எம்.ஜி.ஆரின் வாரிசுகள்..!
எம்ஜிஆர்
பெரியார், அண்ணா மற்றும்எம்ஜிஆர் ஆகிய இவர்கள் மூவருக்குமே ஒரு ஒற்றுமை உண்டு. இந்த மூன்று பேருக்குமே நேரடி வாரிசுகள் இல்லை. எம்.ஜி.ஆர். தனது படங்களில் பாடி நடித்த கருத்துக்கள் எல்லாம் பிறகு அவர் வாழ்வில் அப்படியே நடந்துள்ளன. திரையில் அவர் பாடி நடக்காமல் போன பாடல், ‘பணம் படைத்தவன்’ படத்தில் இடம்பெற்ற, ‘எனக்கொரு மகன் பிறப்பான்… அவன் என்னைப் போலவே இருப்பான்…’
சத்யா ஸ்டுடியோவில் ‘மாட்டுக்கார வேலன்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. ஒருநாள் எம்.ஜி.ஆருடன் இயக்குநர் ப.நீலகண்டன், ஜெயந்தி பிலிம்ஸ் அதிபரும் படத்தின் தயாரிப்பாளருமான கனகசபை ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, எம்.ஜி.ஆரிடம் ப.நீலகண் டன், ‘‘உங்களுக்கு குழந்தை இருந்திருந்தால் ரொம்ப நல்லா இருந்திருக்கும். நாங்கள் எல்லாம் பார்த்து சந்தோஷப்பட்டிருப்போம். கடவுள் எங்களுக்கு அப்படிக் கொஞ்சி மகிழும் வாய்ப்பைக் கொடுக்கவில்லை’’ என்றார்.
அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘என் இரண்டாவது மனைவி சதானந்தவதிக்கு இரண்டு முறை கரு உண்டாகி ‘அபார்ஷன்’ ஆகி விட்டது. அதுகூட எனக்கு பெரிய வருத்தம் இல்லே. நான் கஷ்டப்படற காலத்திலே எங்க அம்மா இருந்தாங்க. இப்போ நான் வசதியா இருக்கும்போது எங்க அம்மா என் கூட இல்லே. கஷ்டத்தை அனுபவிச்சவங்க கொஞ்சம் சுகத்தை அனுபவிக்கவில்லேயே என்பது தான் என் வருத்தம்’’ என்று சொன்னார். கூட இருந்தவர்களின் இதயம் கனத்தது.
ரவீந்தர் என்பவர் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான வட்டத்தில் இருந்தவர். இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த இவரின் இயற்பெயர் காஜா முகைதீன். சொந்த ஊர் நாகூர். எம்.ஜி.ஆர். வைத்த பெயர் ரவீந்தர். எம்.ஜி.ஆர். நாடகமன்றத்தின் ‘இடிந்த கோயில்’ நாடகத்துக்கு (இந்த நாடகம் தான் பின்னர் ‘இன்பக் கனவு’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது) வசனம் எழுதியவர்.
‘நாடோடி மன்னன்’ படத்திலும் கவியரசு கண்ணதாசனுடன் சேர்ந்து வசனம் எழுதியுள்ளார். ‘நாடோடி மன்னன்’ படத்தின் வெற்றி பற்றி குறிப்பிடும் போது ரவீந்தரின் திறமையை எம்.ஜி.ஆர். பாராட்டியுள்ளார். எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார். ‘எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் ரவீந்தர்’ என்று அறியப்பட்டவர்.
ரவீந்தருக்கு 1958-ம் ஆண்டு திருமண ஏற்பாடுகள் நடந்தன. அதுபற்றி எம்.ஜி.ஆரிடமும் அவரது அண்ணன் சக்ரபாணியிடமும் ரவீந்தர் தெரிவித்தார். ‘‘திருமண தேதியை பெரியவர்கள் நிச்சயித்துவிட்டார்கள்’’ என்று ரவீந்தர் கூறியதும், ‘‘ரொம்ப சந்தோஷம். எவ்வளவு பணம் வேண்டும்?’’ என்று சக்ரபாணி கேட்டார். ‘‘வெறும் பதினாறு ரூபாய் மட்டும் கொடுங்கள்’’ என்றார் ரவீந்தர். எம்.ஜி.ஆருக்கும் சக்ரபாணிக்கும் சற்று குழப்பம்.
