தமிழகத்தில் போதைப்பொருளை ஒழிக்க என்ன தான் வழி..?

போலீஸ் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதும், சுதந்திரமாக செயல்பட விடுவதும் போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிக்கும்.

Update: 2024-03-12 06:05 GMT

தமிழ்நாடு போலீஸ் (கோப்பு படம்)

தமிழ்நாட்டில் போதைப்பொருள்களை ஒழிக்கும் விஷயம் குறித்து தமிழகத்தில் போலீசாருடன் மிகவும் நெருக்கமாக பழகி செய்திகளை எழுதி வரும் ஒட்டுமொத்த பத்திரிக்கை நிருபர்கள், டிஜிட்டல் மீடியா நிருபர்கள், விஷூவல் மீடியா நிருபர்கள் என அத்தனை பேருக்கும் நன்றாக தெரியும்.

தவிர அரசியல், சமூக நிகழ்வுகளை பற்றி அறிந்த அத்தனை பேருக்கும் இது நன்றாகத்  தெரியும். போலீசார் போதைப்பொருள் விஷயத்தில் தடுமாற்றத்தை சந்திக்க முக்கிய காரணம் போலீஸ் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள்.  இதனால் ஏற்பட்டுள்ள அதீத பணிச்சுமை மற்றும் அரசியல் தலையீடு.

இது மூன்றும் மறுக்க முடியாத உண்மை. தமிழகத்தின் போலீசார் நிச்சயம் திறமை வாய்ந்தவர்கள். அவர்கள் நினைத்தால் ஓரிரு நாட்களில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுத்து நிறுத்தி விடுவார்கள். போலீஸ் துறையுடன் நெருங்கி பழகும் அத்தனை பேருக்கும் இது நன்றாக தெரியும். ஆனால் ஏன் அப்படி நடக்கவில்லை? அரசியல் தலையீடு தான் இதற்கு முக்கிய காரணம். இதற்கு குறிப்பிட்ட ஒரு கட்சியை மட்டும் குறைசொல்வதில் பயனில்லை. தமிழகத்தைச் சேர்ந்த எல்லா கட்சிகளுக்கும் இது பொருந்தும்.

இப்போதைய சூழலில் அதாவது தி.மு.க., ஆட்சியில் போலீஸ் துறையில் அரசியல் தலையீடு என்பது இதற்கு முன்பு இருந்ததை விட சற்று அதிகமாக உள்ளது. ஆனால் போலீசை மிரட்டாத, அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்த தவறுகளை பெரும்பாலும் எல்லா கட்சிகளும் செய்துள்ளன.

இதனால் தான் போலீசார் தங்களால் முடிந்த அளவு செயல்படுகின்றனர். அவர்களை மட்டும் முழுமையாக சுதந்திரமாக செயல்பட விட்டால் போதைப்பொருள் நடமாட்டத்தை மட்டுமின்றி, தமிழகத்தில் நடக்கும் அத்தனை சட்ட விரோத நிகழ்வுகளையும் தடுத்து விடுவார்கள் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இப்போது  லோக்சபா தேர்தல் காலம், போலீஸ் துறையில் காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்புவோம், தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் போலீஸ் துறையில் பணியிடங்களை அதிகரிப்போம், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப போலீஸ் துறையினை நவீனப்படுத்துவோம், போலீஸ் துறையை சுந்திரமாக செயல்பட அனுமதிப்போம் என அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களது தேர்தல் உறுதிமொழியாக வழங்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News