ஓபிஎஸ் கோட்டைக்குள்ளேயே கை வைத்த இபிஸ்: பதவியை தக்கவைக்கத் தெரியாதவரா ஓபிஎஸ்?

ஒற்றைத்தலைமை அதிமுகவில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் பொதுக்குழுவில் என்ன நடக்கப்போகிறது என்பதே அரசியல் நிபுணர்கள் எதிர்பார்த்துள்ள முக்கிய செய்தி.

Update: 2022-06-20 08:29 GMT

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்  இபிஎஸ் 

ஓபிஎஸ் கோட்டைக்குள்ளேயே நுழைந்து தனக்கான ஆதரவு எப்படிப்பட்டது என்பதை இபிஎஸ், ஓபிஎஸ்-க்கு மீண்டும் ஒரு முறை நிரூபித்து காட்டியுள்ளார்.

கம்பம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வும், அ.தி.மு.க கழக அமைப்புச் செயலாளருமான ஜக்கையன், தேனி மாவட்ட அ.தி.மு.க பொருளாளர் சோலைராஜ், தேனி மாவட்ட முன்னாள் துணைச்செயலாளர் முருக்கோடை ராமர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றச்செயலாளர் செந்தட்டிகாளை, தேனி நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார், பெரியகுளம் முன்னாள் ஒன்றியச்செயலாளர் அன்னப்பிரகாஷ், கம்பம் ஒன்றிய முன்னாள் செயலாளர் இளையநம்பி, பெரியகுளம் ஒன்றிய துணைச்செயலாளர் வைகைபாண்டி, ஆண்டிபட்டி, பேரூர் கழக துணைச் செயலாளர் பொன்முருகன் ஆகியோர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவர்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இது ஓபிஎஸ் தரப்பினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒற்றைத்தலைமை வேண்டாம் என்று ஓபிஎஸ் தரப்பினரும், வேண்டும் என்று இபிஎஸ் தரப்பினரும் கூறி வருகின்றனர். ஒற்றைத்தலைமை காலத்தின் கட்டாயம் என்று இபிஎஸ் தரப்பு வலியுறுத்துவதன் காரணமே இபிஎஸ்-ஐ பொதுச் செயலர் ஆக்கிவிடும் தைரியத்தில்தான் என்கின்றனர் விபரம் அறிந்த அரசியல் தரப்பினர்.

பதவியை காப்பாற்றத் தெரியாதவர் ஓபிஎஸ் :

ஜெயலலிதாவே ஓபிஎஸ்-ஐ முதலமைச்சர் ஆக்கி, அவரே கட்சிக்கு வழிகாட்டி என்று ஜெயலலிதாவால் முன்மொழியப்பட்டவர் ஓபிஎஸ். அவர்தான் ஒற்றைத்தலைமைக்கு பொருத்தமானவர். அவர் பக்கமே உண்மைத்தொண்டர்கள் நிற்கின்றனர் என்கிறது ஓபிஎஸ் தரப்பு. ஆனாலும் அவரது ஆதரவாளர்களில்  சிலர், 'முதலமைச்சர் பதவியில் இருந்தபோதே அவரது பதவியை வைத்துக்கொண்டு காரியம் சாதிக்காமல், இருப்பதை விட்டுவிட்டு தர்மயுத்தம் நடத்துகிறேன் என்று எல்லாவற்றையும் இழந்தவர், ஓபிஎஸ். இல்லை.. இல்லை.. அவரே இழக்கச்செய்தவர். அப்படியிருக்க மீண்டும் நிர்வாகிகள் எப்படி அவரை நம்புவார்கள்?' என்ற புலம்புவதும் கேட்கவே செய்கிறது. 

கட்சியை காப்பாற்றுகிறேன் என்று எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்து நல்லவர் என்று பேர் வாங்கி என்ன பயன்? தலைமையில் இருக்கும்போது, தலைமைக்கான சில கடமைகளை கடுமையாக செய்தால் மட்டுமே எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்றவர்களால் வளர்த்து எடுக்கப்பட்ட மிகப்பெரிய அமைப்பான அதிமுகவை கட்டிக்காப்பாற்ற முடியும் என்ற அடிப்படை உண்மையை உணராமல் இருந்துவிட்டார், ஓபிஎஸ்.

ராஜதந்திர இபிஎஸ் :

தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டவர் எடப்பாடி பழனிசாமி. சசிகலாவால் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், பின்னாளில் அவரையே எதிர்த்து பதவியை விட்டுக்கொடுக்காமல், பதவியின் அதிகாரங்களை தனக்கு சாதகமாக்கினார். 4 ஆண்டுகால ஆட்சியை கட்சிக்குள் எவ்வித சர்ச்சைகளுக்கும் இடம் கொடுக்காமல் கொண்டுசெலுத்தினார். அப்போது ஏற்பட்ட அவர் மீதான நம்பிக்கையே இன்றும் முன்னாள் அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் அவருக்கு ஆதரவாக இன்று நிற்கின்றனர்.

பாஜகவுக்கு சாதகம்..?

அதிமுகவில் அடுத்தது யார் பொதுச் செயலாளர் என்பதே இன்றைய 'டாக் ஆஃப் தி ஸ்டேட்'. இதில் இன்னொரு முக்கியமான விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். ஒருவேளை அதிமுகவில் ஒற்றைத்தலைமைக்கு சம்மதிக்காமல் இழுபறி நேருமேயானால், தமிழக பாஜகவுக்கு சாதகமான அரசியல் 'களம்' ஒன்று காலத்தால் ஏற்பாடு செய்யப்படும் என்பதை மறுக்கமுடியாது. அதற்கான அடித்தளத்தையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சரியாக முன்னெடுத்துச் செல்கிறார். 

'அண்ணன் நகர்ந்தால் திண்ணைக் காலியாகும்' என்பதுபோல அரசியல் களத்தில் சிறிய இடைவெளி கிடைத்தாலும் அதை  பாஜக சரியாக பயன்படுத்திக்கொள்ளும் என்பது திண்ணமே.

Tags:    

Similar News