ஜெகத்ரட்சகன் குறி வைக்கப்பட்டது ஏன்?
திமுகவின் முக்கியமான எம்பிக்களில் ஒருவரான ஜெகத்ரட்சகன் வருமானவரி சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார்.
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை ரெய்டுகள் தீவிரமாக நடந்து வந்தன. அந்த ரெய்டுக்கு இடையில் தான் தற்போது வருமான வரித்துறை ரெய்டு நடந்து வருகிறது. எம்பி ஜெகத்ரட்சகனுக்கு எதிராக ஏற்கனவே சில வழக்குகள் உள்ளன.
அரக்கோணம் மக்களவை தொகுதி உறுப்பினரான திமுக-வை சேர்ந்த ஜெகத்ரட்சகன், கடந்த 1982ஆம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்த போது, நில அபகரிப்பில் ஈடுபட்டதாக குவிண்டன் டாவ்சன் அளித்த புகாரில் கடந்த 2013ஆம் ஆண்டு காவல்துறை விசாரணை நடத்தி, புகாரை முடித்து வைத்தது.
அதே புகார் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறை 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரு வழக்குகளை பதிவு செய்தது. இதனடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதுபோக வேறு சில சொத்து குவிப்பு, வருமான வரி வழக்குகளும் அவர் மீது இருக்கிறது.
இந்த வழக்குகள் அடிப்படையில் தான் மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அவர் வீடு மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய 40 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஆனாலும் சோதனைக்கான உண்மையான காரணம் தெரியவில்லை. புதிதாக யாராவது கொடுத்த புகாரின் பெயரில் ரெய்டு நடக்கிறதா என்பதும் தெரியவில்லை. மேலே குறிப்பிட்ட சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்குகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டு விட்டன.
இந்த நிலையில் தான் புதிதாக ஆதாரங்களை எடுக்கும் விதமாக ரெய்டு நடக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த ரெய்டுக்கு பின் திமுகவின் அஸ்திவாரம் கைவைக்கப்படுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக தேர்தல் நேரங்களில் செலவு செய்ய பணம் தேவை. அதேபோல் தற்போது மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. இதில் பணிகளை செய்ய பணம் தேவை. திமுகவின் நிதி ஆதாரமாக இருக்கும் தொழில் அதிபர்கள், மணல் விற்பனையாளர்கள் ஆகியோர்கள் இப்போது குறி வைக்கப்படுவதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் தான் ஜெகத்ரட்சகன் குறி வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. திமுக உறுப்பினரான ஜெகத்ரட்சகன் அரசியல் தாண்டி பல்வேறு தொழில்களை செய்து வரும் தொழிலதிபர். இந்த நிலையில் தான் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அவருக்கு எதிராக சோதனை நடத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில காலமாக அமலாக்கத்துறை அடிக்கடி ரெய்டுகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜியும், . இன்னொரு பக்கம் அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை மூலம் ரெய்டுக்கு உள்ளானார்கள். அமைச்சர் பொன்முடி கைது செய்யப்படாமல் விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அதன்பின் மணல் விற்பனையாளர்கள் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. இது எல்லாமே திமுகவின் நிதி ஆதாரங்கள், தேர்தல் பணிகளை செய்யும் நபர்களை குறி வைத்து நடத்தப்பட்டது போல இருந்தது. அந்த வகையில்தான் பணக்கார எம்.பிக்களில் ஒருவரான ஜெகத்ரட்சகன் தற்போது ரெய்டுக்கு உள்ளாகி இருக்கிறார்.