இலங்கை மட்டக்களப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை
முககவசம் அணியாத 50 பேரை இலங்கை மட்டக்களப்பு காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இலங்கை கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. அத்தனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு அலுவலர்கள், சுகாதார பரிசோதகர்கள், காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மக்களை பாதுகாக்கும் பொருட்டு, பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றி, முககவசத்தை அணிய வேண்டும் என்பதை கட்டாய படுத்தியுள்ளனர். பொது இடங்களில் முககவசம் அணியாதோர் மீது எச்சரிக்கையுடன் கூடிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் முகக்கவசம் அணியாதோர் மீதும், சுகாதார நடைமுறைகளை கடை பிடிக்காதவர்கள் மீதும் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது செய்தனர்.
இன்று (திங்கட்கிழமை) காலை மட்டக்களப்பு சிரேஷ்ட போலிஸ் அதிகாரி சுதத் மாரசிங்க தலைமையில், மட்டகளப்பு நகர பகுதியில் இடம்பெற்ற விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, மட்டகளப்பு நகர்ப்பகுதியில் முகக்கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதோர் 50 பேர் கைது செய்யப்பட்டு அன்டிஜன் பரிசோதனைக்கு உட்ப்படுத்தபட்டனர்.
அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் மட்டு நகர் பகுதிகளில் 2 பிரிவாக சென்று பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபடத்துடன் தொற்று நீக்கும் வகையில் கிருமி நாசினி திரவம் தெளிக்கப்பட்டது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று 15 நபர்களும், இன்று 8 நபர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 4 மரணங்கள் ஏற்பட்டுள்ளது.