வரம்பு மீறும் கனடா ; வரிந்து கட்டும் பாரதம்..!

துருக்கி, ஈரான், மலேசியா, மாலத்தீவு வரிசையில் கனடாவும் இந்தியாவிடம் வசமாக சிக்கிக் கொண்டது.

Update: 2024-10-18 04:47 GMT

பிரதமர் மோடி மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(கோப்பு படம்)

கடந்த ஆண்டு கனடாவில் மர்மமாக சுட்டுக் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்திக் சிங் நிஜார் கொலையில் இந்திய உளவுத்துறையின் பின்னணி இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக பாரதத்தின் மீது குற்றம் சாட்டினார். அதைத்  தொடர்ந்து இருநாட்டு உறவுகள் சீர்கெட்டு இரு நாடுகளின் இடையே தூதரக அளவிலான அடிமட்ட பேச்சுவார்த்தை கூட முறிந்தது.

பாரதத்தின் நியாயத்தை உணர்ந்த கனடா நாட்டு எதிர்க்கட்சிகள் முதல் சாமானிய மக்கள் வரை கனடா பிரதமருக்கு எதிராக தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படையாக பதிவு செய்தார்கள். உலக அளவில் இந்தியாவிற்கு ஆதரவாக கனடாவிற்கு எதிரான கனத்த மௌனம் நிலவியது.

வேறு வழியில்லாமல் கனடா நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் இறங்கி வந்து இருநாட்டு உறவை சீர் செய்ய படிப்படியாக நிலைமை ஓரளவு சீரானது. கடந்த மாதம் சர்வதேச அளவிலான ஒரு சந்திப்பின் போது எதேச்சையாக பாரத பிரதமர் மோடியிடம் தாமாக முன்வந்து பேச முயன்ற கனடா பிரதமருக்கு காலிஸ்தான் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டையும் இந்திய இறையாண்மை எதிர்ப்பு நிலைப்பாட்டையும் கனடா மாற்றிக் கொள்ளாத வரை பாரதத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் வராது என்பதை பிரதமர் மோடி முகத்தில் அடித்தார் போல் சொல்லி விட்டு வர உலக அரங்கில் கனடா பிரதமர் தலை குனிந்தார்.

இந்நிலையில் பாரதத்தின் மீது வன்மத்தோடு மீண்டும் ஹர்திப் சிங் கொலையில் இந்திய உளவுத்துறை மற்றும் கனடா நாட்டு இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட்டத்தில் தொடர்பு இருப்பதற்கு வலுவான ஆதாரம் இருப்பதாகவும் அதை பாரத வெளியுறவுத் துறையிடம் சமர்ப்பித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்ற அளவில் கனடா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பேச நிலைமை மீண்டும் சிக்கலாகிறது.

சர்வதேச ராஜிய விதிமுறைகளுக்கு எதிராக கனடா நாட்டில் இருந்த இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி நேரில் அழைத்து விசாரணை செய்ததை பாரதம் கடுமையாக கண்டித்தது. உடனடியாக கனடாவில் இருக்கும் பாரதத்தின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் அவர்களின் குடும்பத்தாரை பாதுகாப்பு கருதி திரும்ப அழைத்துக் கொள்வதாக அறிவித்தது. மேலும் பாரதத்தில் இருக்கும் கனடா நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு காலக்  கெடு விதித்து பாரதத்தை விட்டு வெளியேறுவதற்கு உத்தரவு பிறப்பித்தில் கனடா அதிர்ந்து நிற்கிறது.

சில வாரங்கள் முன்பு பிரதமர் மோடியிடம் பேசி எப்படியாவது இருதரப்பு உறவை சீர் செய்து சொந்த நாட்டில் இழந்த செல்வாக்கை மீண்டும் நிலை நிறுத்தலாம் என்று நினைத்த கனடா பிரதமருக்கு பிரதமர் மோடி அழுத்தம் திருத்தமாக ட்ரூடோ அரசில் காலிஸ்தான் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாடு இருக்கும் வரை பாரதத்தின் நிலைப்பாடு இப்படியே தொடரும் என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

இது ட்ரூடோவிற்கு சொந்த நாட்டிலும் கனடா அரசியல் மட்டத்திலும் பெரும் எதிர்ப்பை அதிருப்தியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அதை சரி செய்யும் விதமாகவும் பாரதத்தின் மீதே தவறு இருப்பதாக சர்வதேச அரங்கில் எப்படியாவது நிலைநிறுத்த வேண்டும் என்ற வன்மத்தோடு மீண்டும் பாரதத்தின் மீது ஒரு குற்றச்சாட்டை அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் கனடா பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சரும் மீண்டும் கையில் எடுத்ததை தொடர்ந்து இருநாட்டு உறவுகள் சிக்கலாகிறது.

பாரதம் தெள்ளத் தெளிவாக கனடா நாட்டுடனும் மக்களுடனும் நட்புறவு நீடிக்கிறது. ஆனால் கனடாவில் இருக்கும் சீக்கிய மக்களின் வாக்கு வாங்கி அரசியலுக்காக காலிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதும் அதன் மூலம் பாரதத்தின் பிரிவினையை ஆதரிப்பதும் தொடர்ந்து பாரதத்தின் இறையாண்மையை அவமதிப்பதுமாக இருக்கும் ஜஸ்டின் ரூடோ தலைமையிலான அரசின் மீது மட்டுமே எங்களுக்கு அதிருப்தியும் வெறுப்பும் இருக்கிறது என்பதை பாரதம் சர்வதேச அரங்கில் உறுதி செய்து விட்டது.

இதன் மூலம் பாரதம் ஹர்தீப் சிங் கொலை வழக்கில் கடந்த ஆண்டு முதல் எடுத்த நிலைப்பாடு இப்போதும் தொடர்வதை மீண்டும் உறுதி செய்கிறது. ஆனால் ஆதாரம் இருக்கிறது என்று வெற்று கூச்சல் போட்டுக் கொண்டிருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ அரசிற்கு இதன் மூலம் பெரும் தலைவலி தொடங்குகிறது. இனி அவர்கள் சொந்த நாட்டு மக்கள் முதல் எதிர்கட்சிகள் ஊடகங்கள் வரை பாரதத்திற்கு எதிரான நிலைப்பாடு கனடா நாட்டு குடியுரிமை பெற்ற காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்திப் சிங் கொலை வழக்கில் பாரதத்தின் பின்னணி உள்ளிட்டவற்றிற்கு அவர்கள் சட்டபூர்வமான ஆவணங்களை ஆதாரமாக முன்வைக்க வேண்டும்.

இல்லையேல் பாரதத்தின் மீது ஓராண்டு காலமாக தொடர்ந்து வன்மத்தோடு ட்ரூடோ அரசு முன் வைத்த குற்றச்சாட்டுகள் விமர்சனங்கள் எல்லாமே காலிஸ்தான் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாடு மற்றும் அங்கிருக்கும் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ முகவர்களுடனான தொடர்பின் மூலமான வெளிப்பாடு என்பது நிரூபணம் ஆகிவிடும்.

மேலும் கனடாவில் கணிசமான வாக்கு வங்கியில் இருக்கும் சீக்கியர்களின் வாக்கு வங்கிக்காக காலிஸ்தான் பிரிவினைவாதிகளை ஆதரிப்பதும் அதன் மூலம் பயங்கரவாதிகளுக்கு கனடா நாட்டு நிலப்பரப்பில் குடியுரிமை வழங்கி ஆதரிக்கும் ஜஸ்டின் ட்ருடோவின் உண்மை முகம் அம்பலமாகிவிடும். இந்த நிகழ்வுகள் அவருக்கு சொந்த நாட்டில் இருக்கும் செல்வாக்கை பாதாளத்திற்கு கொண்டு போவதுடன் அவரது அரசியல் வாழ்க்கையும் அஸ்தமித்து விடும்.

ஏற்கனவே தங்களது நாட்டில் அந்நிய நாட்டு பயங்கரவாதிகளுக்கு புகலிடம் தருவதும் வாக்கு வங்கி அரசியலுக்காக அதை ஆளும் அரசே முன் நின்று செய்வதும் அதன் காரணமாக பாரத கனடா உறவுகள் சீர்குலைவதிலும் கனடா நாட்டு மக்கள் பெரும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். இதை தவிர்த்து கடந்த காலங்களில் பாரதத்தின் இறையாண்மையின் மீது அத்து மீறிய துருக்கி, ஈரான், மலேசியா, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளின் மீது பாரதம் எடுத்த கடுமையான வெளியுறவு நடவடிக்கைகளை வர்த்தக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கனடா மீதும் எடுக்கும் பட்சத்தில் கனடா நாட்டின் உள்நாட்டு வர்த்தகம் பொருளாதாரம் மருத்துவத்துறை எல்லாமே ஸ்தம்பித்துப் போகும் நிலை வரும்.

