தற்போது ஏன் பல திரைப்படங்கள் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன?...

தற்போது ஏன் பல திரைப்படங்கள்  பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன?...
X

பைல் படம்

சினிமாத்துறையில் விநியோகத்தில் A சென்டர், B சென்டர், C சென்டர் என்ற முறை இருந்தது.

தற்போது ஏன் பல திரைப்படங்கள் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன என்பதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

A சென்டர் என்பது சென்னை சத்தியம், தேவி, சங்கம், உதயம் என நகர் சார்ந்த திரையரங்குகள், கோவை, திருச்சி, மதுரை நகர திரையரங்குகளும் இதில் அடங்கும்.

B சென்டர் என்பது கோயம்பேடு ரோகிணி, விருகம்பாக்கம் கருமாரி இப்படி புற நகர் திரையரங்குகள், திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, தஞ்சை, ராம்நாடு போன்ற இரண்டாம் கட்ட நகர திரையரங்குகள்.

C சென்டர் என்பது மாநகராட்சி, நகராட்சி நீங்களாக பேரூராட்சி, ஊராட்சி திரையரங்குகள். இங்கே பெரும்பாலும் ரீ ரிலீஸ் எனப்படும் இரண்டாம் கட்ட வெளியீடுகளாகத்தான் திரைப்படங்கள் இருக்கும்.

மேட்டுக்குடி படம் அதாவது பணக்கார கதாபாத்திரங்கள், கதைக்களத்தில் அமைந்த, பிரபலமான நடிகர்கள் நடித்து, புகழ் பெற்ற இயக்குநர்கள் இயக்கிய படங்கள் A சென்டர் & B சென்டரில் நல்ல வசூலை குவிக்கும். நல்ல கதையம்சம், பாடல்கள் இருந்தால் c சென்டரிலும் வசூல் இருக்கும்.

நடுத்தர, கிராம கதாபாத்திரம், கதைக்களம். பிரபலம் மற்றும் புதுமுகங்கள் நடித்திருந்தாலும் B சென்டர், C சென்டர் இரண்டிலும் நல்ல வசூலைப் பெரும். A சென்டரில் ஓரளவு ஓடும்.

பிச்சைக்கார, வறுமை கதாபாத்திரம், ஒப்பாரி கதைகளம் எந்த சென்டரிலும் ஓடாது. விருதுகள் வாங்கி டிவியில் ஓடும். தியேட்டரில் கேளிக்கை வரி தள்ளுபடி பண்ணினாலும் கூட்டம் வராது. காரணம், மக்கள் கவலை மறந்து ரிலாக்ஸ் செய்வதற்காகவே திரையரங்கம் வருகிறார்கள். அங்கேயும் வந்து கொடுமைகளை பார்க்க அவர்கள் விரும்புவது இல்லை. ஆனால் அவர்கள் செண்டிமெண்ட் படங்களை விருப்புவார்கள். அதுவும் ஓரளவு. அப்படம் மகிழ்ச்சியாக கிளைமாக்ஸ் என்றால் ஹிட் அடிக்கும்.

இப்படி படத்தின் தரம் பார்த்து தான்... தரத்திற்கு ஒரு விலை வைத்துதான், இயக்குநர், நடிகரின் முந்தைய படத்தின் வெற்றியை அடிப்படையாக வைத்துதான், அப்போதும், இப்போதும் படத்தை வாங்குகிறார்கள். அன்றைய விநியோக காலகட்டத்திலும் பல படங்கள் பெட்டியில் முடங்கின. காரணம், படத்தை முடித்துவிட்டு ரிலீஸ் செய்ய பெரும் தொகை வேண்டும். அது இல்லாமல் முடங்கும். குறைவான பிரிண்ட் போட்டு ரிலீஸ் செய்தாலும் 'பிரிண்ட் காசு கூட தேறாது' என நினைக்கும் குப்பைகளும் முடங்கும். பிளான் இல்லாமல் செலவுகள் எகிறிய பல படங்கள் பாதியில் நிற்கும். லேப்பில் செட்டில்மெண்ட் செய்யாமல், கடனால் பல படங்கள் முடங்கும். இப்படியான காரணங்கள்தான் அப்போது ஆனால் இப்போது படங்கள் முடங்குவது வேறு சில காரணங்களினால்...

