தொழில் போட்டியால் மெத்தனாலை கலந்து விற்றுள்ளனர்: விசாரணையில் திடுக் தகவல்
மரக்காணம் சாராய உயிரிழப்பு சம்பவத்தில், தொழில் போட்டியால் மெத்தனாலை கலந்து விற்றது சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் தெரியவந்துள்ளது
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சாராய வியாபாரிகள் அமரன், முத்து, புதுச்சேரியை சேர்ந்த பர்கத்துல்லா, ஏழுமலை, சென்னை இளைய நம்பி உள்பட 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இவர்களை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோமதி தலைமையிலான சி.பி.சி.ஐ.டி.யினர் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
விசாரணையில் சென்னையை சேர்ந்த கெமிக்கல் தொழிற்சாலை மூடப்பட்டதால் தொழிற்சாலை அதிபரான இளைய நம்பி, அவரிடம் தேங்கி இருந்த மெத்தனால் என்ற விஷத் தன்மை வாய்ந்த வேதிப் பொருளை புதுச்சேரியை சேர்ந்த சாராய வியாபாரியான ஏழுமலையிடம் விற்பனைக்கு அனுப்பி உள்ளார்.
6 பேரல் மெத்தனாலை வாங்கிய ஏழுமலை புதுச்சேரியை சேர்ந்த பர்கத்துல்லா மூலம் மரக்காணம் சாராய வியாபாரிகளான அமரன், முத்து உள்ளிட்டோருக்கு குறைந்த விலைக்கு 200 லிட்டர் விற்றுள்ளார்.
வழக்கமாக புதுச்சேரி சாராயத்தை வாங்கி பாக்கெட் செய்து விற்று வரும் மரக்காணம் சாராய வியாபாரிகள், போட்டி காரணமாக சாராயத்துடன் மெத்தனால் சேர்த்தால் அதிக போதை தரும் என்பதால், கடந்த 13-ம் தேதி மாலை மெத்தனால் கலந்த சாராயத்தை விற்பனை செய்துள்ளனர். இதனால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
6 பேரல்களில், 2 பேரல் விற்பனை செய்யப்பட்ட நிலையில் 4 பேரல் மெத்தனாலை மீண்டும் சென்னைக்கு அனுப்பி உள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 12-வது நபரான மதனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் சி.பி.சி.ஐ.டி விசாரணை முடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.