“மிஸ்டர் ராமச்சந்திரன்!" எம்.ஜி.ஆரிடம் சீறிய பானுமதி..! என்ன செய்தார் எம்.ஜி.ஆர்..?

“மிஸ்டர் ராமச்சந்திரன்! எம்.ஜி.ஆரிடம் சீறிய  பானுமதி..! என்ன செய்தார் எம்.ஜி.ஆர்..?
X
பலர் முன்னிலையில் அதட்டலாக எம்.ஜி.ஆரை அழைக்கிறார் நடிகை பானுமதி. திகைப்புடன் திரும்பிப் பார்க்கிறார் எம்.ஜி.ஆர்.

இந்த சம்பவம் நடந்தது “நாடோடி மன்னன்” படப்பிடிப்பு சமயத்தில். ஆம். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும், ஒரு பெண் இருக்கிறாள் என்பார்கள்!. ஆனால் ஒரு புகழ்மிக்க மனிதனின் வெற்றிக்கு பின்னால் ஏகப்பட்ட அவமானங்கள் தான் இருக்கின்றன.

அந்த மனிதன் - “எம்.ஜி.ஆர்.” “நாடோடி மன்னன்” – இது எம்.ஜி.ஆர். தயாரித்து இயக்கிய முதல் படம். அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது திரும்பத் திரும்ப ஒரே காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தாராம் எம்.ஜி.ஆர். காரணம் அந்த காட்சி சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக.

ஆனால் படத்தின் கதாநாயகி பானுமதிக்கு ஏனோ கோபம் வந்து விட்டது. படப்பிடிப்புத் தளத்தில், பலர் முன்னிலையில் சத்தமாக எம்.ஜி.ஆரை அழைக்கிறார் பானுமதி. “மிஸ்டர் ராமச்சந்திரன்!" எம்.ஜி.ஆர். திகைப்புடன் திரும்பிப் பார்க்க, படபடவென்று பொரிந்து தள்ளுகிறார் பானுமதி. "ஒரே ஷாட்டை திரும்பத் திரும்ப எத்தனை முறை எடுப்பீங்க? இவ்வளவு நாளா சொல்ல வேண்டாம்னு இருந்தேன். நீங்க என்ன எடுக்கறீங்கன்னு உங்களுக்கே தெரியல.

நீங்களே இந்தப் படத்தோட ப்ரொடியூசருங்கறதால, எல்லா ஆர்ட்டிஸ்டும் உங்களை அட்ஜெஸ்ட் பண்ணிட்டுப் போறாங்க. நீங்க அதை ஒங்களுக்கு சாதகமா எடுத்துக்காதீங்க. முதல்ல ஒழுங்கா கதையை முடிவு பண்ணுங்க. இனிமேயாவது வேற டைரக்டரை போடுங்க. நான் தொடர்ந்து நடிச்சுத் தரேன். இன்னிக்கு எனக்கு மூடு போயிடுச்சு. நான் கிளம்பறேன். ஸாரி...”

அத்தனை பேர் மத்தியிலும் எம்.ஜி.ஆரை அவமானப்படுத்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டுப் போய் விட்டார் பானுமதி. ஆனால் .... எம்.ஜி.ஆர். ஆத்திரம் கொள்ளவில்லை. அமைதியாக அமர்ந்து சிந்தித்தார். பானுமதி கதாபாத்திரத்தை பாதியிலேயே இறப்பது போல மாற்றி விட்டு, சரோஜா தேவியை வைத்து “நாடோடி மன்னன்” படத்தை தொடர்ந்து எடுத்து, அதை வெற்றிப் படமாகவும் ஆக்கிக் காட்டினார் எம்.ஜி.ஆர்.

சரி, பலர் முன்னிலையில் தன்னை பரிகாசம் செய்து அவமானப்படுத்திய பானுமதியை , என்ன செய்தார் எம்.ஜி.ஆர்? எதற்கும் ஒரு காலம் வர வேண்டும் அல்லவா? 25 ஆண்டுகள் காத்திருந்தார் எம்.ஜி.ஆர். அவர் தமிழக முதல்வராக ஆன பின் தமிழக அரசு இசைக் கல்லூரியின் முதல்வராக யாரை நியமிப்பது என்று அதிகாரிகள் ஆலோசித்தார்கள். பல நாட்களாக ஆலோசித்து, பல பிரமுகர்களின் பெயரை அதிகாரிகள் சொல்ல.. அத்தனை பேர் பெயரையும் அடித்து விட்டு எம்.ஜி.ஆர். எழுதிய பெயர் –பானுமதி ராமகிருஷ்ணா. அது மட்டுமா..? 1983 இல் “கலைமாமணி” விருதையும் பானுமதிக்கு வழங்கி கௌரவித்தார் எம்.ஜி.ஆர். பலர் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்தியவருக்கு பதவியும் , பாராட்டுக்களுமா..?

ஆச்சரியமாக இருக்கிறது. இப்படி ஒரு தெய்வீக குணம் நமக்கு வருமா என்று சந்தேகமாக இருக்கிறது. குணம் வருகிறதோ இல்லையோ...ஒரு குறள் நினைவுக்கு வருகிறது.

“ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்

பொன்றுந் துணையும் புகழ்.”.

“தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்; பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்.” மிகவும் சரியாக எம்.ஜி.ஆருக்கு குறள் பொருந்துகிறது தானே.

Tags

Next Story