தமிழக மண்ணின் மறக்கப்பட்ட பாரம்பரிய மரங்கள் எவை தெரியுமா ?
Trees in Tamil Nadu -மரங்களுக்கும் மக்களுக்கும் ஒரு இணக்கமான பாசப்பிணைப்பு இருந்திருந்தது;
Trees in Tamil நாடு-பைல் படம்
Trees in Tamil Nadu -இன்றைய இளைய தலைமுறை தமிழ் மண்ணில், உசில், வேங்கை, தடசு, மருதம், இலுப்பை, தோதகத்தி, வன்னி, குமில், கடுக்கை, தாண்டி போன்ற மரங்களில் எந்த மரத்தையாவது பார்த்திருப்பார்களா என்றால் இல்லை என்பதுதான் பதிலாகக் கிடைக்கும்.
ஒரு காலத்தில் நம் மண்ணை அலங்கரித்து, இன்று அழிந்தும் மறந்தும் போன மரங்களைத் தேடினால், அனகோண்டா போல் நீண்டு கிடக்கிறது பட்டியல். இப்படிப்பட்ட மரங்களின் விதைகளை மீட்டெடுத்து, மீண்டும் அவற்றை மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்காகப் போராடி வருகிறது 'பழனிமலை பாதுகாப்புக் குழு' என்கிற சுற்றுச்சூழல் அமைப்பு.
தமிழனோட நாகரிகம் தாவரத்தோட இணைந்தே இருந்திருக்கிறது. ஊர்ப் பெயர்கள் கூட மரங்களின் பெயரைச்சூட்டி அழகு பார்த்திருக்கார்கள் நம் முன்னோர்கள். மரங்களுக்கும் மக்களுக்கும் ஒரு இணக்கமான பாசப்பிணைப்பு இருந்திருந்தது. ஆனால், தற்போது அப்படி ஒரு மரம் இருந்ததா? என்று கேட்பது போன்ற சூழல் ஆகிவிட்டது. மரங்களை இழந்து நாம் மழையையும் இழந்துவிட்டோம் என வேதனை தெரிவிக்கிறார் பழனிமலை பாதுகாப்புக் குழுவின் நிர்வாகிகளில் ஒருவரான ரவீந்திரன் கண்ணன்.
தமிழ்நாட்டில் இருந்த மரங்கள், குறுஞ்செடிகள் குறித்து ஒரு தனி அகராதியே எழுதலாம். அவ்வளவு செழிப்பாக இருந்த பூமி இது. உசில் மரங்கள் நிறைஞ்சு இருந்த இடம்தான் உசிலம்பட்டி. இலுப்பை' மரங்கள் நிறைஞ்ச பகுதி இலுப்பையூர், விளாமரம்' இருந்த இடம் விளாத்திகுளம், வாகை'மரங்கள் செழித்த பகுதி வாகைகுளம் இன்னும் ஆலங்குளம், அத்தியூர், அரசம்பட்டி, தாண்டிக்குடி, வேப்பங்குளம், தாழையூத்து இப்படி பல ஊர்ப் பெயர்களில் மரங்கள் இருக்கு. ஆனால் இன்று அந்தந்த ஊர்களின் பெயர் மட்டும்தான் மிஞ்சியுள்ளது அந்த மரங்கள் காணாமல் போய்விட்டன.
இதற்குப்பதிலாக யுகலிப்டஸ் மரம், சீமைக் கருவேல், யூபோடீரியம், தூங்குமூஞ்சி ன்னு விதவிதமா வெளிநாட்டு மரங்கள் இங்கே ஆக்கிரமித்துள்ளன. இந்த மரங்கள் வேகமாக வளரக்கூடயவை,. அதிகளில் நிலத்தடி நீரையும் உறிஞ்சும். இதனால், புல்வெளிகளுக்கு நீர் கிடைக்காம அழிய, அதை நம்பி வாழுற கால்நடைகளும் குறைஞ்சு, உயிர்ச் சுழற்சியே மொத்தமா மாறிப்போனது. பார்த்தீனியம் செடிகள் நீர்நிலைகளையும் அழித்துவிட்டது. இப்படி வளரும் மரங்களில் இருந்து காய்கள், பழங்கள்னு எதுவுமே கிடைக்காது. அதனால் பறவைகளும் இல்லாம போய்விட்டன.
