சபாஷ்! சரியான போட்டி: சாட் ஜிபிடியை சமாளிக்க தயாராகும் கூகுள்

உலக அளவில், குறிப்பாக கல்வித்துறையில் சலசலப்புகளையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ள சாட்ஜிபிடி-க்கு ஆப்பு வைக்க தயாராகும் கூகுள்

Update: 2023-02-06 14:43 GMT

சாட் ஜிபிடி என்பது ஆன்லைன் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் ஆகும். அதாவது நமக்கான தேவைகளை கூகுளில் தேடினால், அது நாம் தேடியதற்கு சம்பந்தப்பட்ட பலவித தகவல்கள நமக்கு காட்டும்.

ஆனால் இந்த சாட் ஜிபிடி செயலியில் நாம் தகவல்களை தேடினால், சரியாக நாம் எதை தேடுகிறோமோ அதை பற்றி அதுவே தானாக செயற்கை நுண்ணறிவு மூலமாக ஆராய்ந்து நமக்கு தேவையான சரியான விவரத்தை மட்டுமே வழங்கும்.

இது மனிதர்களைப் போலவே அர்த்தமுள்ள வாக்கியங்களை உருவாக்கி நமக்கு தனிப்பட்ட முறையில் குறுகி அல்லது விரிவாக நமக்கு ஏற்றபடி செய்திகளாக நம்மிடம் கொண்டு சேர்க்கிறது. நாம் கற்பனை செய்துள்ள யதார்த்தத்தைவிட இந்த செயலி பலமடங்கு சக்தியுடையதாக உள்ளது என பல்வேறு ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்

நம் வாட்ஸ் அப் பயன்படுத்தும் போது சில வார்த்தைகளை டைப் செய்து கொண்டிருக்கும் போது, ஆட்டோ கம்ப்ளிட் முறை மூலம் அந்த வார்த்தை நிறைவு செய்யப்படும். நாம் முன்னர் பயன்படுத்திய வார்த்தைகளிலிருந்து வாட்ஸ்அப் செயலி இந்த வார்த்தையை கற்றுக் கொள்கிறது.

அதேபோன்றுதான் சாட் ஜிபிடி செயலியும், இணையத்தில் கொட்டி கிடக்கும் பெருத்த தகவல்களை கொண்டு, நான் கேட்கும் கேள்விகளுக்கு அர்த்தமுள்ள வாக்கியங்களை உருவாக்குகிறது.

இதனால் வீட்டு பத்திரம், தொழில்களுக்கு வரைவு திட்ட அறிக்கை தயார் செய்வது, மாணவர்களுக்கு வீட்டு பாடத்திற்கு செய்ய தேவையான தகவல்கள், கதை, கட்டுரை மற்றும் பிரசன்டேஷனுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் ஒன்றிணைப்பது, ஜாவா கோடிங் செய்வது என பலதரப்பட்ட பணிகளை இது செய்து அனைவருக்குமே பேருதவியாக இருந்து வருகின்றது.

அதேபோன்று இந்த சாட்ஜிபிடி செயலி மூலம் எளிய முறையில் இமேஜ் எடிட்டிங் மற்றும் வீடியோ கிராபிக்ஸ் செய்தும் பயன் பெறுகிறார்கள்.

சாட்ஜிபிடி கொடுக்கப்பட்ட உள்ளீடுகளின் அடிப்படையில், மனிதர்களால் உருவாக்கப்படுவது போன்ற வாக்கியங்களை உருவாக்கும் திறன் கொண்டது. அதாவது இந்த செயற்கை நுண்ணறிவு செயலியானது ஒரு பெரிய அளவிலான வார்த்தைகளின் தரவுகளால் பயிற்சியளிக்கப்பட்டுள்ளதால், இதனால் கேள்விகளுக்கான பதில்களை உருவாக்க முடியும்; நீண்ட வாக்கியங்களை சுருக்க முடியும், பெரிய பெரிய ஆய்வு கட்டுரைகள் மற்றும் கதைகளை கூட எழுத முடியும்! இந்த காரணத்தினால் தான் இது சில கல்வித்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பலரும் சாட்ஜிபிடி செயலியை பயன்படுத்த ஆரம்பித்து விட்டதால், இது கூகுள் நிறுவனத்திற்கு சரியான போட்டியாக உருவெடுத்து உள்ளது. இதனால் கூகுள் நிறுவனம் இதற்கு போட்டியாக 20க்கு மேற்பட்ட செயற்கை நுண்ணறிவு கருவிகளை உருவாக்க திட்டமிட்டு கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளை அழைத்து பேசியுள்ளது.

இவ்வாறு உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவு கருவிகள் வரும் மே மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கூகுள் நிறுவனம் இது போன்று செயற்கை நுண்ணறிவு கருவிகளான ட்யூப்லெக்ஸ் (Duplex) மற்றும் கூகுள் கிளாஸ் (Google Glass) போன்றவற்றை அறிமுகம் செய்தது. இந்த புதிய செயற்கை நுண்ணறிவு கருவிகள் பயனர்களுக்கு சரியான மற்றும் பாதுகாப்பான விவரம் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இது போன்று கூகுள் நிறுவனம் இமேஜ் எடிட்டிங் ஒன்றையும் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதை வைத்து செயற்கை நுண்ணறிவு மூலம் நாம் தனியாக இமேஜை டேட்டிங் செய்யலாம். இவ்வாறு ஒவ்வொரு விஷயத்திற்கும் தனித்தனியாக செயற்கை நுண்ணறிவு கருவிகளை கூகுள்நிறுவனம் வழங்க உள்ளது.

நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை, சாட்ஜிபிடி-க்கான போட்டி செயலியை களமிறக்க உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். இதுபற்றி கூறுகையில், கூகுள் நிறுவனம் லாம்டா (LaMDA) போன்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான லார்ஜ் லேங்குவேஜ் மாடல்களை "வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில்" வெளியிடும் என்று என்று கூறியுள்ளார்.

லாம்டா (LaMDA) என்பது லேங்குவேஜ் மாடல் ஃபார் டயலாக் ஆப்ளிகேஷன்ஸ் (Language Model for Dialogue Applications) என்பதன் சுருக்கமாகும். ஆகமொத்தம் சாட்ஜிபிடி-க்கு ஒரு சரியான போட்டியாளர் தயாராகி கொண்டிருக்கிறது

Tags:    

Similar News