இதனால் அங்குள்ள ஊடகங்கள் எதிர்க்கட்சிகள் பொது மக்கள் என்று பலருக்கும் உரிய விளக்கம் தரவேண்டிய நிர்பந்தம் கனடா நாட்டு ஆளும் அரசின் முன் சவாலாக நிற்கிறது. இவையெல்லாம் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கனடாவை பின்னிருந்து இயக்கும் சில்மிஷ வேலை என்பது சர்வதேச அரங்கில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

இதன் மூலம் ஐந்து கண் என்னும் சர்வதேச உளவு அமைப்பில் பாரதமும் ஜெர்மனியும் இணைவதன் மூலம் ஏழு கண் உளவு அமைப்புகளாக மாற இருக்கும் கட்டமைப்பை விரும்பாத சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் சதி அம்பலமாகும்.

இன்னொரு பக்கம் இந்த ஏழு கண் அமைப்பில் பாரதம் இணைவதன் மூலம் சர்வதேச அளவில் பயங்கரவாத எதிர்ப்பு உள்நாட்டு பாதுகாப்பு உளவு தகவல் பரிமாற்றம் ஒத்துழைப்பு உள்ளிட்ட விஷயங்களை இந்த உளவுத்துறை கூட்டமைப்பின் அனுகூலங்களை எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்கா, பிரிட்டன் ஆஸ்திரேலியா நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஐந்தாவது நாடாக இருக்கும் கனடா பாரதத்தின் மீது தொடர்ச்சியாக இது போன்ற வெறுப்பும் வன்மத்தையும் வெளிப்படுத்துவதில் கடும் அதிருப்தியில் இருக்கிறது.

காரணம் தற்போதுள்ள சர்வதேச அரசியல் சூழலில் பாரதத்தின் வெளியுறவுத்துறை ராஜிய பரிபாலனம் பாரதத்தின் உளவு அமைப்பான இந்தியன் ராவின் பலமான கட்டமைப்பும் பல்வேறு நாடுகளில் பாதுகாப்பிற்கு அத்தியாவசியமாகிறது. அதை எதிர்நோக்கி காத்திருக்கும் போது அதை சீர்குலைக்கும் விதமாக கனடா செயல்படுவது சர்வதேச அளவில் பாதுகாப்பு ஒத்துழைப்பு உளவு தகவல் ஒருங்கிணைப்பு உள்ளிட்டவற்றை குலைக்கும்.

இதன் மூலம் உலகை அச்சுறுத்தி வரும் பிரிவினைவாதம் மத பயங்கரவாதம் உள்ளிட்டவற்றை எதிர்கொள்வதில் பாரதத்தின் முழுமையான ஒத்துழைப்பு பங்களிப்புகளை மேற்குலக நாடுகள் குறிப்பாக வல்லரசு நாடுகள் பெற முடியாத சூழல் வரும். அதற்கு காரணமான கனடாவை ஒட்டுமொத்த சர்வதேச நாடுகளும் உலுக்கி எடுக்கும்.

மொத்தத்தில் ஆப்பசைத்த குரங்காக ஜஸ்டின் ட்ரூடோ சிக்கிக் கொண்டு விழிக்கிறார். அவருக்கு அனுப்பிய கண்டன கடிதத்தில் கனடா நாட்டு அரசு என்று குறிப்பிடாமல் ஜஸ்டின் ட்ரூடோ அரசின் செயல்பாடுகள் என்று பாரதம் தெளிவாக பதிவு செய்திருப்பதன் மூலம் கனடாவும் பாரதமும் இப்போதும் நட்பு நாடுகள் தான். வன்மத்தோடு பாரதத்திடம் பகையை வளர்ப்பது ஜஸ்டின் ட்ரூடோ அரசு மட்டுமே என்று பாரதம் பொது வெளியில் நிரூபித்து விட்டது.

இந்த மூக்குடைப்பு ஜஸ்டின் ட்ரூடோவிற்கு மாறாத அவமானம். இதுவரையில் உலகில் எந்த ஒரு பிரதமரும் இது போன்றதொரு கண்டனத்தை எதிர்கொண்டதில்லை என்ற வகையில் இது கனடா நாட்டு அரசியல் அமைப்பிற்கும் ஒரு பெருத்த அவமானம். இதற்கு காரணமான ஜஸ்டின் ட்ரூடோ அரசு மற்றும் அவர்களோடு கூட்டணியில் இருந்து அவர்களை ஆட்டுவிக்கும் கூட்டணி அரசியல் கட்சிகள் எல்லாமே கனடா நாட்டு மக்களின் வெறுப்பிற்கும் சர்வதேச நாடுகளின் கடும் கண்டனத்திற்கும் ஆளாகி நிற்கிறது.

Tags:    

Similar News