மழையால் பரிதவிக்கும் விஜய் கட்சி மாநாடு..!
மாநாடு நடக்கும் அன்று மழை பெய்யாமல் இருக்க தவெக சார்பில் யாகம் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் அக்.27-ம் தேதி நடைபெற உள்ளது. 85 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில், மாநாட்டுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தவெக மாநாட்டு பணி 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. செயின்ட் ஜார்ஜ் கோட்டை முகப்பு போன்று முன்பக்கம் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 75 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டு மேடை 60 அடிஅகலம், 170 அடி நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது உள்அலங்கரிப்பு பணி நடைபெறுகிறது. திடலில் பார்வையாளர்கள் அமரும் இடங்களில், பகல்போல் ஜொலிக்க திடல் முழுவதும் 15 ஆயிரம் ஹை மாஸ் விளக்குகள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது
தற்போது மாநாட்டுத் திடலுக்குள் யாரும் வர முடியாதபடி, பவுன்சர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மாநாடு நடைபெறும் பகுதிக்கு அருகாமையில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல முற்பட்ட விவசாயிகளையும் பவுன்சர்கள் தடுத்தி நிறுத்தியுள்ளனர்.
மாநாடு வளாகத்தைச் சுற்றிலும் 20 ஆயிரம் மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாநாடு பந்தலில் சுமார் 75 ஆயிரம் இருக்கைகள்போடப்பட உள்ளன. தொண்டர்களுக்கு மாநாட்டுதிடலில் உணவு வழங்க திட்டமிட்டப்பட்டிருந்தது. ஆனால், கூட்ட நெரிசல் ஏற்படும் எனக்கருதி, மாநாட்டுக்கு வரும் வாகனங்களிலேயே உணவு வழங்க திட்டமிட்டுள்ளனர்.
மழை வராமல் தடுக்க யாகம்: இதற்கிடையே, மாநாடு நடைபெறும் நாளன்று மழை பெய்யாமல் இருக்க நேற்று முன்தினம் அதிகாலை தவெக சார்பில் யாகம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. பலரும் மாநாடு நடக்கும் போது மழை பெய்வது நல்ல சகுனம் தானே. அதனை ஏன் விரும்ப மறுக்கின்றனர். மழை பெய்யட்டும் என மக்களும், விஜய் ரசிகர்களும் கூறுகின்றனர். எவ்வளவு மழை பெய்தாலும், விஜய் ரசிகர்களை தடுத்து நிறுத்த முடியாது. மாநாட்டில் பங்கேற்க அவர்கள் திரண்டு வருவார்கள் என்பதை நிரூபிக்க மழை ஒரு வாய்ப்பு தானே. மழை பெய்யட்டும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.