்த சிக்கலிலிருந்து வெளி வருகிறார்கள்.
படத்தின் இடையில் மேல்நாட்டு மருமகள் மூலம் தமிழ்நாட்டின் பாரம்பர்யம் மற்றும் கலாச்சாரத்தின் பெருமைகளை எடுத்துக் கூறுவது போல் காட்சி அமைத்து இருப்பார். இதில் வெளிநாட்டிலிருந்து நமது தமிழகத்தில் உள்ள ஒரு குடும்பத்தின் மருமகளாக, சிவக்குமாரின் மனைவியாக நடித்திருந்த 'குமாரி ' லாரன்ஸ், உண்மையிலேயே வெளிநாட்டைச் சேர்ந்தவர். மேல்நாட்டு மருமகளாக இருந்தாலும் தமிழ் பண்பாட்டையும், பாரம்பர்யத்தையும் கடைபிடித்து, ஒரு நல்ல மனைவியாக, மருமகளாக அவர் நன்றாக நடித்திருப்பார்.
'முத்தமிழில் பாடவந்தேன்' என்ற வாணிஜெயராம் பாடிய இனிமையான பாடலுக்கு சரியாக வாயசைத்து, தான் பாடுவது போன்று அழகாக நடித்திருந்தார். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து, மேல் நாட்டு நாகரிகத்தில் மூழ்கி வாழ்க்கையை தொலைத்த தம்பதிகளாக கமலஹசனும் ஜெயசுதாவும் நன்றாக நடித்திருந்தனர்.
அயல் நாட்டினர் பலர் நம்நாட்டு நாகரிகத்தையும் வாழ்க்கை முறைகளையும் கடைபிடித்து வாழ்ந்து, அதில் வெற்றி பெறும்போது, நம்நாட்டில் பிறந்து வளர்ந்த சிலர் அயல்நாட்டு கலாசாரத்தை பின்பற்றி ஏன் வாழ்க்கையில் தோல்வியடைய முற்படுகிறார்கள்? என்ற வாதத்தை முன்வைத்து, ஒரு அழகான திரைக்கதையை அமைத்து தந்திருந்தார் இயக்குநர் ஏ.பி.நாகராஜன்.
இந்த திரைப்படத்தின் பாடல்களை 'பூவை செங்குட்டுவன்', உளுந்தூர்பேட்டை சண்முகம், நெல்லை அருள்மணி, திருச்சி பரதன், கீதா பிரியன், குயில் ஆகியயோர் இயற்ற, குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் அருமை. வாணிஜெயராம் பாடிய 'முத்தமிழில் பாடவந்தேன்' என்ற பாடல் மிகவும் பிரபலமானது. இந்தி பாடகி உஷா உதூப், முதன் முதலாக இந்த படத்தில் ஒரு ஆங்கில பாடல் பாடி நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் அறிமுக நடிகையாக வந்த வாணி கணபதி, பின்னாளில் கமலஹாசனின் மனைவியானார். அதேபோல இந்த படத்தில்தான் 'ஜுனியர் பாலையா அறிமுகமானார். இந்த திரைப்படம் தெலுங்கில் 'அமெரிக்க அம்மாயி' என்ற பெயரில் பின்னாளில் எடுக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu