புதியதாக 83482 பேருக்கு வேலை; முதல்வர் நெகிழ்ச்சி
முதலீட்டாளர்களின் முதல் முகவரி நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உடன் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கூட்டாக எடுத்த புகைப்படம் .
முதலீட்டாளர்களின் முதல் முகவரி நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு 35 நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
இதில், தமிழகத்தின் பொருளாதாரம் புத்துணர்வு பெற்று வருவதாகவும், 35 நிறுவனங்கள் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு ரூ.28508 கோடி ரூபாய் முதலீடு கிடைக்கப்பெற்றதால் புதியதாக 83482 பேருக்கு வேலை கிடைக்கும் முதல்வர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
முதலீட்டாளர்களின் முதல் முகவரி நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் கலந்துகொள்வதில் பெருமைப்படுகிறேன். அரசின் அழைப்பை ஏற்று வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி.
தமிழகம் என்பது பண்பாட்டின் முகவரியாக இருந்தது. அத்தகைய தமிழகம், முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக மாறவேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம். நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த காலம் கொரோனா காலம் ஆகும். அதனை துணிச்சலான, துரிதமான நடவடிக்கைகளின் காரணமாகக் கொரோனாவை வென்ற காலமாக இதனை மாற்றினோம்.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்குத் தாராளமாக நிதி வழங்குங்கள் என்று நான் கோரிக்கை வைத்தேன். அதனை ஏற்று இந்த இரண்டு மாத காலத்தில் ரூ.489.78 கோடி ரூபாய் நிதி திரண்டுள்ளது.தமிழகத்திற்கு தொழில் தொடங்க வாருங்கள் என்று அரசு அழைப்பதைத் தாண்டி, தமிழக தொழிலபதிபர்கள், மற்ற நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்க நான் கேட்டுக்கொள்கிறேன்.
முதலீட்டாளர்களின் முதல் முகவரியாகத் தமிழகம் நிச்சயம் மாறப் போகிறது.உலகளவில் உற்பத்தித்துறை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இருந்தாலும், தமிழகத்தின் பொருளாதாரம் புத்துணர்வு பெற்று இயங்க ஆரம்பித்துள்ளது. 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட பொருளாதாரமாக (GDP Economy) தமிழகத்தை உருவாக்குவதே, எங்கள் அரசின் குறிக்கோள்.
முதலீட்டாளர்களுக்கு மட்டுமின்றி, புதிய முதலீட்டாளர்களுக்கும் உதவிடும் வகையில், 24 துறைகளின் 100 சேவைகள் கொண்ட, ஒரு மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
இன்று புதிய தொழில்கள் துவங்க, 35 நிறுவனங்கள் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலமாக 17,141 கோடி ரூபாய் முதலீடு கிடைக்கிறது. 55 ஆயிரத்து 54 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது.
9 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன் மூலமாக 4,250 கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது. 21,630 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
5 நிறுவனங்களின் வணிக உற்பத்தி துவக்கி வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக 7,117 கோடி முதலீடு கிடைக்கும். 6,798 பேருக்கு வேலை கிடைக்கும்.
மொத்தமாகச் சொல்வதாக இருந்தால் இன்று உறுதி செய்யப்பட்டுள்ள 49 திட்டங்களின் மூலமாக 28 ஆயிரத்து 508 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக 83 ஆயிரத்து 482 பேருக்கு வேலை கிடைக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் உயர்கல்வி - சமூக மேம்பாடு - தொழில் வளர்ச்சி ஆகிய மூன்றும் ஒரே நேரத்தில் சீராக வளரவேண்டும் என்பதே எமது அரசின் இலக்கு ஆகும். மூன்றும் ஒன்றாக வளர்வதுதான் சீரான வளர்ச்சி. இம்மூன்றும் தனித்தனியாக வளர்ந்துவிட முடியாது. ஒன்றின் வளர்ச்சிக்கு மற்றொன்று துணை செய்வதாக அமையவேண்டும். அந்த வளர்ச்சிக்குத் தமிழக தொழில் நிறுவனங்கள் தங்களது முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
அதிகப்படியான முதலீடுகளைத் தாருங்கள். அதன் மூலமாகத் தமிழக இளைஞர்களின் மனிதவளத்துக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்பை உறுதி செய்யுங்கள். இதன் மூலமாகத் தமிழ்ச்சமூகத்தின் மேன்மைக்கு உங்களது பங்களிப்பைச் செய்யுங்கள் என்று இக்கூட்டத்தின் மூலமாக தமிழக தொழில் துறையினருக்கு மட்டுமல்ல, தமிழக எல்லையைத் தாண்டிய தொழில் நிறுவனங்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
தொழில் முதலீட்டாளர்களின் முதல் முகவரியாகத் தமிழக மாற்றத் திட்டமிட்டு உறுதியாகவும் திறனுடனும் செயல்படும் அரசின் தொழில்துறை அமைச்சர், தொழில்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் அதிகாரிகள் அனைவரையும் மனதாரப் பாராட்டுகிறேன். உங்கள் காலம் தொழில்துறையின் பொற்காலமாக விளங்கியது என்ற பெயரைப் பெற்றுத் தருவீர்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. அத்தகைய சூழலை உருவாக்குவதற்கு இந்த அரசு அனைத்து ஏற்பாடுகளையும் திறந்த மனதுடன் செய்துதரத் தயாராக இருக்கிறது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu