மருதமலையில் எம்.ஜி.ஆர் சின்னப்பாதேவர் செய்து கொண்ட ஒப்பந்தம்

மருதமலையில் எம்.ஜி.ஆர் சின்னப்பாதேவர் செய்து கொண்ட ஒப்பந்தம்
X
எம்.ஜி.ஆரும், சின்னப்பா தேவரும் மருதமலை முருகன் கோயிலில் போட்டுக் கொண்ட ஒப்பந்தம் என்னவென்ற சுவராஸ்யமான தகவலை பார்க்கலாம்.

படம் எடுக்கப் போறேன் நடிச்சுக்கொடுங்க... இந்தாங்க அட்வான்ஸ்” என வெள்ளந்தியாக சொன்ன தேவரை ஆச்சர்யத்துடன் பார்த்தார் எம்.ஜி.ஆர்.

காரணம் எம்.ஜி.ஆருக்கு அப்போது கொஞ்சம் மார்க்கெட் குறைந்திருந்த நேரம். தன் படங்கள் சரிவர போகாத நேரத்திலும் தன் மீது நம்பிக்கை வைத்து தேவர் தன்னை ஒப்பந்தம் செய்ய வந்ததே எம்.ஜி.ஆரின் ஆச்சர்யத்துக்கு காரணம். அதேசமயம் மார்க்கெட் குறைந்திருந்த அந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு அப்போது தேவை ஒரு நல்ல கதையும் அதை எடுக்க சினிமாவில் அனுபவமும் நிர்வாகத்திறமையும் கொண்ட ஒரு பெரிய நிறுவனம். இதனாலேயே பல சிறு நிறுவனங்கள், அனுபவமில்லாதவர்களிள் வாய்ப்புகளை ஒப்புக்கொள்ளாமல் அப்போது தவிர்த்து வந்தார் எம்.ஜி.ஆர்.

மீண்டும் திரையுலகில் புகழ் வெளிச்சம் கிடைக்க ஒரு பெரிய நிறுவனத்தை எதிர்பார்த்திருந்த நேரத்தில் தான் முன்பணத்துடன் அவரைத் தேடி வந்தார் தேவர். படம் இல்லாத நேரத்தில் வரும் பட வாய்ப்பை ஒப்புக்கொள்வது புத்திசாலித்தனம் என்றாலும், 'சினிமா தயாரிப்பில் தேவருக்கு இது முதல்முயற்சி. சினிமா தயாரிப்புக்கு முற்றிலும் புதியவர். ஏற்கெனவே, தான் ஆரம்பித்த சில தொழில்களில் நட்டங்களை சந்தித்தவர்.


அனுபவமிக்க புகழ்பெற்ற நிறுவனங்களே வெற்றியைத் தக்கவைக்கமுடியாமல் தள்ளாடிக்கொண்டிருக்கும் நிலையில் தேவர் படம் தனக்கு எந்தளவுக்கு வெற்றியைத் தரும்' என்ற சிந்தனை எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. ஆனாலும் யோசித்து நேரம் கடத்தவில்லை. தேவர் மீது முழு நம்பிக்கையோடு மறுபேச்சின்றி வீட்டின் வாசலிலேயே வைத்து அட்வான்ஸ் தொகையைப் பெற்றுக்கொண்டார்.

எம்.ஜி.ஆரின் இந்த உடனடி சம்மதத்திற்குப் பின்னணி ஒன்றுண்டு. எம்.ஜி.ஆரும் தேவரும் தொடர்ந்து படங்களில் இணைந்து நடித்துக் கொண்டிருந்த நேரம் அது. 'மர்மயோகி' படத்தில் தேவரும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்துக் கொண்டிருந்த போது இருவருமே சினிமாவில் வெற்றிக்கோட்டைத் தொடப் போராடிக் கொண்டிருந்தார்கள்.

