குற்றாலத்தில் விரைவில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி: தென்காசி எம்பி தகவல்
குற்றால அருவிகளில் விரைவில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தென்காசி எம்பி தனுஷ்குமார் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. தற்போது தமிழக அரசு சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் குற்றால அருவிகளில் மட்டும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் குற்றாலத்தை நம்பி வாழும் வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்தனர்.
இந்நிலையில் இன்று தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கூறியதாவது:-
தற்போது தமிழக அரசு சுற்றுலா தலங்களுக்கு தளர்வு வழங்கியுள்ளது. குற்றாலம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்களிடமிருந்தும் குற்றாலம் வியாபாரிகளிடமிருந்தும் தொடர்ந்து எங்களுக்கு குற்றாலத்தில் அனுமதி வழங்க வேண்டும் என்று மனு அளித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து இன்று ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளோம் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து விரைவில் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.