கோவையில் நீதிமன்றம் அருகிலேயே வாலிபர் வெட்டிக்கொலை
கோவை நீதிமன்றம் அருகே இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். காயமடைந்த மற்றொரு இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.;
கோவை கீரனத்தம் பகுதியைச் சேர்ந்த கோகுல் மற்றும் சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ். இருவர் மீதும் கஞ்சா உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் வழக்கு தொடர்பாக ஆஜராக கோவை நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். அப்போது நீதிமன்றம் பின்புறம் உள்ள கோபாலபுரத்தில் இருவரும் தேனீர் அருந்த வந்துள்ளனர்.
அப்போது, அவர்களை பின்தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் இருவரையும் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில் கழுத்தில் பலத்த வெட்டுக் காயம் அடைந்த கோகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த மனோஜ் கை மற்றும் தலையில் வெட்டுக் காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த கோகுலின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். குற்றவாளிகளைப் பிடிக்க மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.