கொரோனா -3வது அலையை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு: மக்களே விழிப்புணர்வு மிக முக்கியம்!!

கொரோனா -3வது அலையை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு: மக்களே விழிப்புணர்வு மிக முக்கியம்!!
X
கொரோனா தொற்றின் 3வது அலை ஆகஸ்ட் மாதம் கடைசியில் தொடங்க உள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள தமிழக அரசு முழு வீச்சில் தயாராகி வருகிறது.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் ஏற்பட்ட பலத்த பாதிப்பினை பாடமாக எடுத்துக் கொண்ட தமிழக சுகாதாரத்துறை, மூன்றாவது அலையினை எதிர்கொள்ள முழு வீச்சில் தயாராகி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் முதலாவது அலையினை மத்திய, மாநில சுகாதாரத்துறையினர் எளிதில் சமாளித்தனர். ஆனால் இரண்டாவது அலை இவ்வளவு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் என யாரும் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

இரண்டாவது அலையில் கொரோனா இறப்புகள் பல மடங்கு உயர்ந்தன. தவிர கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களில் பலர், அடுத்து ஏற்பட்ட பக்கவிளைவுகள் காரணமாக உயிரிழந்தனர். உயிர் பிழைத்தவர்களுக்கும் ரத்தக்கொதிப்பு, தலைசுற்றல், நினைவு தடுமாற்றம், ரத்த சர்க்கரை, மனநல பாதிப்பு, பதட்டம், துாக்கமின்மை போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.

இவர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த பின்னரும் அடுத்து தொடர்ச்சியாக இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை சிகிச்சை பெற வேண்டி இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக கருப்பு பூஞ்சை தொற்று தமிழக அரசினை உலுக்கி எடுத்து விட்டது. இதற்கான காரணம் என்ன என்பது கூட இதுவரை கண்டறியப்படவில்லை.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான காரணங்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு வழியாக பெரும் போராட்டத்திற்கு பின்னர் இரண்டாவது அலை சற்று ஓய்ந்துள்ளது. தமிழகத்தின் தினசரி பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. ஆனால் இதற்காக நிம்மதி பெருமூச்சு விடக் கூட தமிழக சுகாதாரத்துறைக்கு நேரம் இல்லை.

காரணம் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வாசலில் வந்து நிற்கிறது. ஆகஸ்ட் இறுதியில் அதன் பாதிப்பு தொடங்கும். செப்டம்பர், அக்டோபரில் உச்சத்தை எட்டும் என மத்திய, மாநில சுகாதாரத்துறைகள் கணித்துள்ளன. இரண்டாவது அலையை விட மூன்றாவது அலையில் பரவும் வீதம் மிகவும் அதிகமாக இருக்கும். குறிப்பாக இரண்டாவது அலை உச்சத்தில் இருக்கும் போது ஒரு மாவட்டத்தில் தினசரி பாதிப்பு ஆயிரமாக இருந்தது என்றால்,

அந்த மாவட்டத்தில் 3வது அலை உச்சத்தில் இருக்கும் போது தினசரி பாதிப்பு 2 ஆயிரமாக இருக்கும். இதில் 50 சதவீதம் குழந்தைகளாக இருப்பார்கள். அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுங்கள் என மருத்துவத்துறையின் சில நிபுணர்கள் அரசினை எச்சரித்துள்ளனர்.

மருத்துவத்துறையிலேயே ஒரு பிரிவினர், நாட்டில் 40 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டது. மொத்த மக்கள் தொகையில் 67 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி உருவாகி விட்டது. கொரோனா தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 40 கோடி மட்டுமே. தவிர மூன்றாவது அலையில் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை.

இதில் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அப்படியே குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும், அவர்களது உடலில் உள்ள எதிர்ப்பாற்றல் அவர்களை பாதுகாத்து விடும். எனவே குழந்தைகளுக்கு சாதாரண சிகிச்சை கொடுத்தாலே போதும். குறைந்த சதவீதத்தினருக்கு மட்டுமே ஆக்ஸிஜன் வரை தேவைப்படும்.

ஆனால் மூன்றாவது அலையில் பாதிக்கப்படும் பெரியவர்களுக்கு மிகவும் கூடுதல் கவனம் எடுத்து சிகிச்சை அளிக்காவிட்டால் சிக்கலாகி விடும் என மருத்துவத்துறையின் சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வரும் என்பது உறுதியாகி விட்டதால், முதல் கட்ட நிபுணர்களின் கருத்துக்களையே மத்திய, மாநில சுகாதாரத்துறைகள் எடுத்துக் கொண்டுள்ளன.

இதனால் இரண்டாவது அலையில் கற்றுக்கொண்ட பாடம் திரும்பவும் வந்து விடக்கூடாது என தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சிகிச்சை வசதிகளை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல் கட்டமாக அத்தனை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜன் எவ்வளவு என்பதை மதிப்பீடு செய்து, தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கவும், உற்பத்தி திறனை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல் நோய் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு கொரோனா சிகிச்சையின் போதும், தொற்றுக்கு பிந்தைய சிகிச்சையின் போதும், என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை கணித்து, அந்த சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை இருப்பு வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் அத்தனை மாவட்டங்களிலும், ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், சாதாரண படுக்கைகள் இரண்டின் எண்ணிக்கையினையும் இருமடங்கு உயர்த்தி தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான படுக்கை வசதிகள் எல்லா மருத்துவமனைகளிலும் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டாவது அலையில் ஏற்பட்டது போல், கழிப்பிடப்பற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் தலைமை மருத்துவமனை, அதிக படுக்கை வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தவிர நர்சிங், இதர சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கையினை தற்போது உள்ளதை விட இருமடங்கு அதிகரிக்கும் வகையில் கூடுதல் பணியிடங்களை உருவாக்கி பணி நியமனம் செய்யவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அவுட்சோர்சிங் பணியாளர்களை ஒப்பந்த பணியாளர்களாக மாற்றி கூடுதல் சம்பளம் வழங்கி, ஒவ்வொருவருக்கும் பணி ஒதுக்கீடு வழங்க மருத்துவ, சுகாதாரத்துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 3வது அலையில் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களை உடனே வீட்டிற்கு அனுப்பாமல்,

கொரோனா தொற்றுக்கு பிந்தைய சிகிச்சை முகாமிற்கு மாற்றி, அவர்களின் உடல் பாதிப்புகளை கண்டறிந்து சிகிச்சை அளித்து, முழு குணம் அடைந்த பின்னரே வீட்டிற்கு அனுப்ப வேண்டும். உயிரிழப்புகளை பெருமளவில் குறைக்க வேண்டும். இதற்கு தேவையான டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், மருந்துகள் என அத்தனையும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.


தமிழக சுகாதாரத்துறை தற்போது அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் செய்ய மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. ஆக மொத்தத்தில் 3வது அலையில் எப்போது வரும், என்ன செய்யும் என்பது பற்றிய உறுதியான ஆதாரங்கள் கையில் இல்லாவிட்டாலும், என்ன நடந்தாலும் எதிர்கொள்ள தயாராகவே மருத்துவ, சுகாதாரத்துறைகள் உள்ளன.

பொதுமக்களை பொறுத்தவரை கொரானாவால் உயிரிழப்பு, தொற்று ஏற்பட்டு சிரமம் அடைந்தவர்களின் குடும்பங்களில் மட்டும் தான் 3வது அலை குறித்த அச்ச உணர்வு உள்ளது. பாதிப்பு ஏற்படாத குடும்பங்களில் விழிப்புணர்வு இல்லை. இது கொரோனா 3வது அலை பெரிய அளவில் பரவ வழிவகுத்து விடும். எனவே மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா