நீங்கள் கூகுள் மேப் மூலம் வழி தேடுபவரா? இது போலீசாரின் எச்சரிக்கை பதிவு

நீங்கள் கூகுள் மேப் மூலம் வழி தேடுபவர் என்றால் போலீசாரின் இந்த எச்சரிக்கை பதிவினை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

Update: 2023-12-24 11:11 GMT

‘மதுரைக்கு வழி வாயில்’ என கிராமப்புறங்களில் கூறப்படுவது உண்டு. இதற்கு அர்த்தம் என்னவென்றால் ஒரு ஊருக்கு போகிறோம் என்றால் சரியான பாதையை சரியான நபர்களிடம் வாயால் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான். ஆனால் தற்போது யாரும் யாரிடமும் பேசுவது குறைந்து கூகுள் ரூட் மேப் மூலமாக ரோபோ போல் நாம் பயணிக்க தொடங்கிவிட்டோம்.

இந்த கூகுள் ரூட் மேப்பிலும் சைபர் கிரைம் மோசடிகள் நடந்து வருகிறது என்றும் எனவே கூகுள் மேகப்பை பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான போலீசாரின் எச்சரிக்கை பதிவினை இனி பார்ப்போம்.

அதிகரித்து வரும் தகவல் தொழில்நுட்பங்கள் எத்தனையோ வழிகளில் நமக்கு உதவியாக உள்ளன. உணவு டெலிவரி, டிக்கெட் புக்கிங், பணம் அனுப்புதல் என அனைத்து சேவைகளையும் நொடிப்பொழுதில் தற்போது செய்துவிட முடியும். அதேபோல், வழி தெரியாத ஊருக்கு போய்.. ஒவ்வொருவரிடமும் வழியை கேட்டு அல்லல் பட்ட காலம் எல்லாம் கிட்டதட்ட மலையேறி போய்விட்டது என்றே சொல்லலாம்.

கூகுள் மேப் இருந்தால் போதும் ஆண்டிப்பட்டியில் இருந்து அமெரிக்கா வரை கூட யாரிடமும் வழி கேட்காமல் சென்று விடலாம். இப்படி பல வழிகளிலும் தொழில் நுட்பம் நமக்கு வசதியாக இருந்தாலும் மோசடி கும்பலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணத்தை அபேஸ் செய்வதை பார்க்க முடிகிறது. தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், அதில் உள்ள நுணுக்கங்களை தெரிந்துகொண்டு அதற்கேற்றவாறு அதில் எப்படி எப்படி பணம் பறிக்க முடியும் என்று அதனை செயல்படுத்தி வருகின்றனர்.

எப்படியாவது பணத்தை அபேஸ் செய்துவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு புதுப்புது வழிகளில் மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர். அந்த வகையில் தற்போது புது வகையிலான மோசடி ஒன்றை சைபர் கிரைம் கும்பல்கள் செய்து வருகின்றன. அதாவது கூகுள் மேப்பை வைத்து அதில் இருந்து மோசடி சம்பவங்கள் அதிகம் நடந்து வருவதாக எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர் சென்னை போலீசார்.  கூகுள் மேப் மூலமாக 3 வகையிலான குற்றங்களை சைபர் கிரைம் கும்பல்கள் அரங்கேற்றி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஒன்று என்னவென்றால் கூகுள் மேப்பில் வழிகள், இடங்களை தேடுவதோடு வணிக வளாகங்களையும் சிலர் தேடுவர். இதில் வணிக வளாகங்களை தேடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் தேடும் வணிக வளாகங்களில் இருந்து யுஆர்எல் கொடுத்து அவர்களை தங்களது வலைத்தளங்களுக்கு வரவழைத்து இந்த மோசடியில் ஈடுபவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இப்படி இவர்களது வெப்சைட்டுக்கு வரவழைப்பதோடு ரேட்டிங் கொடுக்க சொல்லி அதன் மூலமாக ரூ. 1000. ரூ. 2000 தருவதாக ஆசை வார்த்தை கூறி பின்னர் பணத்தை பறித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதேபோல் கூகுள் மேப்பில் போலி வணிக வளாகம் பெயரில் பதிவிட்டு அதில் கிளிக் செய்பவர்களின் செல்போன் மொத்தத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து பின்னர் வங்கி அக்கவுண்டு முதல் அனைத்தையும் தெரிந்துகொண்டு பணத்தை அபேஸ் செய்துவிடுவதாக போலீசார் எச்சரித்துள்ளனர்.

இப்படி பல்வேறு வகையில் கூகுள் மேப்பை பயன்படுத்தி சைபர் கிரைம் மோசடிகள் நடந்துள்ளதாகவும் எனவே மக்கள் கவனமாக இருக்கும்படியும் போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இந்த லைட் ரிவியூ போன்ற ரேட்டிங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். கூகுள் மேம்பை பயன்படுத்தி தேடும் வணிக வளாகங்கள் உண்மையான நிறுவனங்கள் தானா என்று பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். மேலும் போலியான 350 வணிக வளாக நிறுவனங்கள் இதில் இணைக்கப்பட்டிருப்பதாகவும், போலியான 14 ஆயிரம் ரிவியூக்கள் தற்போது டெலிட் செய்யப்பட்டுள்ளதாகவும் கூகுள் மேப் நிர்வாகம் அறிவித்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News