நிலவின் தென் துருவத்தில் எடுத்த முதல் படத்தை அனுப்பியது விக்ரம் லேண்டர்

நிலவின் தென் துருவத்தில் பத்திரமாக தரை இறங்கிய விக்ரம் லேண்டர் தான் எடுத்த முதல் படத்தை இஸ்ரோ மையத்திற்கு அனுப்பி தனது வேலையை தொடங்கி உள்ளது.;

Update: 2023-08-23 15:28 GMT

நிலவின் தென் துருவத்தில் இருந்து விக்ரம் லேண்டர் அனுப்பிய முதல் புகைப்படம்.

நிலவின் தென் துருவத்தில் எடுக்கப்பட்ட முதல் படத்தை விக்ரம்  லேண்டர் இஸ்ரோ மையத்திற்கு அனுப்பி உள்ளது.

நிலவினை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவால் சந்திரயான்-3 விண்கலம் கடந்த மாதம் 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் மதியம் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.


நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து நிலவில் கால்பதித்துள்ள இந்தியா, தனது விண்வெளி பயணத்தில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. அது மட்டும் இன்றி நிலவின் தென்துவருவத்தில் கால் பதித்தது இந்தியா என்ற வரலாற்று சாதனையும் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது.சந்திராயன் 3 நிலவினை அடைந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் வெற்றியை தெரிவித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் "இந்தியா நிலவில் உள்ளது" என்று அறிவித்தார்.


இந்திய நேரப்படி இன்று மாலை சுமார் 6 மணி அளவில் சந்திராயன்-3ஐ நிலவில் தரையிறக்க திட்டமிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து காலை முதல் லேண்டரைத் தரையிறக்குவதற்கான வேலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர். மாலை 5.30 மணிக்கு லேண்டரை தரையிறக்கும் பணியினை விஞ்ஞானிகள் தொடங்கினர்.

லேண்டரின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டு லேண்டர் நிலவினை நோக்கி பயணித்தது. இதனைத் தொடர்ந்து நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் மாலை 6.02 மணிக்கு வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதனை நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த அனைத்து இந்திய இதயங்களும் மகிழ்ச்சியில் திளைத்தது.

அப்போது, இஸ்ரோ விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் கைகளைத் திட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து  கொள்வதற்காக தென் ஆப்பிரிக்காவிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி அங்கிருந்த படியே நமது தேசிய கொடியை அசைத்தும், கை தட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த சாதனை குறித்த அறிவிப்பை, இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்தார். இந்தியா தற்போது நிலவின் மீது இருப்பதாக அவர் பெருமிதம் பொங்க குறிப்பிட்டார். அமெரிக்கா, சீனா ரஷ்யாவைத் தொடர்ந்து இந்தியா நிலவில் கால் பதித்துள்ளது. 


நிலவில் பத்திரமாக தரை இறங்கிய சந்திரயான் 3 ன் விக்ரம் லேண்டர் நிலவில் கால் பதித்ததும் தனது ஆராய்ச்சி பணியை தொடங்கி விட்டது. நிலன் தென் துருவத்தில் எடுத்த முதல் படத்தை விக்ரம் லேண்டர் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு அனுப்பி உள்ளது. இதன் மூலம் விக்ரம் லேண்டர் இஸ்ரோவுடன் தரை வழி நேரடி இணைப்பில் உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நிலவின் தென் துருவத்தில் இயற்கை கனிம வளங்கள் இருக்கலாம் என கருதப்படுவதால் இந்த படங்களின் மூலம் விஞ்ஞானிகள் தங்களது ஆய்வு பணியை தொடங்கி உள்ளனர்.

Tags:    

Similar News