தெய்வம் தந்த தேவாமிர்தம்..! ஜேசுதாசின் குரல் வளம்..!
பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் (கோப்பு படம்)
விவித பாரதி மற்றும் திருமண வீடுகளைத் தவிர வேறு சினிமா பாடல்களை கேட்க முடியாத காலகட்டம். பாடல் காதில் விழும் இடங்களில் எல்லாம் ஒரு ஸ்டாப்பிங்.
கமல் கன்னட மஞ்சுளா நடித்த மாலை சூடவா படம்..
யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா,
எனக்கென்றும் நீயே சொந்தம் மாலை சூட வா..
என ஆரம்பித்து..
குளிர் கொண்ட மேகம்தானோ
மலர் கொண்ட கூந்தல்
கடல் கொண்ட நீலம்தானோ
சுடர் கொண்ட கண்கள்
மடல் கொண்ட வாழைதானோ
மனம் கொண்ட மேனி
தழுவாத போது உறக்கங்கள் ஏது?
பல நூறு தடவை இந்தப் பாடலை திரும்ப திரும்ப கேட்கும் அளவுக்கு மனதில் பதிந்து விட்டது என்றால் முதல் உள்வாங்குதல் என்பது எப்படிப்பட்ட தருணமாக இருந்திருக்க வேண்டும்? பிஞ்சு வயதில் பஞ்சு மனசில் நெருப்பை ஏற்றிவைத்த ஏசுதாஸ்..
இத்தனைக்கும் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே,
உரிமைக்குரல் படத்தின் விழியே கதை எழுது, டாக்டர் சிவா படத்தின் மலரே குறிஞ்சி மலரே, அந்தமான் காதலி படத்தின் நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் போன்ற பாடல்கள் மூலம் ஜேசுதாஸ் பட்டிதொட்டியெல்லாம் படு பேமஸ்.
இருந்தாலும் , கேட்டாலே இன்றளவும் என்னமோ பண்ணும் "யாருக்கு யார் சொந்தம்" பாடல் இன்றுவரை பசுமரத்தாணி..
கமல் நடித்த குமார விஜயம் படத்தின் "கன்னி ராசி என் ராசி" பாடலும் இதே ரகம்தான்
கொஞ்சம் அலசினால் ஜேசுதாஸ் அவர்களைத் தமிழ்த் திரையுலகில் மிகவும் உச்சத்துக்கு கொண்டு போன தெறி ஹிட் பாடல், அவள் ஒரு தொடர்கதை படத்தின் தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு...இதுவாகத்தான் இருக்க வேண்டும்..
காதல் பாடல்களை விட ஜேசுதாஸ்க்கு தத்துவ பாடல்கள் சோகப் பாடல்கள் தான் பெரும் வெற்றி தருமென அடித்தளமிட்ட பாடல், தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு..
கமலின் வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் பாடல், ரஜினியோட புதுக்கவிதை படத்தின் வெள்ளை புறா ஒன்று, படிக்காதவன் படத்தின் ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன், மன்னன் படத்தின் அம்மா என்றழைக்காத உயிரில்லையே..
தத்துவத்தையும் சோகத்தையும் பாடும்போது ஜேசுதாஸ் உண்மையிலேயே பிழிந்தெடுத்தார் என்றே சொல்லலாம்.
ஜெயலலிதா கதாநாயகியாக நடித்து சோ தயாரித்த, யாருக்கும் வெட்கமில்லை படத்தின், "மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம்" பாடலை ஒருமுறை கேட்டுப்பாருங்கள்..
80 களைப் பொருத்தவரை ஜேசுதாஸ் அவர்களிடம் மீண்டும் மீண்டும் இட்டுச்செல்லும் படம் ரஜினியின் நல்லவனுக்கு நல்லவன்.
ஓப்பனிங் சாங்காக கல்பனா ஐயருடன் ரஜினி ஆடும் "வச்சிக்கவா ஒன்னமட்டும் நெஞ்சிக்குள்ள" பாடல் ஆகட்டும், ராதிகா வோடு பாடும் "உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் மானே.." இரண்டுமே முற்றிலும் வெவ்வேறு ரகமான பாடல்.. ஆனால் ஜேசுதாஸ் கதகளி ஆடி இருப்பார்..
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை எஸ்.பி.பாலசுப்ரமணியம் நெய் பொங்கல் என்றால் அதில் அடிக்கடி தென்படும் வறுத்த முந்திரிதான் கே ஜே ஜேசுதாஸ்..
1961ல் பொம்மை படத்தில் பாடியபோது இவரின் குரலை யாரும் கண்டுகொள்ளவில்லை..1964ல் காதலிக்க நேரமில்லை என்ற பிளாக் பஸ்டரில் பாடியபோதும் சரி, எம்ஜிஆரின் பறக்கும்பாவையில் சந்திரபாபுவுக்காக பாடியபோதும் சரி.. என்ன துரதிஷ்டமோ, ஏறுமுகமே இல்லை..
ஆனால் எழுபதுகள் கைவிடவில்லை. எம்ஜிஆர்,சிவாஜி மட்டுமல்ல யாருக்காக பாடினாலும் அத்தனை பாடல்களும் செம ஹிட்டாக அமைந்தன.
இன்னொரு பக்கம் ஹிந்தியில் சிட்சோர் படத்தின் பாடல்கள்.. தேசம் முழுவதும் காதுகளை இவர் வசம் கொடுத்து விட்டதால் இந்தி திரையுலகிலும் கொஞ்சம் சாம்ராஜ்யம் விரிந்தது.
உன்னிடம் மயங்குகிறேன்....
தானே தனக்குள் ரசிக்கின்றாள்,.. காஞ்சிப்படுத்தி கஸ்தூரி பொட்டு..
இதுபோல எவ்வளவு படங்களில் எவ்வளவு பாடல்கள்..
கமல் ரஜினியை தாண்டி சத்யராஜ் பிரபு கார்த்திக் என அடுத்த தலைமுறைக்கும் ஜேசுதாஸ் குரல் வெற்றிகரமாகவே அமைந்தது.
கே பாலச்சந்தரின் சிந்துபைரவி படம். ஜேசுதாஸின் குரலை தள்ளி வைத்துவிட்டு பார்த்தால், பார்த்தால் என்ன பார்க்கத்தான் முடியுமா?
பல்வேறு இந்திய மொழிகளில் சுமார் 40 ஆயிரம் பாடல்களை பாடிய இந்த கிறிஸ்து மதத்தை சேர்ந்தவரின் குரல் தான் குருவாயூரப்பனுக்கும் ஐயப்பனுக்கும் பாடல் டிரேட் மார்க்காய் இன்றளவும் இருந்துவருகிறது.. இசை, மொழிகளை மதங்களை, இனங்களையெல்லாம் கடந்த கடவுள்!
தாய்க்கு ஒரு தாலாட்டு படத்தின் ஆராரிரோ தூங்கியதாரோ பாடலைக் கேட்டுப்பாருங்கள்..
""பசித்தவன் கேட்கிறேன் பால்சோறு எங்கே?
அன்னமிட்ட தாயே உனக்கு
அரிசி போட வந்தேன்
என நானே நொந்தேன்"
கல் மனதையும் கரைய வைக்கும் அந்த குரல்..
ஏழு முறை தேசிய விருதுபெற்றவர் கே.ஜே. ஜேசுதாஸ்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu