என் வீட்டுக்கு வர்றவங்க பட்டினியாவா வருவாங்க..?

என் வீட்டுக்கு வர்றவங்க பட்டினியாவா வருவாங்க..?
X

டணால்  தங்கவேலு 

டணால் தங்கவேலு ‘’இவருக்கு அடையாளம் இதோ இந்தக் குரல் தான்’’

‘’ தம்பீ.. சாப்பிடுங்க’’

‘’ இல்லைங்க.. நான் சாப்பிட்டுத் தான் வந்தேன்’’

‘ அட.. இதைப் பாரு.. தங்கவேலு வீட்டுக்கு வர்றவங்க பட்டினியாவா வருவாங்க.. சாப்பிட்டுட்டுத் தான் வருவாங்க.. இருந்தாலும் இங்கே கொஞ்சம் சாப்பிடலாம்.. சாப்பிடுங்க.. சாப்பிட யோசிக்காதீங்க.. என்ன?’’

-எண்பதுகளின் துவக்கத்தில் –

சென்னை தியாகராய நகரில் ராஜாபாதர் தெருவில் இருந்த பெரிய வீட்டுக்குள் நுழையும் எவரையுமே இப்படிதான் ‘டணால்’ குரலில் வரவேற்பார் தங்கவேலு.

நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலு, எம்.ஜி.ஆரோடு எண்ணற்ற திரைப்படங்களில் நடித்தவர் என்பதை எல்லோரும் அறிவார்கள். ஆனால், எம்.ஜி.ஆருக்கும், தங்கவேலுவுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உண்டு என்பதை சினிமா உலகிலுள்ள பலரே கூட அறிந்திருக்க மாட்டார்கள். இது குறித்து நண்பர் சித்ரா லட்சுமணன் சொன்ன சுவையான தகவல்களிது:

எம்.ஜி.ஆர்., பிறந்த அதே 1917-ம் ஆண்டில், அவர் பிறந்த அதே ஜனவரி மாதத்தில் பிறந்தவர்தான் கே.ஏ.தங்கவேலு. எம்.ஜி.ஆர்., பிறந்தது ஜனவரி 17-ம் தேதி. கே.ஏ.தங்கவேலு பிறந்தது ஜனவரி 15-ம் தேதி. அந்த வகையில் எம்.ஜி.ஆருக்கு இரண்டு நாட்கள் மூத்தவர் அவர்.

எம்.ஜி.ஆர்., அறிமுகமான ‘சதிலீலாவதி’ படத்தில்தான் தங்கவேலுவும் அறிமுகமானார்.

எம்.ஜி.ஆருக்கு திரைப்பட வாய்ப்பை பெற்றுத் தந்த எம்.கே.ராதாதான், தங்கவேலுவிற்கும் சினிமா வாய்ப்பை பெற்றுத் தந்தார்.

அவர்கள் இருவருக்குமிடையே மிகவும் முக்கியமான வித்தியாசம் என்னவென்றால் ‘சதிலீலாவதி’ படத்திற்குப் பிறகு எம். ஜி. ஆருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், தங்கவேலுவிற்கு அடுத்த சினிமா வாய்ப்பு பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகே கிடைத்தது.

‘சதி லீலாவதி’ படத்திற்குப் பிறகு தங்கவேலு நடித்த படமாக ‘சிங்காரி’ என்ற படம் அமைந்தது. இந்த ‘சிங்காரி’ ஏற்கனவே நாடகமாக நடிக்கப்பட்ட கதை. நாடகத்தில் தான் ஏற்ற வேடத்தையே திரைப்படத்திலும் ஏற்றார் தங்கவேலு.

தங்கவேலுவின் பெயருடன் ‘டணால்’ என்ற பட்டப் பெயர் ஒட்டிக் கொண்டது இந்த ‘சிங்காரி’ படத்தில்தான். அந்த படத்தில் பல இடங்களில் ‘டணால்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருந்தார் அவர். ‘சிங்காரி’ படத்திற்குப் பிறகு பல திரைப்படங்களில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்த தங்கவேலுவுக்கு தமிழ்த் திரையுலகில் ஒரு நிலையான இடத்தைப் பெற்றுத் தந்த படம் ‘பணம்’.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த இரண்டாவது படம் அது. அந்த படத்திலே சிவாஜிகணேசனுடன் நடிக்கத் தொடங்கிய தங்கவேலுவின் திரையுலகப் பயணம், சிவாஜியோடு மட்டும் இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்தது .

