மனைவி என்பவள் தெய்வமாகலாம்..! யார் அந்த தேவசேனா..?

இயக்குனர் ஸ்ரீதர் மனைவி தேவசேனா
திடீரென்று ஒரு நாள் சுருட்டிப் போட்டது, பக்கவாதம் என்ற பயங்கரமான நோய்..! அன்றோடு இயக்குனர் ஸ்ரீதர் படுத்த படுக்கையாக வீட்டோடு முடங்கிப் போனார்.
கல்யாணப் பரிசு, தேன் நிலவு, நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை, காதலிக்க நேரமில்லை, சுமை தாங்கி, வெண்ணிற ஆடை, சிவந்த மண், உரிமைக்குரல், இளமை ஊஞ்சலாடுகிறது எத்தனை சூப்பர் ஹிட் திரைப்படங்கள்...! ஸ்ரீதர் என்ற பெயருக்காகவே திரைப்படங்கள் ஓடியது ஒரு காலம். ஆனால் அந்த ஸ்ரீதரின் கடைசிக் காலம், அந்த அஸ்தமன காலத்தில் அவருக்கு அருகிலேயே இருந்து கண்ணுக்கு கண்ணாக கவனித்துக் கொண்டவர் தேவசேனா ..
யார் இந்த தேவசேனா..?
இவர் மறைந்த இயக்குனர் ஸ்ரீதரின் மனைவி. மருத்துவமனையில் சீரியசான நிலையில் , சிகிச்சையில் இருக்கும் போது, சிலவேளைகளில் திடீரென யாரையாவது பார்க்க வேண்டும் என்று விரும்புவாராம் ஸ்ரீதர். உடனே தேவசேனா , ஸ்ரீதர் பார்க்க விரும்புகிறவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு “சார் பார்க்கணும்னு ஆசைப்படறார். கொஞ்சம் வர முடியுமா?” என்று பணிவோடு, பரிதாபமாக கேட்பாராம்.
இவர் கேட்கும் இரக்க தொனியில் எவராக இருந்தாலும் அடுத்த நிமிடமே ஸ்ரீதரைப் பார்க்க ஓடோடி வந்து விடுவார்களாம். கணவரின் அன்புக்குரிய அந்த நண்பர்களை வரவழைத்து, அவர்களை கணவரோடு பேச வைத்து, கணவரின் கடைசி நிமிட எதிர்பார்ப்புகளையும் சிறப்பாகவே பூர்த்தி செய்த புண்ணியவதி, ஸ்ரீதரின் மனைவி தேவசேனா.
சில வேளைகளில் ஸ்ரீதர் நினைவிழக்கும் அபாயத்தை எதிர்கொள்கிறார் என்பதை உணர்ந்த மருத்துவர்கள், அவரைப் பார்க்க வரும் முக்கியப் பிரமுகர்களிடம் , சிறிது நேரமாவது பழைய கதைகளை ஸ்ரீதரிடம் பேசச் சொல்வார்களாம். ஆனால் , ஸ்ரீதர் பேசுவதே என்னவென்று. வந்தவர்களுக்கு புரியாத நிலையிலும் கூட, தேவசேனா கணவர் சொல்வதைப் புரிந்து கொண்டு அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வாராம்.
இப்படியாக ... பதினான்கு ஆண்டுகள் படுக்கையிலேயே ஸ்ரீதர் இருந்த போதும், ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாத தேவசேனா, கட்டுக்கு அடங்காத கண்ணீர் வழிய நின்றது ஒரே ஒரு நாள் தான்...! அது ஸ்ரீதர் இறந்த 2008 , அக்டோபர் 20 இல் மட்டும் தான்.
மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்று ஸ்ரீதரின் சுமைதாங்கி படத்தில் வந்த பாடலை நாம் கொஞ்சம் மாற்றிப்பாடலாம்.
" மனைவி என்பவள் தெய்வமாகலாம்
கணவனோடு சேர்ந்த வாழ்க்கை காதலாகலாம்
மாறி மாறி அன்பு செய்து தோழன் ஆகலாம்
தோள்கொடுத்த தோழி வாழ்க்கை வேள்வியாகலாம்..!"
ஆம் .. ஸ்ரீதரின் "சுமைதாங்கி" பாடலை கொஞ்சம் மாற்றி பாடிக் கொள்ளலாம்..!
"மனைவி என்பவள் தெய்வமாகலாம்
வாழை போல தன்னைத் தந்து தியாகியாகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்
சருகுபோல உதிரும்போதும் உரமும் ஆகலாம்"
இயக்குனர் ஸ்ரீதர் நல்ல மனைவியை பெற்றுள்ளார் என்பது பெருமைக்குரியது. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்திட வரம் என்ற பாடலும் உள்ளதல்லவா? வாழ்க்கையில் எல்லோருக்கும் நல்ல மனைவி அமைந்துவிடுவதில்லை. இன்னும் சில நல்ல மனைவிகள் கணவனைப் போற்றி வாழ்வதால்தான் இந்த மண் இன்னும் மகிமைபெற்று விளங்குகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu