வேலூர் சிவன் கோவில்களில் தாராபிஷேகம்
அக்னி நட்சத்திரத்தையொட்டி வேலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் தாராபிஷேகம் தொடங்கியது.;
வேலூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் முதல் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக இந்தாண்டில் அதிகபட்சமாக 104.7 டிகிரி வெயில் கடந்த மாதம் 20-ந் தேதி பதிவானது. ஏப்ரல் மாதத்திலேயே 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவானதால் மே மாதத்தில் குறிப்பாக அக்னி நட்சத்திரம் சமயத்தில் மேலும் வெப்பம் அதிகரிக்கும் என்று பொதுமக்கள் அச்சம் அடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருவதால், வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.
இந்நிலையில் கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கி வருகிற 29-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி சிவன் கோவில்களில் தாராபிஷேகம் தொடங்கியது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் தினத்தன்று சிவலிங்கத்தின் மேல் உறிகட்டி அதில் சிறு துளையுடன் கூடிய மண் கலயம் அல்லது பாத்திரத்தை தொங்க விடுவார்கள். அவற்றுக்குள் வெட்டிவேர், விலாமிச்சை வேர், பன்னீர், சந்தனம், கற்பூரம் உள்ளிட்ட பல்வேறு வகையான மூலிகைகள், வாசனை திரவியங்கள் அடங்கிய நீரை ஊற்றுவார்கள்.
நீர்த்துளிகள் பாத்திரத்தின் துளை வழியாக லிங்கத்தின் மேல் நாள்முழுவதும் சொட்டு சொட்டாக விழும்படி செய்வார்கள். மூலிகைகள் அடங்கிய நீர் துளித்துளியாக லிங்கத்தின் மேல் விழுந்து குளிர்ச்சி தரும். லிங்கத்தின் மேல் தொங்கவிடும் பாத்திரமே தாராபிஷேக பாத்திரம் எனப்படுகிறது. தாராபிஷேகம் செய்து சிவலிங்கம் குளிர்விக்கப்படுவதால் மக்களை கோடை வெப்பத்தில் இருந்து காக்கலாம் என்பது ஆன்மிக நம்பிக்கையாகும்.
அக்னி நட்சத்திரத்தையொட்டி வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் மூலவருக்கு நேற்று காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தாராபிஷேகம் தொடங்கியது. வெட்டிவேர், பன்னீர் அடங்கிய நீர் தாராபிஷேக பாத்திரத்தில் வைக்கப்பட்டு லிங்கத்தின் மேல் துளித்துளியாய் விழும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை தாராபிஷேகம் நடைபெறும். இதனால் வழக்கமான பூஜை, வழிபாடுகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதேபோன்று வேலூர் தோட்டப்பாளையம் தாராகேஸ்வரர் கோவில், பேரிபேட்டை மற்றும் மேல்மொணவூர் காசிவிஸ்வநாதர் கோவில், விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோவில், திருவலம் வில்வநாதீஸ்வரர் கோவில், குடியாத்தம் பாலசாதுர்லீஸ்வரர் கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் தாராபிஷேகம் தொடங்கியது.
அக்னி நட்சத்திரம் நிறைவடையும் நாளான 29-ந்தேதி சிவன் கோவில்களில் சிறப்பு யாகம் நடைபெற உள்ளது.