சினிமாவை கலக்கிய நக்மா..! வீழ்ந்த கதை தெரியுமா?

சினிமாவை கலக்கிய நக்மா..!  வீழ்ந்த கதை தெரியுமா?
X

நடிகை நக்மா 

அழகான நடிகை நக்மாவை, 1980ம் ஆண்டு கால கவர்ச்சி நடிகையை வைத்து ஃபீல்டை விட்டு ஓட வைத்த ரகசியம் தெரியுமா?

நக்மா சினிமாவுக்குள் நுழைய முடிவெடுத்தது அவர் அம்மாவின் கணவர் சினிமா தயாரிப்பாளராக இருந்த போது தான். அதாவது இரண்டாவது தந்தை. நக்மாவின் இயற்பெயர் நந்திதா மொரார்ஜி. இவரது தந்தை அர்விந்த் மொரார்ஜி குஜராத்தில் பெரிய தொழிலதிபர். ஷாமா காஸி என்கிற இஸ்லாமியப் பெண்ணான நக்மாவின் அம்மா ஸீமா என்கிற ஹிந்துவாக மாறி அர்விந்த் மொரார்ஜியை மணந்தார். நக்மா பிறக்க இருவரும் பிரிந்தனர். பின் ஸீமா சந்தர் சதானாவை மணந்தார். மூன்று குழந்தைகள். ஜோதிகா, ராதிகா, ஒரு மகன். சூரஜ் சதானா. (மச்சான் சூர்யா சதானா..)

தயாரிப்பாளரான இரண்டாவது தந்தை சந்தர் சதானாவின் செல்வாக்கால் நக்மாவுக்கு முதல் படமே சல்மான் கானுடன். Baagi என்கிற அப்படம் வெற்றிப்படம் தான். வெற்றிக்கு நம்ம இளையராஜாவும் ஒரு காரணம். ராஜாவின் 'ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா' பாடலையும், 'கேளடி கண்மணி பாடகன் சங்கதி' பாட்டையும் கொத்தா தூக்கிட்டு போய் வச்சிட்டாங்க. பாடல் தான் அப்படின்னா கதையும் காப்பி. நாயகியை வெளியில் ஒரு இடத்தில் சந்திப்பான் நாயகன். விரும்புவான். பின் அவரவர் வழியில் போவார்கள்.

ஒரு நாள் நண்பர்களோடு விருப்பமேயில்லாமல் விபச்சார விடுதிக்கு செல்லும்(இதையே எத்தனை படத்தில் உருட்டுவார்களோ?) நாயகன் அங்கு அடைபட்டிருக்கும் நக்மாவை வர்ஜினிட்டியோடு கொண்டு வந்து விடுவான். மாமா வில்லன்கள் துரத்த மீதிக்கதை.

அடுத்த படமே ஆந்திராவுக்கு வந்து விட்டார் நக்மா. சிரஞ்சீவியோடு அவர் நடித்த கரணமொகுடு (தமிழில் மன்னன்) டூப்பர் ஹிட். அதை வாங்கி மலையாள டப் செய்து 'ஏய் ஹீரோ' என வெளியிட்ட கேரள வினியோகஸ்தர் கோடீஸ்வரரானார். நாகார்ஜுனா, சிரஞ்சீவியோடு கெட்ட ஆட்டம் போட்ட அவரை தன் தலையில் சுமந்து வந்தார் ஜென்டில்மேன் சங்கர்.

ஆமாம். சங்கரும், குஞ்மோனும் நடிகையாக கொண்டு வரவில்லை. ஏதோ தேவலோகத்திலிருந்து தேவகன்னிகைகளில் ஒருவரை நாயகியாக்கி கொண்டு வந்திருப்பது போல தாங்கினார்கள். காதலன் பூஜையில் நக்மாவையே பார்த்துக்கொண்டிருந்த நடிகர்கள் பலர். சத்யராஜெல்லாம் ஓப்பன் ஜொள்ளுவிட்டு நக்மாவுக்காக ஜொள் ஸ்டேட்மெண்ட்டெல்லாம் பகுத்தறிவோடு விட்டார். வில்லாதிவில்லன் என்கிற அய்யர் படமெல்லாம் இயக்கினார்.

நக்மாவும் அப்படித்தானிருந்தார். காதலன் படத்தின் ஒவ்வொரு அசைவும் தமிழ் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. சங்கர் குழந்தையை போல் தூளியிலெல்லாம் தூங்க வைத்தார். கோழிக்குஞ்சுகள் கூட நக்மாவைப் பார்த்து கோபாலா கோபாலா எனப்பேசின என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். நக்மா சப்பிப்போட்ட குச்சி மிட்டாயியின் குச்சியை சேகரித்து வைத்து பிரபுதேவா காதலுக்கு சுத்தம், கெட்டம் கிடையாது என்றார். படம் டூப்பர் ஹிட்.

