திருச்சி மாநாட்டில் கலந்துகொள்வோர் யார் யார்?
திருச்சி மாநாட்டில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.;
இந்த மாநாட்டை தவிர, அடுத்தடுத்த மாநாடுகளையும், பேரணிகளையும் நடத்த போகிறாராம். ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இந்த மாநாட்டை அவர் கூட்டவில்லையாம். மாறாக, தனக்கான செல்வாக்கு என்ன என்பதை மேலிடத்துக்கு காட்டினால் தான், கூட்டணி, சீட் என்ற விவகாரத்துக்குள்ளேயே நுழைய முடியும் என்பதையும் ஓபிஎஸ் நன்றாகவே உணர்ந்துள்ளாராம். அந்தவகையில், திருச்சி மாநாட்டுக்கு, பிரிந்து போனவர்களுக்கும் ஓபிஎஸ் அழைக்க நினைக்கிறாராம்.
குறிப்பாக, மூத்த தலைவர்கள் கேசி பழனிசாமி, அன்வர்ராஜா, சசிகலா உள்ளிட்டோரை அழைக்கும் விதமாகவும் இந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். ஆனால், சசிகலா இதில் நேரடியாக கலந்து கொள்வது சந்தேகம்தான் என்கிறார்கள். காரணம், ஓபிஎஸ்ஸுடன் இணைவதாக இருந்தால் எப்போதோ அவருடனான சந்திப்பை, சசிகலா நடத்தியிருக்கக்கூடும்.
ஓபிஎஸ் எப்போதுமே தன் தரப்பு ஆதரவாளர் தான் என்பதை சசிகலா அறியாமல் இல்லை. ஆனால், சசிகலாவுக்கு சிக்கல் எடப்பாடி பழனிசாமி என்பதால், அவரை எப்படி வழிக்கு கொண்டுவருவது என்பதில்தான் கவனம் செலுத்தி வருகிறாராம். அதனால், ஓபிஎஸ் மாநாட்டில் சசிகலா பங்கேற்க சாத்தியமில்லை என்கிறார்கள். ஆனால், இந்த மாநாட்டில் சசிகலா கலந்து கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று மூத்த தலைவர் புகழேந்தி இன்று கூறியுள்ளது மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.
அதுபோலவே ஓபிஎஸ் மாநாட்டில் தினகரனும் பங்கேற்க மாட்டார் என்கிறார்கள். காரணம், ஓபிஎஸ் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டால், "சாதி முத்திரை" குத்தப்பட்டு விடும் என்பதால், அந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறாராம். ஓபிஎஸ் மாநாடு பற்றி டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஊடகங்கள் வாயிலாக தான் மாநாடு பற்றி தெரிந்து கொண்டேன் என்று கூலாக ஒரு பதில் சொன்னாரே தவிர, அதில் கலந்து கொள்வது பற்றி ஆதரவோ, மறுப்போ சொல்லவில்லை.
இந்நிலையில் ஓபிஎஸ்ஸின் மாநாடு குறித்து, மேலும் சில தகவல்கள் பிரத்யேகமாக கிடைத்துள்ளது.. அதிமுகவின் முப்பெரும் விழாவை 24-ந்தேதி ஓபிஎஸ் நடத்தும் நிலையில், இந்த மாநாட்டில் அதிமுக கூட்டணி கட்சிகளை பங்கேற்க வைக்கலாமா? என்று ஆலோசனை ஓபிஎஸ் தரப்பில் நடந்ததாம்.. காரணம், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வந்தால் மாநாடு பரபரப்பாகும் என்பதால், அவர்களை அழைக்க தயாரானாராம் ஓபிஎஸ்?
ஆனால், அவர்கள் வருவார்களா? என சந்தேகம் எழுப்பியுள்ளார் வைத்தியலிங்கம். இந்த நிலையில், எடப்பாடியை கடுமையாக எதிர்க்கும் அண்ணாமலையை அழைத்துப் பார்க்கலாம் என்று முடிவு செய்து அண்ணாமலையின் பல்ஸ் பார்க்க அவருக்கு தகவல் அனுப்பியுள்ளார் ஓபிஎஸ். அதற்கு அவர், "அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம்னு நான் சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில், ஓபிஎஸ் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டால் ஆரோக்கியமாக இருக்காது" என்று பதில் தந்தாராம் அண்ணாமலை.
இதனையடுத்து, தமாகா தலைவர் வாசன், டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோருக்கும் தகவல் அனுப்பப்பட்டதாம். ஆனால், அவர்களிடமிருந்த எந்த பதிலும் வரவில்லை. மாநாட்டில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களை மேடையேற்ற விரும்பிய ஓபிஎஸ்சின் ஆசை நிராசையாகியிருக்கிறது என்கிறார்கள் ஓபிஎஸ் தரப்பினர்... ஆக, டிடிவி தினகரன், சசிகலா, அண்ணாமலை, கிருஷ்ணசாமி, வாசன், என யாருமே கலந்து கொள்ள முடியாத சூழலில், இந்த மாநாட்டை ஓபிஎஸ் எப்படி நடத்தி முடிக்க போகிறார் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி வருகிறது.
இதனிடையே, மூத்த தலைவர் புகழேந்தி பேட்டி தந்துள்ளார்.. அதில், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் கடல் அலைபோல் மக்கள் கூட்டம் வரும் காட்சியை வருகிற 24-ம் தேதி தமிழகம் பார்க்கத்தான் போகிறது. அதன்பிறகு ஓபிஎஸ் மண்டல வாரியாக வர உள்ளார். சேலத்திற்கும் ஓபிஎஸ் விரைவில் வருவார். அதன்படி சேலத்தில் ஆர்ப்பரிக்கும் கூட்டம் நடைபெறும். இதை எடப்பாடி பழனிசாமி பொறுத்திருந்து வேடிக்கை பார்க்க வேண்டும்.
திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்ட சிலரை தவிர வேறு யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்களை மரியாதையுடன் மாநாட்டிற்கு அழைத்து செல்வோம். ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் மாநாட்டிற்கு அன்வர்ராஜா, கே.சி.பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்படும். இந்த மாநாட்டில் சசிகலா கலந்து கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று கூறியுள்ளது, அதிமுக கூடாரத்தை அதிர வைத்து கொண்டிருக்கிறதாம்..!!
இதனிடையே, சசிகலாவின் எண்ண ஓட்டங்களை அறிந்துள்ள ஓபிஎஸ், மாநாட்டில் பேச வேண்டிய விசயங்கள் குறித்து பண்ருட்டி ராமச்சந்திரனிடம் நேற்று முன்தினம் விவாதித்தபோது, சசிகலா-தினகரனை அழைப்பது குறித்தும் பேசியுள்ளார். அப்போது, சசிகலாவும் தினகரனும் மாநாட்டில் கலந்து கொண்டால், முக்குலத்தோர் கட்சியாக விமர்சனம் வரும். அதுவும், ஜெயக்குமாரை வைத்து சாதி ரீதியாக விமர்சிக்க வைப்பார் எடப்பாடி பழனிசாமி.. அதனால், சீர்தூக்கி பார்த்து சசிகலா, தினகரனை அழைப்பது குறித்து முடிவெடுங்கள்" என்று ஆலோசனை வழங்கினாராம் பண்ருட்டி ராமச்சந்திரன். இதனால் குழப்பமடைந்துள்ளார் ஓபிஎஸ் என்கிறார்கள்.