பின்னர், கலகலவென சிரித்த சக்ரபாணி, ‘‘என்னய்யா 16 ரூபாய்க்கு கல்யாணம். ஒரு பிளேட் பிரியாணிக்குக்கூட ஆகாதே?’’ என்றார். அதற்கு ரவீந்தர், ‘‘எங்கள் வழக்கப்படி தாலி ஒரு கிராம் எடையில் இருக்கும். இப்போது அதன் விலை பதினாறு ரூபாய். அதற்கு மட்டும் நீங்கள் பணம் கொடுத்தால் போதும். மத்த படி உங்க தயவுல என்கிட்ட இருக்கிற பணமே போதும்’’ என்றார்.
எம்.ஜி.ஆரும் சக்ரபாணியும் உள்ளே சென்றனர். சக்ரபாணி மட் டுமே வெளியே வந்து, ரவீந்தர் கேட்ட படி, பதினாறு ரூபாயை அவரிடம் கொடுத்தார். எம்.ஜி.ஆர். வரவில்லை. சிறிது நேரம் ரவீந்தர் அங்கேயே காத்திருந்தார். எம்.ஜி.ஆர். தனது கையால் அந்தப் பணத்தைக் கொடுக்கவில்லையே என்று ரவீந்தருக்கு குறை.
சற்று நேரம் கழித்து வெளியே வந்த எம்.ஜி.ஆர்., ரவீந்தரைப் பார்த்து, ‘‘என்ன ரவீந்தர்? இன்னும் பணம் வேணுமா? உமக்காக பத்தாயிரம் ரூபாய் எடுத்து வெச்சிருக்கேன். தர்றேன்’’ என்றார். 1958-ல் பவுன் விலை ஏறத்தாழ நூறு ரூபாய் விற்ற நிலையில், பத்தாயிரம் ரூபாய்க்கு கிட்டத்தட்ட நூறு பவுன் வாங்கலாம். இன்றைய பவுன் விலையோடு ஒப்பிடும்போது அன்றைய பத்தாயிரம் ரூபாய், இப்போது இருபது லட்ச ரூபாய்க்கு சமம்.
ரவீந்தர் உடனே, ‘‘அதுக்கில்லே அண்ணே, பதினாறு ரூபாயை உங்க கையாலேயே என்கிட்ட கொடுப்பீங்கன்னு நினைச்சேன்’’ என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். எம்.ஜி.ஆர். லேசாக புன்னகைத்து, ‘‘என்னய்யா புரியாத ஆளா இருக்கே. கல்யாணத்துக்கு தாலி வாங்க பணம் கேட்கிறே. எங்க அண்ணன் புள்ளை குட்டிக்காரர். எனக்கு அந்த பாக்கியம் இல்லே. அதனால்தான் அவர் கையாலேயே உன்கிட்ட கொடுக்கச் சொன்னேன்’’ என்றார்.
எம்.ஜி.ஆரின் இந்த எதிர்பாராத பதிலையும் அவரது நல்லெண்ணத்தையும் அறிந்து ரவீந்தர் அழுதே விட்டார். எம்.ஜி.ஆரும் கண்கலங்கி ரவீந்தரை அணைத்தபடி, ‘‘நல்லா இரும்’’ என்று வாழ்த்தினார். பின்னர், ரவீந்தர் ஆறு குழந்தைகளுக்குத் தந்தையானார்.
எம்.ஜி.ஆருக்கு எப்போதுமே ஒரு குணம் உண்டு. தன்னோடு தொடர்புடைய எல்லோருக்கும் எதையாவது கொடுக்க வேண்டும், அவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் வள்ளல் தன்மையும் அவருக்கு உண்டு. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தனது ரசிகர்களை ஒவ்வொருவராக எம்.ஜி.ஆர். சந்தித்து, தனித்தனியே அவர்களுக்கு ஏதாவது கொடுப்பது நடக்காத காரியம்.
எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள் இருந்திருந்தால் இரண்டு மூன்றோ அல்லது நான்கைந்து பேரோ இருந்திருக்கலாம். அவர்கள் தான் எம்.ஜி.ஆரின் வாரிசுகள் என்று அழைக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் இப்போதோ, ‘எம்.ஜி.ஆரின் வாரிசுகள்’ என்ற பெருமையையும் தனது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கே வழங்கிவிட்டார் அந்த வள்ளல்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu