விருதுநகரில் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ், தேமுதிக, பாஜக
தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகம் முழுவதும் மார்ச் 20ஆம் தேதி துவங்கியது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 4வது நாளாக இன்று (மார்ச் 25) காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
இந்த நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில், திமுக சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர், அதிமுக சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் மற்றும் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மாணிக்கம் தாகூர் தன்னுடைய வேட்புமனுவைத் தேர்தல் நடத்தும் அலுவலரும் விருதுநகர் மாவட்ட ஆட்சியருமான ஜெயசீலனிடம் தாக்கல் செய்தார். அதன் பின்னர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தேர்தல் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
மாணிக்கம் தாகூரைத் தொடர்ந்து, அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக கட்சி சார்பில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விஜய் பிரபாகரன் தன்னுடைய வேட்புமனுவைத் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலனிடம் தாக்கல் செய்த பின்னர் , தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பாக தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தேர்தல் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். மேலும், விஜய பிரபாகரன் வேட்புமனு தாக்கலின் போது அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் மற்றும் தேமுதிக வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கலைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தின் தேர்தல் நடத்தும் அலுவலரான ஜெயசீலனிடம், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக கட்சி சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் தன்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதன் தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பாக ராதிகா சரத்குமார் தேர்தல் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
ராதிகா சரத்குமார் வேட்புமனு தாக்கலின் போது அவருடைய கணவர் சரத்குமார் மற்றும் விருதுநகர் மாவட்ட பாஜகவின் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் உள்ளிட்ட சில கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.