இரவுப் பள்ளிகள் இப்போது தேவையா என்ற கேள்விக்கு விஜய் ரசிகர்கள் பதிலடி
நடிகர் விஜய் இரவுப் பள்ளிகள் தொடங்குவதாக அறிவித்து உள்ளது குறித்து பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களுக்கு விஜய் ரசிகர்கள் பதிலடி;
கல்வி அறிவு இல்லாத, பள்ளிகள் இல்லாத காலம். அண்ணா காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகக் கிளைகள் தோறும் நூலகங்களாகத் திகழ்ந்தன. இரவு நேரப் பள்ளிகளாகவும் இயங்கி வந்தன. பகலில் வேலைக்குப் போய்விட்டு வந்த மக்கள் படித்தார்கள். இதெல்லாம், 1960 களில் தமிழ்நாட்டுக்குத் தேவையாக இருந்தது.
இப்போது தடுக்கி விழுந்தால் பள்ளிகள் தான். அதுவும் கூடப் போதாது என்று, தெருவுக்குத் தெரு தனியார் பயிற்சி மையங்கள். ஆயிரக்கணக்கில் கட்டணம் கட்டி, இலட்சக்கணக்கானவர்கள் படிக்கின்றார்கள். இந்தக் காலகட்டத்தில் இரவுப் பள்ளிகளில் யாருக்குப் பாடம் நடத்தப் போகின்றார்கள்? யார் போய்ப் படிக்கப் போகின்றார்கள்?
எவ்வளவு முடியுமோ அத்தனை இடங்களில் தமிழ்நாடு அரசுப் பள்ளிகள் இருக்கின்றன. குறைந்த கட்டணத்தில் படிக்கின்றார்கள். அந்தப் பள்ளிகளுக்குப் போதுமான வசதிகள் செய்து தர முடியாமல் திணறுகின்றார்கள். நடிகர் விஜய் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டும் இருப்பாரா? அல்லது ஒவ்வொரு பாடத்திற்கும் தகுதிவாய்ந்த பேராசிரியர்கள் இருப்பார்களா?
234 தொகுதிகளிலும் அமைப்போம் என்கிறார். அந்தத் தொகுதிகளின் தலைநகரங்களில் அமைப்பாரா? அல்லது கிராமப்புறத்திலா? ஒரு ஊரில் அமைத்தால் போதுமா? எல்லோரும் இரவில் அங்கே வந்து திரும்பிப் போவதற்கு பேருந்து வசதி கிடைக்குமா? எதற்கு இந்த வெட்டி வேலை?விளம்பரத்திற்காக அறிவிப்பு வெளியிடக் கூடாது என கல்வியாளர்கள் நடிகர் விஜய்யின் அறிவிப்பு பற்றி கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
ஆனால் விஜய் ரசிகர்களோ, சார், திட்டம் அறிவித்ததும் ஏன் பதட்டம் அடைகிறீர்கள்? எவ்வளவு தெளிவாக நாங்கள் நடைமுறைப்படுத்துகிறோம் என்று மட்டும் பாருங்கள். அதுவரை விமர்சனங்களை முடக்கி வைத்து பொறுமையாக இருங்கள் என கூறி வருகின்றனர். பார்க்கலாம் அடுத்து என்ன நடக்கிறது என்று? எது எப்படியோ தமிழக தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடு ஏறிக் கொண்டே இருக்கிறது என்பது மட்டும் உண்மை.
ஜப்பான் நாட்டைப் போல, ஓய்வு பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு, வட இந்தியத் தொழிலாளர்களுக்குத் தமிழ் கற்பித்தால் பயன் உண்டு. அல்லது நடிகர் சூர்யா போல கல்வி அறக்கட்டளை அமைத்து, படிக்க வழி இல்லாத ஏழைக்குழந்தைகளுக்குக் கல்விக் கட்டணம் கட்டலாம், புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கலாம். விளம்பரத்திற்காக எதையும் செய்யக்கூடாது என சமூக ஆர்வலர்கள் மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளனர்.
அசராத விஜய் ரசிகர்கள், நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பது தெரியாமலேயே இப்படி பதட்டப்பட காரணம் என்ன. எங்களை கண்டு பயப்படாதீர்கள். நாங்கள் சமூகத்திற்கு சிறப்பான ஒன்றை வழங்கப்போகிறோம் ‘வெயிட் அன் சீ’ என கமெண்ட் செய்து வருகின்றனர். நல்லதை யார் செஞ்சா என்னங்க..? வாழ்த்துவோம்.