தமிழ்நாட்டு மக்கள் 'இந்தி' கற்காமல் எதையாவது இழந்து நிற்கிறார்களா? (எக்ஸ்குளுசிவ்)
தமிழ்நாட்டு மக்கள் இந்தி படிக்காமல் விட்டதால் எதையாவது இழந்திருக்கிறார்களா என்பது இந்த செய்தியை படித்தால் தெரிந்துவிடும்.
இந்தியாவில் மீண்டும் இந்தி முக்கியத்துவம் பெறும் பேச்சுக்கள் அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளன. பலர் அதற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தி கற்காமல் விட்டதால் தமிழ்நாட்டு மக்கள் எதையாவது இழந்துள்ளனரா என்று கொஞ்சம் விரிவாகவே இதில் பார்ப்போம்.
தமிழ் :
இந்தியாவில் பல மாநிலங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி பண்பாடு,கலாச்சாரங்கள் உள்ளன. பல மதத்தினரும் உள்ளனர். ஆனால், தமிழகத்தில் மட்டும் 'தமிழ்' தான் முதல் மதம். அனைவரும் 'தமிழ்' என்கிற குடையின் கீழ் இருப்பதை பெருமையாக நினைக்கின்றனர். இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் போன்றவை தமிழுக்கு அடுத்த நிலையில் வருபவை. அந்த சிறப்பு உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே.
தமிழக மக்கள் அவர்கள் பின்பற்றும் மதத்தால் அந்நியப்படுவதில்லை. சிறந்த முஸ்லிம் நண்பர்கள் இல்லாத ஒரு இந்துவை காண முடியாது. அதேபோல ஒவ்வொரு முஸ்லிமுக்கும் சிறந்த இந்து நண்பர்கள்,சிறந்த கிறிஸ்தவ நண்பர்கள் இல்லாமல் இருக்காது. பரஸ்பரம் அவர்கள் தமிழர்கள் என்றே அடையாளப்படுத்தப்படுகிறார்கள். அப்படியான ஒரு சிறந்த பண்பாடு கொண்ட மாநிலத்தை உலகில் வேறு எங்குமே காண முடியாது.
மத அடையாளம் இல்லை :
ஒரு கிறிஸ்தவர், முஸ்லீம் வீட்டு பண்டிகையில் உணவு அருந்துகிறார். அதே போல ஒரு முஸ்லீம், இந்து அல்லது கிறிஸ்தவர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொண்டு மாமன், மச்சான் உறவுகளில் கலக்கின்றனர். இங்கு உறவுகளுக்கு இடையே எந்த ஒப்பந்தங்களும் கிடையாது. மதங்கள் அந்த உறவுகளுக்கு தடை ஏதும் ஏற்படுத்துவதில்லை.
மதச்சார்பின்மைக்கு தமிழகமே முன்னோடி :
இந்திய அரசியலமைப்பில் மதச்சார்பின்மை ஒரு பொதுப்பண்பாக இருக்கிறது. ஆனால், அந்த மதச்சார்பின்மை, அதன் நடைமுறை வெளிப்பாட்டை தமிழ்நாட்டில்தான் காண்கிறது. காரணம் தமிழ் மக்கள் அனைவரையும் இணைக்கும் மொழி தமிழாக இருப்பதால் தான். இந்த ஒற்றுமை, முழு தேசத்திற்கும் வலிமை சேர்ப்பதோடு ஒரு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. தமிழை நேசிப்பதில் இங்கு தடை ஏதும் இல்லை. அது தமிழகத்துக்கு அமைதியையும் அன்பையும் தருகிறது. அதற்காக தமிழக மக்கள் தேசபக்தி இல்லாதவர்களும் அல்ல. அது தமிழக மக்களின் ரத்தத்தில் கலந்துள்ளது. 'இந்தியா' நமது தேசம். அதுவே நமது உயிர்மூச்சு.
காமராஜர் :
இனிமேல்தான் 'இந்தி' என்கிற விஷயத்திற்கே வருகிறோம். காமராஜர் பற்றி நமக்குத்தெரியும். அவர்தான் இந்திரா காந்தியை பிரதமர் பதவிக்கு தேர்வு செய்ததில் முக்கியமானவர். அவருக்கு இந்தி தெரியாது. அவர்தான் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக, ஜவஹர்லால் நேருவின் மறைவிற்குப் பிறகு கட்சியை வழிநடத்தியவர். 1964 ம் ஆண்டில் லால் பகதூர் சாஸ்திரி, 1966ம் ஆண்டில் இந்திரா காந்தி ஆகிய இரண்டு பிரதமர்களை ஆட்சிக்குக் கொண்டுவருவதில் அவர் முக்கிய பங்கு வகித்தவர். அதனால் அவர் 'கிங் மேக்கர்' என்று கூட அழைக்கப்பட்டார். படிக்காத மேதை. இந்தி தெரியாமல்தான் நாட்டையே வழிநடத்தி பிரதர்மகளை உருவாக்கியவர்.
தமிழில் பேசிய கலாம் :
மக்களின் குடியரசுத்தலைவர் என்று அழைக்கப்பட்ட அப்துல் கலாம், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பேசும்போது தமிழ் மொழியில் பேசினார். அவருக்கு ஆங்கிலம் தெரியாமலா தமிழில் பேசினார்? அவர் இந்தியராக இருந்தபோதும் ஒரு தமிழராக தமிழில் பேசினார்.
'தமிழ் மீடியம்' மயில்சாமி அண்ணாதுரை :
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) சந்திரயான் மற்றும் மங்கல்யான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரையும் எல்லோரும் அறிந்த தமிழ்நாட்டுக்காரர். அவருக்கு முறையாக இந்தி பேசத் தெரியாது. ஆனாலும் உலகையே இந்தியாவின் பக்கம் திரும்ப வைத்தவர். அவரை தமிழ் தடுக்கவில்லை. இத்தனைக்கும் அவர் ஒரு தமிழ் மீடியம் மாணவர்.
ஏ.ஆர் ரஹ்மான்:
ஏ.ஆர் ரஹ்மான் என்பவரைத் தெரியாதவர் யாருமில்லை. அவருக்கும் இந்தி மொழிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆனால், அவரது இசை ஆர்வமே அவரை பல்வேறு மொழிகளைக் கற்க வைத்தது. எத்தனை மொழிகள் தெரிந்தாலும், இரண்டு ஆஸ்கார் விருதுகளை கையில் வாங்கிக்கொண்டு தமிழில்தான் பேசினார்.
பல மொழிகள் சேர்ந்த 'இந்தியா' :
அதனால், ஒரு மொழி மட்டுமே இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி விடாது. இந்தியா நூற்றுக்கணக்கான எழுத்து மற்றும் பேசு மொழிகளின் கலவையான ஒரு ஆகச்சிறந்த நாடு. ஒரு மொழி அழிந்தாலும் கூட நிச்சயமாக இந்தியா முழுமையற்றதாகிவிடும். ஒரு மொழியை நேசிப்பது என்பது அது மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவதைவிட ஒன்றுபடுத்தவேண்டும். அதுவே ஒரு தேசத்திற்கான செழுமையையும், பெருமையையும் சேர்க்கும்.