முடிவுக்கு வந்து விட்டதா திரிஷா விவகாரம்?
‘லியோ’ மூவியில் நடிகை த்ரிஷா நாயகியாக நடிச்சிருந்தார். அதில் நடிகர் மன்சூர் அலிகானும் சின்னக் கேரக்டரில் நடிச்சிருந்தார். இந்த விஷயம் குறித்து அவரிடம் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நடிகை த்ரிஷா குறித்து முறையற்ற வகையில் அவர் கூறிய பதில் தான் இணையத்தில் சர்ச்சையைக் கிளப்பியது.
சுயவிளம்பரத்திற்காக தன் பெயரை களங்கப்படுத்தியதற்காக நடிகை த்ரிஷா அதிருப்தி தெரிவித்தார். மன்சூர் அலிகானுடன் இணைந்து இனி நடிக்கப் போவதில்லை அப்படீன்னும் சொன்ன அவர், மன்சூர் மீது வழக்கும் தொடர்ந்தார். இந்த விவகாரத்தில் நடிகை த்ரிஷாவுக்கு ரசிகர்களும், திரைத்துறையினரும் ஆதரவு குரல் எழுப்பினார்கள். அதில் நடிகர்கள் சிரஞ்சீவி, குஷ்புவும் அடங்குவர்.
ஆனால் தான் பேட்டி அளித்த வீடியோவை முழுதாகப் பார்க்காமல் குறிப்பிட்டப் பகுதியை மட்டும் பார்த்துவிட்டு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகச் சொல்லி, த்ரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் மீது குற்றம் சொன்னார் மன்சூர். மேலும், மூன்று பேருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி வழக்கு தொடர அனுமதி கேட்டு மன்சூர் அலிகான் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார்.
மனுவை விசாரிச்ச தனி நீதிபதி, நீதிமன்றத்தின் நேரவிரயம் இந்த மனு என்று சொல்லி மன்சூரின் மனுவைத் தள்ளுபடி செய்ததோடு, ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்தார். இதனை மறு ஆய்வு செய்யக் கோரி மன்சூர் அலிகான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அபராதம் விதித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்ததோடு மட்டுமல்லாது, த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி மீது வழக்குத் தொடர விரும்பவில்லை என்றும் மன்சூர் அலிகான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மன்சூருக்கு விதிக்கப்பட்ட ரூ. 1 லட்சம் அபராதத்தை ரத்து செய்தனர். மேலும், வழக்கை தள்ளுபடி செய்த தனி நீதிபதியின் உத்தரவையும் உறுதி செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu