எலெக்ட்ரிக் வாகன பேட்டரி தயாரிப்பில் களமிறங்கும் ரிலையன்ஸ்
ரிலையன்ஸ் நிறுவனம் மின் வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பு ஆலையைத் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.;
இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் ரிலையன்ஸ் நிறுவனம் பல தரப்பட்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றது. தொலைத்தொடர்பு, இணைய சேவை, மின்சாதனங்கள், மற்றும் எண்ணெய் விற்பனை என ரிலையன்ஸ் பல துறைகளில் கொடிக் கட்டி பறந்து வருகின்றது.
இந்த நிலையில் மின் வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பில் ரிலையன்ஸ் நிறுவனம் இறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..
திருபாய் அம்பானி கிரீன் எனர்ஜி ஜிகா காம்ப்ளக்ஸ் எனும் பெயரில், ரூ. 75 ஆயிரம் கோடி முதலீட்டில் மிகப்பெரிய பேட்டரி உற்பத்தி ஆலையைத் தொடங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக ஜாம்நகர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தொழிற்சாலை அமைக்கப்பட இருக்கின்றது..
முதலில் நான்கு ஜிகா தொழிற்சாலைகள் உருவாக்கப்பட இருக்கின்றன. இந்த நான்கு ஆலைகளிலும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ரூ. 60 ஆயிரம் கோடி வரை நிறுவனம் முதலீடு செய்ய இருக்கின்றது. இதன் வாயிலாக மின்சார வாகனங்களுக்கான பேட்டரியை முழுக்க முழுக்க உள் நாட்டிலேயே தயாரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதனால் மின் வாகனங்களின் பேட்டரிகளின் விலை குறைய வாய்ப்பு ஏற்படும். அவ்வாறு, பேட்டரியின் விலைகள் குறைந்தால் மின் வாகனங்களின் விலையும் கணிசமாகக் குறையும். ஆகையால், மின் வாகனங்களின் புழக்கமும் நாட்டில் கணிசமாக அதிகரிக்கும்.