மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 1700 கோடி சுழல் நிதி: அமைச்சர்
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 1700 கோடி சுழல் நிதி வழங்கப்படும் என்று, அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்தார்.
சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரேசா வணிக வளாகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன அலுவலகத்தில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன் கூறியதாவது: நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் வளர்ச்சியும் முக்கியத்துவம் வாய்ந்தது. சட்டமன்றத்தில் மகளிருக்காக அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும், விரைவில் தமிழக முதலமைச்சர் தலைமையில் நிறைவேற்றப்படும். அதற்காக தான் இந்த ஆய்வுக் கூட்டமே தற்போது நடைபெற்றது. திமுக ஆட்சி காலத்தில் குறவர்கள் இனத்தை சார்ந்த பெண்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
கடந்த ஆட்சி காலத்தில் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்களுக்கு எதிராக கிராம சபைகளில் கொண்டு வரப்படும் தீர்மானங்கள் மீது, தமிழக அரசு உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வரும் 25 ஆம் தேதி 1,700கோடி அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தமிழக முதலமைச்சர் தலைமையில் சுழல் நிதி வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.