வேலூர்-ஆற்காடு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்.

வேலூர்-ஆற்காடு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்.

Update: 2021-06-14 10:30 GMT

சிஎம்சி மருத்துவமனைக்கு பிறமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து காரில் வருபவர்கள் அவற்றை சாலையோரம் நிறுத்தி செல்கின்றனர்

வேலூர் மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள முக்கிய சாலைகளில் வேலூர்-ஆற்காடு சாலையும் ஒன்று. இந்த சாலையில் உள்ள தனியார் (சி.எம்.சி.) மருத்துவமனையில் சிகிச்சை பெற பிறமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான நபர்கள் வருகிறார்கள். அதன்காரணமாக ஆற்சாடு சாலையில் மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் மருத்துவமனைக்கு நோயாளிகள் வரும் ஆம்புலன்ஸ், ஆட்டோ, கார் என்று வாகன போக்குவரத்தால் பரபரப்பாக காணப்படும்.

எனவே அந்த பகுதியில் உள்ள சிக்னலில் இருந்து மருத்துவமனையின் நுழைவு வாயில் வரை இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்த போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் இங்கு வாகனங்கள் நிறுத்தக்கூடாது என்று அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மாதம் 10-ந் தேதி முதல் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மருந்து கடைகளை தவிர மற்ற கடைகள் மூடப்பட்டன. பஸ், ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டது. மருத்துவ தேவைகளுக்காக இ-பதிவு செய்து பயணிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

இத்தகைய பல்வேறு கட்டுப்பாடு காரணமாக வேலூர்-ஆற்காடு சாலை வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பிறமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து காரில் வந்தவர்கள் அவற்றை சாலையோரம் நிறுத்தி சென்றனர். இதனை போக்குவரத்து போலீசார் பெரிதாக பொருட்படுத்தவில்லை. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வு காரணமாக வழக்கம்போல் இருசக்கர வாகனங்கள் மற்றும் இ-பதிவுடன் ஆட்டோ, கார்கள், வேன் உள்ளிட்டவை இயங்குகின்றன. சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. அதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

முழுஊரடங்கு நேரத்தில் நிறுத்தப்பட்டதை போன்று தற்போதும் ஆற்காடு ரோட்டில் சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக வரிசையாக கார்கள் அணிவகுத்து நிற்கின்றன. குறிப்பாக வெளிமாநில கார்கள் அதிகம் காணப்படுகிறது. தனியார் மருத்துவமனையின் அருகே உள்ள கார் பார்க்கிங்கில் நிறுத்தினால் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதற்காக சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கார்களை நிறுத்தி செல்கிறார்கள். அதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News