மதுரைக்கு வாங்க..! மத்தியான சாப்பாடு சாப்பிட்டு வரலாம்..!
மதுரை மாநகருக்கு மதியம் சாப்பிட வருபவர்களுக்கு விதவிதமான உணவுகள் காத்திருக்கிறது.;
மதுரைக்கு ஜவுளி வாங்க வருபவர்கள், நகைக்கடைக்கு வருபவர்கள், கல்யாண சேலை முதல் சீர்வரிசை வாங்க வருபவர்கள் என்று நகரத்திற்கு சுற்றுப்பட்டில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் வந்தபடி இருப்பார்கள். இப்படி வாடிக்கையாக மதுரைக்கு வருபவர்களுக்கு எல்லா கடைகளையும் போலவே வாடிக்கையான சாப்பாட்டுக் கடைகளும் உண்டு.
அம்ச வல்லி பவன், சரஸ்வதி மெஸ், சாரதா மெஸ், ஜெயவிலாஸ் சாப்பாட்டு க்ளப், அருளானந்தம் சாப்பாட்டு க்ளப், இந்தோ- சிலோன் ஹோட்டல், தாஜ் ஹோட்டல், அம்மா மெஸ், குமார் மெஸ், ஜானகிராமன் ஹோட்டல், செட்டிநாடு மெஸ், ஸ்ரீராம் மெஸ், கணேஷ் மெஸ், பனைமரத்து கடை என இந்த கடைகள் அனைத்திற்குமே பெரும் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். கால மாற்றத்தில் இந்த பட்டியலில் இன்று பல ஹரீஸ் மெஸ், சத்யா மெஸ் என புதிய கடைகள் இணைந்து கொண்டன.
மதுரையில் மதிய சாப்பாட்டிற்கு மீன், கோழி, பீஃப், முயல், காடை, புறா, வகைகள் கிடைத்தாலும். மீன்களில் ஐயிரை மீன் குழம்பு தவிர்த்து மதுரை என்றாலே அது ஆட்டிறைச்சி தான். ஆட்டிறைச்சியின் தலைநகரம் மதுரை. மிளகு சுக்கா, எண்ணெய் சுக்கா, மட்டன் சுக்கா, ஈரல், சுவரொட்டி, குடல் குழம்பு, குடல் ரோஸ்ட், தலைக்கறி, எலும்பு ரோஸ்ட், காடி சாப்ஸ், சங்கு, சிலிப்பி, நெஞ்சு எலும்பு, நுரையீரல், முட்டை கறி, கைமா கறி, , கண் முழி, சங்கு, கோலா உருண்டை என இந்த பட்டியலில் 48 ஐட்டங்கள் உங்களுக்காக மதுரையில் காத்திருக்கும்.
வருபவர்கள் வயிறார சாப்பிட்டு விட்டு திருப்தியாக வீடு திரும்பலாம். விலையும் பிற நகரங்களை ஒப்பிடும் போது மதுரையில் சற்று குறைவு தான். ஆனால் சுவையும், தரமும் எப்போதும் குறைந்ததில்லை.
நன்றி: அ. முத்துக்கிருஷ்ணன்