இன்று முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

மகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-10-12 04:10 GMT

சுந்தர மகாலிங்கம் 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு அகஸ்தியர் உட்பட 18 சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.

திசைக்கு நான்கு மலைகள் என்று பதினாறு மலைகள் சமமாகவும், சதுரமாகவும் அமைந்திருப்பதால் இதற்கு சதுரகிரி என்று பெயர் வந்தது. இந்த மலையானது மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு மலை. இங்கு அமைந்திருக்கும் கோயிலை தரிசிப்பதற்காக பக்தர்கள் திரளாக வருகின்றனர்.

பெரும்பாலான பக்தர்கள் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை சித்ரா பௌணர்மி, சிவராத்திரி, மார்கழி மாதப்பிறப்பு ஆகிய நாள்களில் அதிகமாக வருகின்றனர். மூலிகைகள் நிறைந்த மலைக் குன்று ஒன்றும் உள்ளது. அதற்கு சஞ்சீவி மலை என்று பெயர். மேலும் சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்களுக்கும் கோயில் உள்ளது.

பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலுக்கு பக்தர்கள் செல்ல மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

வருகிற 14ம் தேதி மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று (12-ந்தேதி) முதல் வருகிற 15ம் தேதி வரை சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், 10 வயது உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது. இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.

அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால் மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்படும் எனவும் வனத்துறை தெரிவித்து உள்ளது.

மகாளய அமாவாசைக்கு இம்முறை சதுரகிரிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகமும், வனத் துறையினரும் அடிப்படை வசதிகளை செய்து வருகின்றனர். மேலும் மதுரை, விருதுநகர், திருமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கூடுதலாக சதுரகிரிக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Tags:    

Similar News