கோவையில் படப்பிடிப்பு நடக்கும் சமயங்களில் இருவருக்கும் ஓய்வு கிடைத்தால் மருதமலைக்குச் செல்வார்கள். ஒருமுறை அப்படிச் சென்றபோது, “முருகா, திறமையும் உழைப்பையும் போட்டு சினிமாவுல நாம் போராடுகிறோம். ஒருநாள் நாம் இதில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். அப்படி நம்மில் யார் ஒருவர் நல்ல நிலைக்கு வந்தாலும் மற்றொருவரை மறக்காமல் கைதூக்கிவிட வேண்டும்”- என்றார் தேவர்.

அதற்கு எம்.ஜி.ஆர், “கண்டிப்பாண்ணே” என உறுதி கொடுத்தார். தேவர் தன்னை ஒப்பந்தம் செய்ய வந்தபோது இந்த 'பழைய ஒப்பந்தம் எம்.ஜி.ஆரின் நினைவில் ஒருகணம் வந்து போயிருக்க வேண்டும். அதனால் தான் படத்தின் வெற்றி தோல்வியைப்பற்றி சிந்திக்காமல் 'தாய்க்குப்பின் தாரம்' என்ற அந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

இரண்டு நண்பர்களின் நம்பிக்கையும் வீண்போகவில்லை. 'தாய்க்குப்பின் தாரம்' வெளியானபின் எம்.ஜி.ஆரின் மார்க்கெட் மீண்டும் உயர்ந்தது. மீண்டும் பெரிய தயாரிப்பாளர்கள் எம்ஜிஆர் வீட்டிற்கு அணிவகுக்க ஆரம்பித்தனர். தேவரும் தொடர்ந்து படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார்.


பெரிய பெரிய நிறுவனங்களே மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு படத்தயாரிப்பில் தேவர் ஒரு விஷயத்தைச் செயல்படுத்திக் காட்டினார். ஆம், தன் படங்களின் பூஜையன்றே அதன் வெளியீட்டுத் தேதியையும் அறிவிப்பார். ஒருநாள் முன்னதாகவோ தள்ளியோ இன்றி, குறித்த நேரத்தில் அது வெளியாகும்.

பெரிய நிறுவனங்களே பின்பற்ற முடியாத இந்த விஷயத்தை தேவர் எளிதாக சாத்தியப்படுத்தினார். தாய்க்குப் பின் தாரம் படத்தில் துவங்கி 1973 ல் வெளியான நல்லநேரம் வரை மொத்தம் 16 படங்கள் தேவர் பிலிம்சுக்கு நடித்துக் கொடுத்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், 'படத்தைத் தாமதமாக முடித்துக் கொடுப்பார்’ என்றும் ’சரியான ஒத்துழைப்பு தரமாட்டார்' என்றும் கூறப்பட்ட எம்.ஜி.ஆரின் இந்தப் படங்கள் அனைத்தும் குறித்த தேதியில் வெளியாயின என்பதுதான்.

இதில் 'தேர்த்திருவிழா' என்ற படம் 16 நாட்களில் தயாரிக்கப்பட்டு வெளியானது என்பது திரையுலகம் இன்றும் நம்பாத விஷயம். இப்படி எம்.ஜி.ஆரை வைத்து, தான் தயாரித்த படங்களை குறித்த தேதியில் வெளியிட்டு அவருக்கு இருந்த அவப்பெயரை நீக்கினார் தேவர்.

எம்.ஜி.ஆர் படங்கள் தாமதமாவதற்கு எம்.ஜி.ஆர் மட்டுமே காரணமில்லை என்று திரையுலகம் அப்போதுதான் உணர்ந்தது. தன் திரையுலக வாழ்க்கையில் ஒரு தயாரிப்பாளரின் படங்களில் எம்.ஜி.ஆர் அதிகம் நடித்திருக்கிறார் என்றால் அவர், சின்னப்பா தேவர் ஒருவர்தான்.

Tags

Next Story