நீங்களும் அத்துமீறினால் நாங்களும் அத்துமீறுவோம் : 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை
முல்லை பெரியாறு அணையில் நீங்கள் அத்துமீறினால் நாங்களும் அத்துமீறுவோம் என 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முல்லை பெரியாறு அணையில் எந்த வித அரசியல், நிர்வாக கட்டமைப்பின் தீர்ப்புகளையும் மதிக்காமல் கேரளா அத்துமீறினால் அதே பாணியில் நாங்களும் அத்துமீறுவோம் என ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பகிரங்கமாக எச்சரித்துள்ளனர்.
ஐந்த மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
ராமனாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட பாசனத்திற்கும், குடிநீருக்காகவும் மட்டுமே முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டது. இந்த நோக்கத்தை கேரளா மீறி செயல்படுகிறது. அணை கட்டியது முழுக்க தமிழர்கள் மட்டுமே. அணை நீர் தேக்கப்பகுதி, நீர் வரத்து பகுதி முழுக்க தமிழகத்திற்கு சொந்தமானது. இந்த உரிமைகளையும் கேரளா மீறுகிறது.
மத்திய, மாநில அரசுகள் நியமித்த பல்வேறு உயர் மட்ட நிபுணர்களின் குழுக்கள் முல்லை பெரியாறு அணையினை ஆய்வு செய்துள்ளனர். அவர்கள் அணை மிகவும் பலமாக உள்ளது என கேரள, தமிழக அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும், சுப்ரீம்கோர்ட்டிற்கும் அறிக்கை தாக்கல் செய்கின்றனர். இதனையும் கேரளா மீறி செயல்படுகிறது. சுப்ரீம்கோர்ட் உத்தரவுப்படி அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த விடாமல் கேரளா அத்துமீறி செயல்படுகிறது.
தமிழக- கேரள அரசுகளின் ஒப்பந்தப்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி பேபி அணையினை பலப்படுத்த விடாமல் கேரளா அத்துமீறி செயல்படுகிறது. இப்படி இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், ஒற்றுமைக்கும், நிர்வாக கட்டமைப்பிற்கும், அரசியல் நிர்வாக நடைமுறைகளுக்கும் கட்டுப்படாமல் அத்துமீறும் உரிமை கேரளாவிற்கு இருந்தால், அதே உரிமை தமிழர்களுக்கும் உண்டு என்பதை மறந்து விடக்கூடாது.
நீங்கள் அத்துமீறிய அத்தனை விஷயங்களிலும் இனிமேல் நாங்களும் அத்துமீறுவோம். வாழ்வியல் ஆதாரங்களில் 70 சதவீதத்திற்கும் மேல் தமிழகத்தை நம்பி உள்ள கேரளா, தமிழர்களுக்கு துரோகம் செய்ய முற்படும் போது, நாங்கள் ஏன் அந்த துரோகத்தை அனுபவிக்க வேண்டும்? நாங்கள் கேரளாவின் துரோகத்தை நிராகரிப்போம். அதேபாணியில் நாங்களும் அத்துமீறுவோம். எங்களின் முதல் அத்துமீறல் எதுவாக இருக்கும் தெரியுமா?
கேரளாவோடு நாங்கள் சகோதரர்களாக வாழ நினைக்கிறோம். உலகளாவிய சிந்தனை உடையவர்கள் தமிழர்கள். ஆனால் கேரளாவின் செயல்பாடுகள் எங்களுக்கு ஜீவாதாரமாக விளங்கும் தண்ணீர் பிரச்னையில் தலையிடுவதாக உள்ளது. அதனால் நாங்களும் சில முன் நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எங்கள் நடவடிக்கைகள் அவர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும
அதனால், மொழிவாரி மாநிலங்களின் பிரிவினையினை நாங்கள் முதன் முறையாக அத்துமீறுவோம். எங்கள் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பீர்மேடு, தேவிகுளம், உடும்பஞ்சோலை தாலுகாக்களையும், ஒட்டுமொத்த இடுக்கி மாவட்டத்தையும் மீண்டும் தமிழகத்துடன் இணைக்க போராடுவோம். அப்படி நடந்தால் முல்லை பெரியாறு தானாக மீண்டும் எங்களுக்கு கிடைத்து விடுமே. அத்துமீறுவது உரிமை என கேரளா நம்புமானால் எங்களின் முதல் அத்துமீறல் மொழிவாரி மாநில பிரிவினைகளை புறந்தள்ளி, எங்கள் பகுதிகளை எங்களுடன் இணைப்பதாக இருக்கும். இது வெறும் எச்சரிக்கை இல்லை. எங்களின் முதலாவது செயல்திட்டம். இவ்வாறு கூறியுள்ளனர்.