A கிரேடு, B கிரேடு , C கிரேடு என மூன்று வகை இயக்குநர் என இயக்குநரின் தரம் பார்த்துதான் இப்போது ஒரு படத்தை மதிப்பீடு செய்கிறார்கள். A கிரேடு இயக்குநர்கள் திறமையான, நன்கு, காலத்தை கணித்து திரைப்படம் இயக்கக் கூடிய, பாணியில் கலக்கக் கூடிய மார்க்கெட் வேல்யூ உள்ள முதல் தர வெற்றிப் பட இயக்குநர்கள். வளர்ந்துவிட்ட நடிகர்கள், நிறுவனங்கள் எப்போதும் இவர்களையே நாடும்.

B கிரேடு இயக்குநர்கள் கதையை மட்டுமே நம்பி, கதாபாத்திரத்திற்கு தோதுவான ஒரளவு பிரபலமான நடிகர்களை நடிக்க வைத்து, Drama making-ல் படம் இருந்தாலும் ரசிகர்களை கட்டிப் போட்டு கதையை நகர்த்தும் இயக்குநர்கள். இவர்களின் வெற்றி, ஏற்றம் இறக்கங்களோடு இருக்கும். இதை முன் மாதிரியாக கையில் எடுத்து, முதல் படம் இயக்கும் அறிமுக இயக்குநர்களும் இந்த B கிரேடில் அடங்குவார்கள். இந்த A கிரேடு, B கிரேடு இயக்குநர்களின் படங்கள் முடங்குவதில்லை. ஆனால் பெரும்பாலும் C கிரேடு இயக்குநர்களின் படங்கள் முடங்கும். இந்த c கிரேடு இயக்குநர்கள் என்பவர்கள் யார் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

அவர்கள் பிரபலமான இயக்குநர்களின் உதவி இயக்குநராக இருக்கலாம். உப்புமா படங்களில் பணிபுரிந்த உதவி இயக்குநராகவும் இருக்கலாம். திரைப்பட கல்லூரியில் படிப்பை முடித்தவர்களாகவும் இருக்கலாம். ஷார்ட் பிலிம் எடுத்தே அனுபவம் கற்ற நபராகவும் இருக்கலாம். 'நான் திரைப்பட இயக்குநர்' என வாயாலே படம் ஓட்டும் பலே கில்லாடியாகவும் இருக்கலாம். இவர்கள் எப்படியோ ஒரு தயாரிப்பாளரை பிடித்து படம் இயக்கி, ரிலீஸ்க்கு காத்திருக்கிறார்கள். இவர்கள்தான் c கிரேடு இயக்குநர்கள்.

இவர்களின் முதல் பட கதை, கதாபாத்திர தேர்வு, கதைக்களம், கதை சொல்லல், கற்பனை - இவைகளை அவர்கள் கையாண்ட விதம் - இப்படி அவர்களைப் பற்றிய அத்தனை ஜாதகமும் அந்த முதல் படத்தில் தெரிந்து விடும்.

அவர்களின் முதல் பட வெற்றியே B கிரேடு, A கிரேடு என அவர்களை வளர்ச்சியின் பாதையை நோக்கி இட்டுச் செல்லும். ஆனால் இப்படி உயர்பவர்கள் சிலர் தான். பலர் c கிரேடிலேயே நின்று விடுவார்கள். அதிலேயே தொடர்வார்கள். அழிக்க முடியாத ஒன்றில் நாம் எழுதும் போது, அதாவது கல்வெட்டில் எழுதும்போது மிக கவனம் தேவைதானே...! தவறாக எழுதி விட்டால், உங்கள் உழைப்பும், அந்த கல்லும் வீண் தானே?... இதை போல்தான் ஒரு திரைப்படம். தவறாக எடுத்து வெளியே விட்டு விட்டால் உங்களால் அதை திரும்பி, அதே மொழியில் எடுக்க முடியாது. இந்த சின்ன விஷயம்கூட தெரியாமல் படம் எடுத்தவர்கள்தான் c கிரேடு இயக்குநர்கள்.