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தான் தங்கவேலுவிற்கு ‘பணம்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கியவர். தங்கவேலுவின் திறமை மீது அவருக்கு அப்படி ஒரு அபார நம்பிக்கை இருந்தது. ‘பணம்’ படத்திலே நடிக்க ஒப்பந்தமான போது தங்கவேலுவின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவம் நடந்தது.

அந்தப் படத்திலே நடிப்பதற்காக ஆயிரம் ரூபாயை தங்கவேலுவிற்கு முன் பணமாகக் கொடுத்தார் கலைவாணர். அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்குப் போன தங்கவேலு ‘பணம்’ படத்திலே நடிப்பதற்கு தன்னை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் படத்தில் நடிக்க சம்பளமாக ஆயிரம் ரூபாயை கொடுத்ததாகவும் சொன்னபோது தங்கவேலுவின் பெரியப்பா மகிழ்ச்சி அடைவதற்குப் பதிலாக தங்கவேலுவைப் பார்த்து உரத்த குரலில் சத்தம் போட ஆரம்பித்தார்.

கலைவாணர் வீட்டிலிருந்து அவருக்குத் தெரியாமல் அந்த பணத்தை தங்கவேலு எடுத்துக் கொண்டு வந்து விட்டதாக அவரது பெரியப்பா எண்ணியதே அதற்குக் காரணம்.

அவர் அப்படி சந்தேகப்பட்டதிலும் தவறு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில். அப்போது தங்கவேலு நாடகங்களில் நடிக்க ஒரு மாதத்திற்கு வாங்கிக் கொண்டிருந்த சம்பளம் வெறும் 10 ரூபாய்தான். அப்படி இருக்கும்போது படத்தில் நடிக்க அவருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள் என்று சொன்னால் என்றால் யார் நம்புவார்கள்..?

“ஏன்தான் உன் புத்தி இப்படிப் போகுதோ தெரியவில்லையே. அவர் வீட்டிலேயே உனக்கு சோறு போட்டு அவரோட புள்ளை மாதிரி இல்லே கலைவாணர் உன்னை வளர்த்தார். அன்னமிட்ட வீட்டிலேயே கன்னம் இடலாமா..? அவர் வீட்டிலேயே இப்படி பணத்தைத் திருடி விட்டு வந்திருக்கிறாயே..?” என்று சொல்லியபடி கலைவாணரை அடிக்க ஆரம்பித்த அவர் தங்கவேலு சொன்ன எந்த விளக்கத்தையும் கேட்கத் தயாராக இல்லை.

வேறு வழியின்றி தனது பெரியப்பாவை நேராக கலைவாணர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார் தங்கவேலு. அங்கு போன பிறகு “ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டான். இனிமேல் அப்படி எல்லாம் நடக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று அவர் சொல்ல… கலைவாணருக்கு ஒன்றுமே புரியவில்லை.

அதற்குப் பிறகு தங்கவேலு நடந்த சம்பவத்தைப் பற்றி கலைவாணருக்கு விளக்கமாகச் சொல்ல “இதுக்காகவா தம்பியை தேவையில்லாம போட்டு அடிச்சிட்டீங்க…” என்று சொன்ன கலைவாணர் “அந்தப் பணம் என்னுடைய படத்தில் நடிப்பதற்காக நான் கொடுத்த முன் பணம்தான்…” என்று சொன்னவுடன்தான் அவரது பெரியப்பா சமாதானம் அடைந்தாராம்.

“என்னுடைய வாழ்க்கை கலைவாணர் எனக்கு போட்ட பிச்சை. ஆரம்பத்தில் ஒரு நல்ல வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தந்தது மட்டுமின்றி… தொடர்ந்து என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் கலைவாணர்தான்” என்று பல பத்திரிகைப் பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார் தங்கவேலு.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என்று தங்கவேலு இணைந்து நடிக்காத கதாநாயகர்களே இல்லை என்று சொல்லலாம்.

