விஜயகாந்தின் நடிப்பு திறமையை கண்டு வியந்த நடிகை ராதா
நடிகை ராதா, நடிகர் விஜயகாந்த்
கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த பல நடிகைகளில் நடிகை ராதாவும் ஒருவர். பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர். ‘இவ்வளவு நடிப்பை இத்தனை நாள் எங்கே வைத்திருந்தாய்?’ என பாரதிராஜாவின் பாராட்டை பெற்றவர் இவர்.
அலைகள் ஓய்வதில்லை மட்டுமில்லாமல் பாரதிராஜா இயக்கிய டிக் டிக் டிக், காதல் ஓவியம், முதல் மரியாதை போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் இவர். முதல் மரியாதை படத்தில் அவர் காட்டிய நடிப்பை உச்சம் என்றே சொல்லாம். அந்த படத்தில் சொந்த குரலில் பேசாத ஒரே காரணத்தால் தேசிய விருதை இழந்தார்.
1980களில் ரஜினி, கமல், பிரபு, விஜயகாந்த், சத்தியராஜ், கார்த்திக் என பலருடனும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். விஜயகாந்துடன் அம்மன் கோவில் கிழக்காலே, உழவன் மகன், நினைவே ஒரு சங்கீதம், சட்டம் ஒரு விளையாட்டு, மணக்கணக்கு, மீனாக்ஷி திருவிளையாடல், உள்ளத்தில் நல்ல உள்ளம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
விஜயகாந்த் மறைந்தபோது அவரின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார் ராதா. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராதா ‘இப்படி ஒரு இடத்திற்கு வந்து விஜயகாந்தை பார்ப்பேன் என நான் கனவிலும் நினைக்கவில்லை. அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டபோதும் அவரின் மனைவி பிரேமலதா என் மகள் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்தி விட்டு போனார். கண்டிப்பாக விஜயகாந்தின் ஆசிர்வாதங்களோடு தான் அவர் வந்திருப்பார்’ என பேசியிருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராதா ‘மண்வாசனை என்றால் அது விஜயகாந்த் தான். அவருடன் படப்பிடிப்பில் இருந்தால் பாதுகாப்பாக உணரலாம். அவ்வளவு நல்ல மனிதர். எதிர்பார்ப்பு இல்லாமல் எல்லோருக்கும் உதவி செய்வார்.
அவருடன் மீனாட்சி திருவிளையாடல் படத்தில் நடித்தேன். அவர் சிவனாகவும், நான் பார்வதியாகவும் இருக்க ஒரு பாடல் காட்சி எடுக்கப்பட்டது. நான் பெரிய டான்சர். ஆடுவது விஜயகாந்த் தானே என சாதாரணமாக இருந்து விட்டேன். ஆனால், சிவனாக அவர் நடித்த விதம், காட்டிய உடல் மொழி, அந்த பார்வை என அசத்தி விட்டார்.
இப்போது போல அப்போது மானிட்டர்கள் இல்லை. எடுத்த காட்சியை உடனே பார்க்க முடியாது. தியேட்டரில் பார்த்தபின் ‘அட விஜயகாந்த் இப்படி நடிப்பார் என தெரிந்திருந்தால் நாமும் நன்றாக நடித்திருக்கலாம்’ என எனக்கு தோன்றியது’ என ராதா கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu