வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை

வட அமெரிக்க நாடுகளில் அதிகளவில் காணப்படும் வெஸ்ட் நைல் வைரஸ், கொசுக்களின் மூலமாக மனிதர்களுக்கு பரவுகிறது.

Update: 2024-05-15 03:33 GMT

நைல் காய்ச்சலை பரப்பும் கொசு - கோப்புப்படம்

வெஸ்ட் நைல் வைரஸ் பொதுவாக பறவைகளின் உடலில் காணப்படும். அப்பறவைகளை கொசுக்கள் கடிக்கும் போது அவற்றின் உடலில் இருந்து கொசுக்களின் உடலுக்கு வைரஸ் பரவுகிறது. அந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ‘கியூலக்ஸ்’ வகை கொசுக்கள் மனிதரைக் கடிக்கும் போது, வெஸ்ட் நைல் வைரஸ் மனிதா்களுக்குப் பரவுகிறது.

ஏற்கெனவே கடந்த 2019-ஆம் ஆண்டு கேரளத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பால் ஒருவா் உயிரிழந்தார். இப்போது மீண்டும் வெஸ்ட் நைல் வைரஸ் தற்போது கேரளத்தில் வேகமாக பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. அண்மையில் கேரளத்தின் கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர் மாவட்டங்களில் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, வெஸ்ட் நைல் வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கேரள சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.

அண்டை மாநிலமான கேரளத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இந்நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாநில சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.

கேரளத்தில் பரவும் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு தொடர்பாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை தரப்பில் மக்களுக்கு கீழ்காணும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

  • வெஸ்ட் நைல் வைரஸ் என்பது க்யூலக்ஸ் வகை கொசுக்களால் பரவக் கூடியது.
  • இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் மக்களில் 80% பேருக்கு அறிகுறிகள் காணப்படுவது இல்லை.
  • காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல்வலி போன்றவை வெஸ்ட் நைல் காய்ச்சலின் அறிகுறிகளாகும்.
  • ஒரு சிலருக்கு அதிக காய்ச்சல், கழுத்து விரைப்பு, மயக்கம், கோமா, பலவீனம், பக்கவாதம், மூளைக் காய்ச்சல் ஏற்படலாம்.
  • மூளைக் காய்ச்சல் போன்ற பாதிப்பு இருப்பின் கட்டாயம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

எலைசா மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் மூலம் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு இருப்பதை கண்டறியலாம். அதிக காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல்வலி, கழுத்து விரைப்பு, மயக்கம், பலவீனம், பக்கவாதம் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் கட்டாயம் வெஸ்ட் நைல் காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News