உசில மரம் வறட்சியைத் தாங்கி வளரும். இந்த வெப்ப பூமியில் மனித இனத்துக்கு நல்ல நிழல் தரும். வேங்கை மரம் இன்று மிகவும் அரிதான மரமாகிப்போனது. இந்த மரத்துல ஒரு குவளை செஞ்சு, அதுல தண்ணி ஊத்தி வச்சா, கொஞ்ச நேரத்தில் அது சிவப்பாயிடும். இந்த தண்ணியைக் குடிச்சா சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். ஆயுர்வேத சிகிச்சை க்கு இதைப் பயன்படுத்துகிறார்கள். மருத மரத்தின் பாகங்களிலிருந்து புற்றுநோயைத் தடுக்கும் மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இலுப்பை மரத்திலிருந்து கிடைக்கும் இலுப்பை எண்ணெய், விளக்கு ஏற்றப் பயன்படுத்தப்பட்டது. இடுப்பு வலியைப் போக்கும் மருந்தாகவும் இருக்கிறது.
தோதகத்தி மரத்தில் எந்தப் பொருள் செய்தாலும் அது காலத்துக்கும் அழியாது. குஜராத் மாநிலம் அருகே கடலுக்குள்ளே மூழ்கிப் போன ஒரு நகரத்தை அண்மையில் கண்டுபிடித்தனர். அங்கே தோதகத்தி மரத் துண்டு ஒண்ணு கிடைச்சிருக்கு. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டிலிருந்து அந்த மரங்களைக் கொண்டு போயிருக்கிறார்கள். ஆனால், தற்போது இது அரிதாகி வருவதால் இந்த மரத்தை வெட்டுவதற்கு , தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இது ஒரு புறம் இருக்க, மற்றொரு பக்கம் நமது மண்ணில் இருந்த சுமார் நான்காயிரத்துக்கும் மேல்பட்ட குறுஞ்செடி வகைகள் இருந்தன. இதில், மருத்துவ குணம் கொண்ட துத்தி ன்னு ஒரு செடியும் இருந்தது. இதை பார்த்தீனியம் வளரும் இடத்தில் வைத்தார் அங்கு அந்தச்செடியை வளரவே விடாது. 1988ம் ஆண்டு தொடங்கி இப்படிப்பட்ட அரிதான மரங்களை வளர்த்து, அந்தக் கன்றுகளை மக்களுக்கு விநியோகித்து வருகிறது பழனிமலை பாதுகாப்புக் குழு.
தொடக்கத்தில் அரிதான மரங்கள், மூலிகை மரங்கள்தான் என்று இதை நினைத்தோம். அவற்றின் தாவரவியல் பெயர் சொல்லித்தான் மக்கள்கிட்டேயும் கொடுத்தோம். அப்புறம்தான் இதெல்லாம் நம்ம தமிழ்நாட்டுப் பாரம்பரிய மரங்கள் என தெரியவந்தது. அதனால் இன்னும் இன்னும் நிறைய மரங்களைத் தேடி காடுகளுக்குச்சென்றோம். இன்றைக்கு எங்களது நாற்றங்காலில் 65 வகையான பழமையான அரிதான மர வகைகள் இருக்கின்றன.
புவி வெப்பமயமாதலால் ஏற்படக்கூடிய நேரடியான பிரச்னைகளை இந்தத் தலைமுறையில் நாம் சந்தித்து வருகிறோம். வீட்டுக்கு ஏ.சி -யைப் போட்டு தங்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்க நினைப்பவர்கள் பெருகியுள்ள சூழலில், ஒரு பாரம்பரிய மரத்தை நடுவதால் இந்த பூமியும் குளிர்ச்சியாகும் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். மழை பொழிவை அதிகரித்து , நீர்வளத்தை தக்க வைக்கவும், இந்த பூமியை வளப்படுத்தவும் நம்பிக்கையான நண்பர்கள் இந்த மரங்கள்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது என்றார் ரவீந்திரன் கண்ணன்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2