காமெடி நடிகர்களால் கதாநாயகனாகவும் நடிக்க முடியும் என்று நாகேஷ், தொடங்கி கவுண்டமணி, வடிவேல், விவேக், சந்தானம், கருணாஸ், என்று பல பேர் இன்று நிரூபித்திருக்கிறார்கள் என்றால் அதற்கு வித்திட்ட பெருமை தங்கவேலுவையே சேரும்.

சாதாரணமாக பெரிய, பெரிய கதாநாயகர்களே ஜோடி சேர்ந்து நடிப்பதற்கு பயப்பட்ட பானுமதியுடன் ‘ரம்பையின் காதல்’ படத்தில் நாயகனாக நடித்தார் தங்கவேலு.

தங்கவேலுவுடன் படங்களில் மட்டுமின்றி, வாழ்க்கையிலும் ஜோடியான எம்.சரோஜாவுடன் தங்கவேலு நடித்த படங்களில் மறக்க முடியாத படம் ஸ்ரீதரின் இயக்கத்தில் உருவான ‘கல்யாணப் பரிசு.’

அந்தப் படத்திலே ‘தான்தான் எழுத்தாளர் பகீரதன்’ என்று தனது மனைவியான சரோஜாவிடம் பொய் சொல்லிவிட்டு ஒரு பாராட்டு விழாக் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு தங்கவேலு வீடு திரும்பும் காட்சியை திரையில் பார்க்கும் எவராலும் சிரிப்பை அடக்க முடியாது.

திரையில் ஐந்து நிமிடங்கள் ஓடிய அந்தக் காட்சியை ஒரே டேக்கில் தங்கவேலுவும் சரோஜாவும் நடித்தபோது தனது சிரிப்பை அடக்க முடியாமல் கைக்குட்டையை வைத்து வாயை மூடிக் கொண்டாராம் இயக்குநர் ஸ்ரீதர். செட்டில் இருந்த பலரும் சிரிப்பை அடக்க முடியாமல் அந்த செட்டைவிட்டே ஓடிய சம்பவம் எல்லாம் அந்த காட்சி படமாக்கப்பட்டபோது நடந்திருக்கிறது.

‘கல்யாணப் பரிசு’ தங்கேலுவின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு படமாக அமைந்தது என்றால் அதற்குக் காரணம் அந்தப் படம் அவருக்கு மிகப் பெரிய பெயரை வாங்கிக் கொடுத்த படம் என்பது மட்டுமல்ல. அந்தப் படத்தின் நூறாவது நாள் விழா மதுரையில் நடைபெற்ற போதுதான் மதுரை அருகேயுள்ள திருப்பரங்குன்றத்தில் எம்.சரோஜாவை திருமணம் செய்து கொண்டார் அவர்.

தமிழ்த் திரையுலகில் சரித்திர கால பாத்திரங்கள், புராண பாத்திரங்கள் என்று எல்லா பாத்திரங்களையும் ஏற்று நடிக்கக் கூடிய நாயகர்களாக இருந்தவர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் என மிகச் சிலரே. இந்த கதாநாயகர்களைப் போல எல்லா பாத்திரங்களுக்கும் பொருந்தக் கூடியவராக இருந்த ஒரே நகைச்சுவை நடிகர் தங்கவேலு.

நேரிலே பேசும்போதும், சரி படங்களில் நடிக்கும்போதும், அறச் சொற்களை பயன்படுத்துவதை அறவே தவிர்த்த கலைஞர் தங்கவேலு. அதுபோன்று தன் வாழ்நாள் முழுவதும் தனக்கென சில கொள்கைகளை வைத்துக் கொண்டு அதிலிருந்து சிறிதும் விலகாமல் வாழ்க்கை நடத்தியவர் அவர்.

தமிழ் தவிர பிற மொழிப்படங்கள் எதிலும் நடிப்பதில்லை என்பதை இறுதி மூச்சுவரை கடைப்பிடித்தாராக்கும் டணால் தங்கவேலு.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil