‘விரைவில் நிலவிற்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம்’- இஸ்ரோ இயக்குனர்

இஸ்ரோவின் லட்சியத் திட்டமான ககன்யான் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என இஸ்ரோ இயக்குநர் சுதீர்குமார் தெரிவித்தார்.

Update: 2023-08-03 14:48 GMT

தூத்துக்குடியில் இஸ்ரோ இயக்குநர் சுதீர்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

இஸ்ரோவின் லட்சியத் திட்டமான ககன்யான் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என இஸ்ரோ இயக்குநர் சுதீர்குமார் தெரிவித்தார்.

இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) சார்பில் தூத்துக்குடியில் தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் இஸ்ரோ இயக்குநர் சுதீர் குமார் கலந்து கொண்டு விண்வெளி துறையில் தொழில் முனைவோர்களுக்கு எந்த வகையில் எல்லாம் தொழில் துவங்கலாம் என கருத்துக்களை கூறினார். இதில் ஏராளமான இளம் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, இஸ்ரோ இயக்குநர் சுதீர் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே 900 கோடி ரூபாய் செலவில் சிறிய ரக ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. குலசேகரன்பட்டினம் பகுதியில் சிறிய ரக ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான கட்டிட பணிகள் விரைவில் ஒப்பந்தம் கோரப்பட்டு துவங்கப்படும்.

இந்தப் பணிகளின் ஆரம்பிக்கும்போது நிறைய தொழில் முனைவோர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். புதிதாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் உருவாக வாய்ப்புள்ளது. விண்வெளித் துறையில் பல்வேறு தொழில் முனைவோருக்கு வாய்ப்புகள் உள்ளன.

இஸ்ரோவின் லட்சிய திட்டமான விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக பல்வேறு சோதனைகள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

ரோபோட்கள் மூலம் முதலில் சோதனை செய்யப்பட்டு பின்னர் மனிதனை வைத்து சோதனை செய்யப்படும். இஸ்ரோவின் லட்சியத் திட்டமான ககன்யான் திட்டம் விரைவில் இஸ்ரோ சார்பில் வெற்றிகரமாக ஏவப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News