தொடர் விடுமுறையால் வாகன நெரிசலில் சிக்கி திணறிய கொடைக்கானல்
தொடர் விடுமுறையால் வாகன நெரிசலில் சிக்கி கொடைக்கானல் சுற்றுலா தளம் திணறி வருகிறது.
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நகரின் பல்வேறு சாலைகள் சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறி வருகிறது.
வெள்ளி நீர் வீழ்ச்சி முதல் நகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ஏரி சாலை பகுதி வரை உள்ள நெடுஞ்சாலையில் சாலையின் இரு புறங்களிலும் கடைகளை அமைத்து போக்கு வரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக பெருமாள் மலை முதல் கொடைக்கானல் சுங்கச்சாவடி வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதேபோல் பெருமாள் மலை பகுதியிலிருந்து பழனிக்கு திரும்பும் சாலையின் இரு பகுதிகளிலும் பிரதான சாலைகளிலேயே கடைகள் அமைத்துள்ளதால் அரசு பஸ்களும், சுற்றுலா வாகனங்களும், பொதுமக்களும் பெருமாள் மலைப் பகுதியை கடப்பதில் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் கொடைக்கானலில் பரபரப்பாகவும், நகரின் மையப்பகுதியாகவும் அமைந்துள்ளது மூஞ்சிக்கல் பகுதியாகும்.
இதே பகுதியில் தான் கொடைக்கானல் நெடுஞ்சாலை துறை அலுவலகமும் உள்ளது. மூஞ்சிக்கல் பஸ் நிறுத்த பகுதியிலிருந்து கல்லறை மேடு பகுதி பஸ் நிறுத்தம் வரை தங்கள் இஷ்டம் போல் நெடுஞ்சாலைகளில் தற்காலிக கடைகள் அமைத்துள்ளனர். இதனால் அதே சாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தரக் கடைகளில் பொருட்களை வாங்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் கொடைக்கானல் நகருக்குள் நுழையும் உள்ளூர் மற்றும் வெளியூர் வாகனங்கள் நெடு ஞ்சாலைகளிலேயே நீண்ட நேரம் நிற்கும் அவலம் உள்ளது.
பெருமாள் மலையில் இருந்து கொடைக்கானல் நகர் பகுதிக்குள் நுழையும் 12 கி.மீ. சாலையை கடப்பதற்குள் கொடைக்கானலுக்கு ஏன் சுற்றுலா வந்தோம் என்ற நிலைமையை சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படுத்தி விடுகிறது. கொடைக்கானலில் மக்கள் தொகை 1 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் பல ஆயிர க்கணக்கில் உயர்ந்துள்ளது. மக்கள் தொகையும், வாகனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது போல் குற்றச் சம்பவங்களும், போக்கு வரத்து விதிமீறல்களும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
ஆனால் கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் குற்ற பிரிவு போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் பல ஆண்டுகளாக மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளனர். கொடைக்கானல் நகரின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் இல்லாத நிலை உருவாகியுள்ளது. மலைக்கிரமங்களில் நிகழும் குற்ற சம்பவங்களை தடுக்க மேல்மலை பகுதியில் போலீஸ் நிலையம் அமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதன் காரணமாக கொடை க்கானல் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் குறைவான எண்ணிக்கையில் உள்ள போலீசார் மேல்மலை கிராம பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க சென்று விட்டால் போலீஸ் நிலையத்தில் புகாரை பெறுவதற்கு கூட ஆளில்லாத நிலை உள்ளது. போக்குவரத்து நெரிசலில் பல இடங்களில் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
நெடுஞ்சாலை போக்கு வரத்து நெரிசல்களை சீரமைக்க பைக் ரோந்து என்ற போலீஸ் அமைப்பை ஏற்படுத்தி 5 புல்லட்டுகளும் வழங்கப்பட்டது. குறைவான எண்ணிக்கையில் உள்ள போக்குவரத்து போலீசார் படும் அவலம் மிகவும் கொடுமையானதாக உள்ளது. அதிக பணி சுமையால் தற்போது கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்து போலீசார் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
கடைக்கானலாக மாறிய கொடைக்கானலையும், போக்குவரத்தை சீர் செய்ய போலீசாரையும் நியமிக்காமல் உள்ள காவல்துறையும், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளையும், உள்ளூர் மக்களையும் பாதுகாக்க எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன என்பதை மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் முடிவு செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.