அவ, எந்த நேரத்துல என்ன செய்வான்னே தெரியாது..!

அவ, எந்த நேரத்துல என்ன செய்வான்னே தெரியாது..!
X

நடிகை மனோரமா 

நடிகர் திலகம் சிவாஜி தனது எதிர்வீட்டில் வசித்து வந்த ஆச்சி மனோரமாவை பற்றி சொன்ன வார்த்தைகள் தான் இவை.

தமிழ் மக்கள் அத்தனை பேரையும் வயிறு வலிக்கச் சிரிக்க வைத்த மனோரமாவின் சொந்த வாழ்க்கை இறுதிவரை சோகம் நிறைந்ததாகவே இருந்தது. அம்மாவின் எதிர்ப்பையும் மீறி, திருச்செந்தூர் முருகன் கோவிலில் தனது காதலன் ராமநாதனைக் கரம் பிடித்தார். இந்தத் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பூபதி எனப் பெயரிட்டார்கள்

குழந்தை பிறந்த 11-வது நாள் குழந்தையைப் பார்க்க வந்த ராமநாதன், வரும் வழியில் ஜோசியம் பார்த்து விட்டு வந்ததாகவும், பிறந்த இந்த குழந்தையால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறி, மனோரமாவுடன் சண்டை போட்டார். அப்படி வீண் சண்டை போட்ட சில நாள்களிலேயே, ராமநாதன் மனோரமாவை விட்டுப் பிரிந்து சென்று வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த நிகழ்விற்குப் பிறகு வேறு திருமணம் செய்து கொள்ளாத மனோரமா, இறுதிவரை மகன் பூபதிக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

மகன் பூபதியுடன் மனோரமா

சின்னத்தம்பி' படத்தின் க்ளைமாக்ஸில் கைம்பெண் தாய் மனோரமாவின் மீது, மஞ்சள் தண்ணீர் ஊற்றி குங்குமம் வைக்கும் காட்சி எடுக்கும் போது, வழக்கத்தைவிட மிகவும் சீரியஸாக நடித்துக் கொண்டிருந்தார், மனோரமா. 'என்னாச்சு' எனப் படக்குழுவினர் கேட்டபோது, 'ஒண்ணுமில்ல. என் வாழ்க்கைக்கும் இந்தக் காட்சிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிற மாதிரி தோணுது' என வேதனையோடு சொன்னார்.

அவர் சொன்ன அந்த நேரம், மனோரமாவின் கணவர் ராமநாதன் சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் காலமாகி இருந்தார். தன்னைத் தவிக்க விட்டு, வேறு ஒரு பெண்ணுடன் சேர்ந்த போதிலும், நேரில் சென்று கணவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, தனது மகன் பூபதி கைகளால் கணவரின் உடலுக்குக் கொள்ளிபோட வைத்தார்.

அடிக்குமேல் அடி, வலிக்குமேல் வலி, நம்பிக்கைத் துரோகங்களையே வாழ்க்கையாக கொண்ட மனோரமா, சில நாய்களைக் கண்ணும் கருத்துமாக வளர்த்தார். இந்த நாய் வளர்ப்பு குறித்து அவர் மகன் பூபதி ஒருமுறை கேட்டபோது, 'மனுசங்க தான் நம்பவெச்சு ஏமாத்திடுறாங்க. ஆனால், இந்த ஜீவனுங்க எக்காலத்துக்கும் நன்றி, விசுவாசத்தோடு இருக்கும்' என்றிருக்கிறார்.

ஒருமுறை ஒய்.ஜி.மகேந்திரனிடம், 'அப்பா.. அந்த எதிர்த்த வீட்டுக்காரி ஒருத்தி இருக்காப்பா. அவகிட்ட மட்டும் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்பா. அவ, எந்த நேரத்துல என்ன செய்வான்னே தெரியாது' என்று மனோரமாவின் நடிப்பைச் சொல்லி சிலாகித்தாராம், சிவாஜி.

உங்களில் யாருக்கேனும் வாழ்க்கை வெறுத்துப்போனாலோ, தற்கொலை எண்ணம் தலைதூக்கினால் என் வாழ்க்கை வரலாறை ஒருமுறை புரட்டிப் பாருங்கள் என்று மனோரமா வேதனையுடன் கூறியுள்ளார்.

இளமையில் வறுமை, சில வருடங்களே நீடித்த மண வாழ்க்கை என அவர் தாண்டி வந்த தடைக்கற்கள் அதிகம். அதையெல்லாம் அவர் படிக்கட்டுகளாக மாற்றிக்கொண்ட திறமை, தங்கமாக ஜொலித்த அவரது குணம், வயிறு வலிக்கச் சிரிக்க வைத்த நகைச்சுவை... உங்களை ஒரே நொடியில் வாழ்க்கையின் மீது அதீதக் காதல்கொண்டவர்களாக மாற்றி விடும். அவரது இழப்பு யாராலும் ஈடுசெய்ய முடியாதது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்