வேலூரில் பாதாள சாக்கடை பணிகளால் போக்குவரத்து நெரிசல்
வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல மாதங்களாக பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்ற வருகிறது
வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை கால்வாய்கள் அமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், கோட்டையை அழகுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.
காட்பாடி காந்திநகர், சங்கரன் பாளையம், தொரப்பாடி சத்துவாச்சாரி உள்ளிட்ட பகுதிகளில் பல மாதங்களாக பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்ற வருகிறது. இதனால் பொதுமக்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
காலையில் வீட்டிலிருந்து காரில் புறப்பட்டு செல்பவர்கள், மீண்டும் மாலை வீடு திரும்பும்போது வழியில் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளதால் வாகனங்களை எங்கே நிறுத்தி விட்டு செல்வது என அவதி அடைந்து வருகின்றனர். எனவே இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கலெக்டர் குமார வேல் பாண்டியன் ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டும் அவர்கள் அலட்சியமாகவே செயல்பட்டு வருகின்றனர்.
இதேபோன்று தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் வேலூர் ஆற்காடு சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது. அந்தப் பணிகள்மெத்தனப் போக்கில் நடைபெற்று வருவதால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல மணி நேரம் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும் வாகன ஓட்டிகள் ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயலும் போது அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்படுகிறது. அது மட்டுமின்றி, வாகனங்கள் செல்லும்போது அதிக அளவில் புழுதி கிளம்புவதால் வீடு, கடைகளில் புழுதி படிந்து விடுகிறது.
எனவே பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடியும் வரை ஆற்காடு சாலையில் கனரக வாகனங்களை காவல்துறையினர்அனுமதிக்க கூடாது என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மேலும் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்தனர்.