நீலகிரி மாவட்டத்தில் நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்
உதகையில் இருந்து செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும், சமவெளியில் இருந்து வரும் வாகனங்கள் குன்னூர் சாலையில் அனுமதிக்கப்படும்.
கோடை சீசன், நீலகிரி மாவட்டத்தில் தொடங்கியுள்ளதை அடுத்து மலைப்பாதையில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உதகை - குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில், நாளை 16 ந் தேதி முதல், ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சித் தலைவர் அம்ரித் கூறினார்.
உதகையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மலைப்பாதையில் வாகன நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கவும் பாதுகாப்பு கருதியும், உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும், மறுமார்க்கத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரும் அனைத்து வாகனங்கள் குன்னூர் வழியாக அனுமதிக்கப்படும். சரக்கு வாகனங்கள் இரவு, 10 மணி முதல், அதிகாலை 6 மணி வரை மட்டுமே இப்பாதைகளில் அனுமதிக்கப்படும்.
இருப்பினும், அத்தியாவசிய சரக்கு வாகனங்கள் தடையின்றி வரலாம். உயர்நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருக்கும் கடைகள் சீல் வைக்கப்படும். இதை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
கல்லார் குஞ்சப்பண்ணை, நாடுகாணி, கக்கனல்லா உள்ளிட்ட சோதனை சாவடிகளில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். கர்நாடகா மற்றும் கேரளாவில் இருந்து கூடலூர் வழியாக வரும் அனைத்து சுற்றுலா வாகனங்கள் தலைகுந்தாவிலிருந்து குளிச்சோலை, புதுமந்து வழியாக உதகை நகரத்தினுள் அனுமதிக்கப்பட உள்ளதாக, கலெக்டர் கூறினார்.