அடுத்து வந்த பாட்சா. ரஜினியோடு நக்மா ஜோடி செம துாள். கும்பகோணம் டிகிரி காபி காம்பினேஷன். நுகர நுகர வாசனை. ஸ்டைலு ஸ்டைலு தான் பாடலெல்லாம் தியேட்டரில் விசில் பறந்தது. நீ நடந்தால் நடையழகு பாடலெல்லாம் ஒரு அழகான நடிகை பாடுவதால் மிக மிக அழகு. ரஜினியே நக்மாவைப்பார்த்து 'நான் ஆசையை வென்ற ஒரு புத்தனுமில்லை' என்றார். செம பாட்டு. தங்க மகளென்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தாள்.

தன் உள்ளத்தை அள்ளித்தா படத்துக்கு நக்மா தான் வேணும் என அடம் பிடித்தார் சுந்தர். தயாரிப்பாளர் இலுப்பைப்பூ ரம்பாவை தான் தந்தார். ஆனாலும் சுந்தர்.சி விடாமல் மேட்டுக்குடி, ஜானகிராமன் என நக்மாவை நாயகியாக இயக்கி ஜென்ம சாபல்யம் அடைந்தார்.

சரத்குமாருக்கு ஒரு நக்மா கனவு இருந்தது. அந்த கனவை நனவாக்க பல கோடிகளில் ஸ்விட்சர்லாந்தின் மலை கிராமங்களில் நக்மாவை ஹயபூஸா பில்லியனில் இருத்தி 'மயில் தோகை அழைத்தால் மனம் உன்னை விரும்பும்' என லக்ஷ்மிகாந்த்- பியாரிலால் பாடல் ஒலிக்க ஹெலிகாப்டரில் ஷுட் செய்து பறந்தார். 'ரகசிய போலீஸ்'......நனவானது. ஆனால் நக்மாவின் கன்டிஷன்களை ஏற்காததோடு, சரத்தின் கடன்களை பார்த்து நக்மாவே விலகினார்.


இது வரை சுகமாக போனது. நாகார்ஜுனாவோடு தெலுங்கில் நடித்த கில்லர், கிரிமினல் டப்பிங் படங்களின் தோல்வியால் நக்மா க்ரேஸ் முடிவுக்கு வந்தது. கொஞ்ச நஞ்சம் இருந்த க்ரேஸையும் பாக்யராஜ் வேட்டிய மடிச்சு கட்டு படத்தில் ஜோடியாக்கி காலி செய்தார்.

அரவிந்தன், வேட்டிய மடிச்சுக்கட்டு தோல்வியால் தீனா படத்தில் ஒரு பாடலுக்கு நடித்தார் நக்மா. வத்திக்குச்சி பத்திக்காதுடா பாடலுக்கு நக்மா ஆட காரணம் அஜித்தோடு சிட்டிசன் பட வாய்ப்பு தான். மிகப்பெரிய Come back எதிர்பார்த்திருந்த நக்மாவுக்கு வாய்ப்பு அஜித்தோடு என்கிற போது அதையே முழுதாக நம்பி இருந்தார்.

சிட்டிசன் படத்தில் நக்மாவுக்கு சிபிஐ ஆபிசர் ரோல். செம கம்பீரமான இன்வெஸ்டிகேடிங் ஆபிஸர் பாத்திரம். நக்மாவுக்கு சரியான குரலை அது வரை தந்திருந்தவர் நடிகை சரிதா. அந்த குரல் காதலன் முதலே அழகாக இருந்தது.

ஆனால் இயக்குனர் சரவண சுப்பையா நாற்பது வயதுக்கு மேலான சிபிஐ ஆபிஸர் குரல் கம்பீரமாக இருக்க வேண்டும் என ஒரு குரலை தேர்ந்தெடுத்தார். அந்த குரல் ஒரு கவர்ச்சி நடிகையுடையது. அவரும் கம்பீரமாக பேசினார்.

படம் ரிலீசானது. குரல் படத்தில் ஆண் குரலைப் போல் ஒலித்ததாக பலரும் விமர்சித்தனர். சுத்தமாக எடுபடாமல் மட்டுமல்ல...நக்மா மேலிருந்த காதலன் அழகி இமேஜும் காணாமல் போனது. அது வரை சேர்த்து வைத்திருந்த நாயகி இமேஜும் தகர்ந்து மும்பைக்கு பெட்டிக்கட்டிக்கொண்டு போனார் நக்மா. அதன்பின் போஜ்புரி படங்களில் ஹிட்டானது தனிக்கதை. மிழ்நாட்டில் நக்மாவை காலி பண்ணிய அந்த குரலுக்கு சொந்தக்காரர் வேறு யாருமல்ல... நம்ம கவர்ச்சி நடிகை அனுராதா....

(அந்த காலகட்டத்துல ரசிகர்களின் ஜொள்ளுவேற ஆறாக ஓடியதுன்னா நக்மாவின் புகழ் எப்டீ இருந்திருக்கும் பாருங்க)

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!