இவர்களின் பல படங்கள் முடங்குவதற்கு முக்கிய காரணம், அப்படம் திரைப்படம் என்ற தகுதியை பெற்று இருக்காது. திரை ரசிகர்களின் நேரத்தை நீங்கள் வீணாக்கலாம்... மொக்கையாக காட்சி வைத்து நத்தையாக உங்கள் படத்தை நகர்த்தலாம்... பொருத்துக் கொள்வார்கள்... அடுத்து சிறந்த ஒன்றை கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில் மீண்டும் உங்களை தேடி வருவார்கள். ஆனால் அவர்கள் (திரை ரசிகர்கள்) முட்டாள்கள் என்று நீங்கள் ஒன்றை எடுத்து வைத்தால் கடுப்பாகி விடுவார்கள். அடுத்து நீங்கள் இருக்கும் திசை பக்கமே தலை வைத்து படுக்க மாட்டார்கள். அப்படி ரசிகர்களை கடுப்பேத்தி காணாமல் போன அறிமுக இயக்குநர்கள்... அறிமுக நடிகர்கள், மற்றும் வாரிசு இயக்குநர்கள்... வாரிசு நடிகர்கள் ஏராளம்.

இது ஏன்?... தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர்களும், நடிகர்களும் இந்த கடுப்பேத்தி காலாராவில் காணாமல் போய் இருக்கிறார்கள். 'ட்ரெண்டிங் மாறி விட்டது... அதனால் ஒதுங்கி இருக்கிறோம்...' என பீலா விடும் இவர்களின் கடைசி படங்களை பாருங்கள்... அது கடுப்பேத்தி காவியமாக இருக்கும். இந்த கடுப்பேத்தி காவியங்களைத்தான் பெரும்பாலும் c கிரேடு இயக்குநர்கள் எடுத்து வைத்துக் கொண்டு, அவர்களும் முடங்கி, படத்தையும் முடங்கிப் போக வைத்திருக்கிறார்கள்.

'Facebook-ல் சில ஜால்ராக்கள் பாராட்ட வேண்டும்' என அதிமேதாவித்தனமாக படம் ஒன்றை எடுத்து வைத்துக் கொண்டு, Preview show-வில் மட்டும் படம் ஒட்டிக் கொண்டிருக்கும் பலர் இப்போதும் இருக்கிறார்கள். 'எடிட்டிங் ஆர்டரை மாற்றி, இரண்டு காட்சிகளை ரீ சூட் பண்ணி, சில கண்றாவிகளை வெட்டி எரிந்துவிட்டு வாருங்கள்...' எனச் சொன்னாலும்... 'Bro... Fantasy formats bro... Different screenplay... உங்களால் இதை புரிந்து கொள்ள முடியவில்லை...' என முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தால் படம் முடங்கித்தான் கிடக்கும்.

ஒன்றை நினைவில் வையுங்கள்... 'மிளகாய் என்றாலும் அதிலும் சிறந்ததுதான் விற்பனை ஆகும்.'கடுப்பேத்தி காவியத்தை படைக்காமல் தவிர்ப்பது எப்படி?...மக்கள் விரும்புவதை கொடுங்கள்...! நீங்கள் விரும்புவதை எடுத்து வைத்து மக்களை கொல்லாதீர்கள்...! என்பதே திரையரங்கத்துக்கு வரும் சராசரி ரசிகனின் வேண்டுகோளாகும்.

Tags

Next Story