இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
பதினாறு வயதினிலே பட போஸ்டர்
சோளம் விதைக்கையிலே என்ற பாடல் தான் அது. 16 வயதினிலே படத்தில் இடம்பெற்றது. இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கவியரசர் கண்ணதாசன் எழுதினார். முழுக்க முழுக்க கிராமத்து இளைஞனின் ஏக்கம் இந்தப் பாடலில் பிரதிபலித்தது.
இந்தப் பாடலில் சோளம் விதைக்கையிலே சொல்லிப் புட்டு போன மச்சான், சோளம் விளைஞ்சு காத்துக் கிடக்கு... சோடிக்கிளி இங்கே இருக்கு... சொன்ன சொல் என்னாச்சி என்று அழகாக ஒரு ஆணைப் பெண் கேட்டுப் பாடுவது போல இருக்கும். ஆனால் இது ஒரு ஆண் பாடுவது மாதிரி இந்தப் படத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
சொன்ன சொல் என்ன ஆச்சி தங்கமே கட்டழகி... எனக்கு நல்லதொரு பதிலைச் சொல்லு குங்குமப் பொட்டழகி என்று பாடியிருப்பார். ஒரு ஆண் இந்தப் பாடலில் பெண்ணிடம் கோரிக்கை வைப்பதாக அழகான வரிகள் இடம் பெற்றுள்ளன. மானே என் மல்லிகையே மருதை மரிக்கொழுந்தே, தேனே தினைக்கருதே, திருநாளு தேரழகே... உன்ன நினைக்கையிலே என்ன மறந்தேனடி பொன்னே பொன்மயிலே எண்ணம் தவிக்குதடி என்று ஏக்கத்தை அழகுபட கவிஞர் எழுதியிருப்பார்.
பாடலில் மதுரை தான் மருதை என்று வழக்குச் சொல்லானது. இந்தப் பாடலில் இசைஞானி இளையராஜாவின் வித்தியாசமான அந்தக் குரலில் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை ஒரு துள்ளல் இருந்து கொண்டே இருக்கும். பறவைகள் படபடக்கும். சந்தூர், நாதஸ்வரம் கருவிகளின் இசை அருமை. அறுவடையின் போது குலவையையும், அந்த எடுப்பையும் அழகாகப் பயன்படுத்தியிருப்பார். அதே போல 2வது இடையிசையைப் பயன்படுத்தியிருப்பார்.
இந்தப் பாடலை முடிக்கும்போது அடுத்த சரணம் வருமோ என்று இருப்பது போல ஏ... ஹேன்னு ஒரு இழுவை வரும். ஆனால் பாடல் முடிந்து விடும். இது ஒரு வகையான நுட்பம். இந்தப் பாட்டு இன்னும் வரலையே என்ற ஏக்கம் வரும். இந்தப் பாட்டுக்குப் பிறகு தான் இளையராஜா டைட்டில் சாங் அதிகமாகப் பாடினார். அப்படிப் பாடினால் படம் சிறப்பாக வரும் என்ற நம்பிக்கையும் இருந்தது. அந்த வகையில் இது ஒரு மாறுபட்ட பாடல். மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபரும், திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu